வடக்கு – கிழக்கு சமூக அக்கறையுடைய இளைஞர்களிடையேயும் அரசியல் விமர்சகர்களிடையேயும் பொதுக்கட்டமைப்பு ஒன்றின் தேவை பற்றிய விடயங்கள் ஆழமான பேசுபொருளாக மாறி வருகின்ற இந்த நிலையில் தேசம் நெற் இன் இந்தக்கட்டுரை பொதுக்கட்டமைப்பின் தேவை பற்றியும் அதன் செயல் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுகின்றது.
முதலில் இந்த பொதுக்கட்டமைப்பு ஏன் தேவை..? என்பது பற்றி நோக்குதல் அவசியமாகின்றது.
இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கு மிக அவசியம் ஏற்பட்ட பின்னணியில் இலங்கை வாழ் தமிழ் மக்களை இணைக்ககூடிய ஒரு மையப்புள்ளியாக ஒரு பொது அமைப்பு ஒன்றின் தேவை அதிகமாக கடந்த காலங்களில் உணரப்பட்டமையேயாகும். உலகின் ஒவ்வொரு அடக்கப்பட்ட சமூகங்களிலும் அரசியல் சார்ந்த அமைப்புக்களே அரசிற்கும் அடக்கப்பட்ட சமூகங்களுக்குமிடையான தொடர்பாளராக செயற்பட்டு, மக்களினுடைய உரிமைகளை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியோராக காணப்படல் வேண்டும். ஆனால் இலங்கை தமிழர் அரசியலை பொறுத்த வரை அப்படியான ஒரு அமைப்பு இல்லை என்பதே உண்மை. தமிழர் மத்தியில் பல அமைப்புக்கள் அரசியல் சார்ந்து உருவாகியுள்ளமையால் மக்கள் எந்த அமைப்பின் பக்கம் நிற்பது என்ற குழப்பமான ஒரு சூழலே நிலவுகின்றது. கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஓரளவேனும் பலமான ஒரு அமைப்பாக காணப்பட்டமையால் மக்களுடைய வாக்குகள் முதல் ஆதரவு என அனைத்துமே அதனை மையப்படுத்தியதாக காணப்பட்டடது. எனினும் கூட்டமைப்பு தன்னுடைய அரசியலை மக்கள் நலன்சார்ந்து பெரியளவிற்கு நகர்த்தியிராத நிலையில் மக்கள் மாற்று அணிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றில் தமிழரின் வாக்கு பலத்தை சிதைத்துள்ளதுடன் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமலேயே ஒரு கட்சி பெரும்பான்மையுடன் அரசமைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தை நாம் சிந்தித்தித்து பார்க்க வேண்டியோராகவுள்ளோம்.
தமிழ் மக்கள் பேரவையுடைய தோல்வியும் கூட பொதுக்கட்டமைப்புக்கான வெளி ஒன்றினை உருவாக்கியுள்ளது. முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து வடக்கு – கிழக்கின் புத்தி ஜீவிகளையும் இளைஞர்களையும் இணைத்து பாரிய கொள்கைப் பிரகடனங்களோடு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பானது தன்னுடைய அரசியலுக்காக மக்களுடைய எதிர்பார்ப்பை சிதைத்து எஞ்சி நின்ற நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியது. இது பொதுக்கட்டமைப்பு பற்றி அதிக இளைஞர்கள் சிந்திக்க பயப்படுகின்ற ஒரு சூழலையும் உருவாக்கி விட்டது. இந்த நிலையிலேயே பொதுக்கட்டமைப்பு பற்றி சிந்திக்க வேண்டியோராக நாமுள்ளோம்.
தமிழர் சமூகத்தினுடைய பின்தங்கிய நிலையை அடிப்படையில் இருந்து கட்டமைக்க பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது. கல்வி சார்ந்து தமிழர் சமூகம் அடக்கப்பட்டமை கூட கடந்தகால போராட்டங்களுக்கான மையமாகும். உண்மையிலேயே அந்த அடக்கு முறையில் நாம் தோற்றுப்போய் பெரும்பான்மை சமூகம் வென்றுவிட்டது என்பதே உண்மை. நம்முடைய தமிழர் சமூக கல்வி நிலை அண்மைக்காலங்களில் அதிகம் பின்தங்கியுள்ளது. மாணவர்களிடம் கல்விக்கு தடையாக போதைப் பொருள்பாவனை, வறுமை , சமூக ஏற்றத்தாழ்வுகள் என பல காரணங்கள் துணை போகின்ற நிலையில் ஆக்கபூர்வமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்புவது தொடர்பாக கவனம் செலுத்தக்கூடிய பொது அமைப்பு ஒன்று இன்றியமையாததாகிறது.
அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்காக பிரச்சினைகள் ஏற்படும் போது எதிர்வினையாற்றக் கூடியோராகவோ..? அல்லது மக்களுடைய மனதை புரிந்து கொண்டோராகவோ..? இல்லை. மக்களுடைய நிலையை புரிந்து அதனை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அரசியல் தலைவர்கள் இல்லை. நம்முடைய அரசியல் தலைவர்கள் தங்களுள் சண்டையிட்டு கொள்வதிலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனரே தவிர மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனமும் கூட. இந்த நிலையிலேயே மக்களுக்கான அரசியல் தலைவர்களை உருவாக்கவும் அடையாளம் காட்டவும் இந்த பொதுக்கட்டமைப்பு அவசியமாகிறது.
தமிழர் சமூகங்களிடையே பொருளாதார அபிவிருத்தியை உருவாக்க அரசியல் தலைமைகள் தவறிய நிலையில் பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்தி ஒரு பொது அமைப்பின் தேவை அவசியமாகின்றது. சொல்லப்போனால் மக்களுடைய வாழ்வை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்வோம் எனக்கூறும் தேர்தல்கால அரசியல்வாதிகளுடைய வாழ்க்கையிலும் வாகனங்களிலும் மட்டுமே அபிவிருத்தி தென்படுகிறதே தவிர வட – கிழக்கில் ஏழை எந்த அபிவிருத்தியும் இல்லாமலே இருக்கின்றான். மேலும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயலாற்றும் அரசியல்வாதிகள் பொருளாதார அபிவிருத்தி என்னும் பெயரில் உள்ள வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிரப்புகின்றனரே தவிர புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவோ, தொழில் முயற்சிகளை தமிழர் பகுதிகளில் உருவாக்கவோ முனைவதாக தெரியவில்லை. இதனாலேயே தமிழர் சமூகம் பொருளாதார நிலையிலும் பின்நிற்க வேண்டியுள்ளது. இந்தநிலையிலேயே தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய அமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது.
இதே வேளை இனம் எனும் போது தமிழர் என நம்மை நாமே குறிப்பிட்டாலும் கூட பிரதேசவாதத்தால் வடக்கு தமிழர், கிழக்கு தமிழர், மலையகத் தமிழர் எனவும் [அதற்குள்ளும் பல உபபிரதேச பிரிவுகள் உள்ளன] சாதிய கட்டமைப்புக்களாலும் சமயரீதியாகவும் பல கூறாக பிரிந்துள்ள தமிழர்களை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய ஒரு பொதுக்கட்டமைப்பு தேவையாக உள்ளது.
விமர்சனங்கள் தாண்டி 2009 க்கு முன்பு வரை மக்களை வழிப்படுத்த காணப்பட்ட ஒரு அமைப்பினுடைய தேவையை இன்று உணரக்கூடியதாக உள்ளது.
இந்தநிலையில் மக்களை வழிப்படுத்தவும் அரசியல் சார்ந்து நம்முடைய கருத்துக்களை ஒரு சேர பதிவு செய்யவும் அரசியலை தீர்மானிக்கூடிய எனினும் அரசியல் பின்னணியற்ற ஒரு அமைப்பினுடைய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இங்கு பொதுக்கட்டமைப்பு என்னும் போது ஆயுதக்கலாச்சாரம் பற்றி சிந்திப்பதல்ல. ஆக்கபூர்வமான நகர்வுகளூடாக நம்முடைய உரிமைகளையும் நிலைப்பையும் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபப்ட்டுள்ள அரசிடம் இருந்து பாதுகாப்பதும் பெற்றுக்கொள்வதும் தமிழர் பகுதிகளின் சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார நிலைகளை மேம்படுத்துவதுமேயாகும்.
பொதுக்கட்டமைப்பின் செயல் பயணம் எப்படி இருக்க வேண்டும்..?
இந்த பொதுக்கட்டமைப்பினுடைய எழுச்சியானது திரையில் நாம் காண்பது போல ஒரு சில உணர்ச்சி பாடல்களுடன் முழுமை பெற மாட்டாது. அது தன்னுடைய தளத்தை ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் இருந்து தொடங்க வேண்டும். கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஆக்கபூர்வமாக சமூகத்துக்காக சிந்திக்க கூடிய சரியான நபர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் மூலமாக அந்த கிராம முன்னேற்ற நடவடிக்கைகளை படிப்படியாக பொதுக்கட்டமைப்பு நகர்த்த வேண்டும். கிராமங்களின் இளைஞர் அமைப்புக்கள் / விளையாட்டுக் கழகங்களை கொண்டு அவர்களுடைய சமூகத்தின் தேவையை அவர்ககளே பொறுப்பெடுக்க கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த பொதுக்கட்டமைப்பு வடக்கு – கிழக்கு – மலையகத்தின் கிராமங்களை மையப்படுத்தியதாக நகர ஆரம்பிக்க வேண்டும். இதுவே அமைப்பினுடைய முனைப்பான வளர்ச்சிக்கான அடிப்படைகளை ஏற்படுத்தும்.
பொதுக்கட்டமைப்பின் நகர்வுகள் ஏழ்மையை மாற்றக் கூடியதாக நகர வேண்டும். புலம்பெயர் தேசங்களிலிருந்து அனுப்பப்படும் பணம் முறையாக எல்லோரிடமும் போய் சேர்வதில்லை. அத்துடன் அந்த பணம் பசியோடு இருப்பவனுக்கு ஒரு வார காலமோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்யுமே தவிர பணம் முடிய அந்த குடும்பத்தின் நிலை…? எனவே புலம்பெயர் அமைப்புக்களுடாக கைமாற்றப்படுகின்ற பணத்தை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பசியோடு இருப்பவனுக்கு நிரந்தமான சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க அந்தப்பணத்தை பயன்படுத்தல் ஆரோக்கியமானது. மேலும் பண்ணைகள் அமைத்தல், தள்ளு வண்டிக்கடைகள் ஏற்படுத்திக்கொடுத்தல், தொழில் உபகரண வசதிகளை வழங்குதல், இப்படியாக பொருளாதார மாற்றங்களை அடிப்படையில் இருந்து ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையாளர்களை உருவாக்குதும் வறுமை ஒழிப்பின் ஒரு படியே..!
இவ்வளவு பெரிய இழப்புக்களின் பின்னணியில் நம்முடைய கல்விக்கு பெரிய பங்குண்டு. நம்முடைய அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக வளப்படுத்துவது காலத்தின் அதிமுக்கிய தேவையாகவுள்ளது. போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டுக் கலாச்சார மோகம், என அடுத்த தலைமுறை தன்னுடைய கல்வியை நம்கண்முன்னேயே தொலைத்துக்கொண்டு நிற்கின்றது. நெல்சன் மண்டேலா கூறுவது போல ஒரு சமூகம் தன்னை மாற்றிக்கொள்ளவோ அல்லது முன்னேறவோ நினைக்குமிடத்து கல்வி மட்டுமே தெளிவான ஒரு ஆயுதம் என கூறுகின்றார். எனவே எல்லா மாணவர்களுக்கும் சரியான முறையான ஆரோக்கியமான கல்வி கிடைக்க வகை செய்தல் அவசியமாகின்றது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கதைத்தை மீள கட்டியெழுப்பல், நம்முடைய வரலாற்றை ஆரோக்கியமாக கடத்துதல், மாணவர் தொழில்வழிகாட்டல் கருத்தரங்குகளை மேற்கொள்ளல், பாடசாலை மட்டங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வான நிலையை இல்லாதாக்க செயற்படல், மாணவர்களின் கல்விக்கான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல் என பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் மாணவர்களோடு மாணவர்களாகவும் மேற்கொள்கின்ற பட்சத்தில் ஆரோக்கியமான அடுத்ததலைமுறையை உருவாக்க முடியும்.
மிக முக்கியமாக உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு தனித்து ஒரு மாவட்டத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்காது எல்லா பகுதி தமிழர்களையுப் மையப்படுத்தி இயங்குவதே பொதுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவும் இலகுவாக வழி செய்யும். இதை விடுத்து யாழ்ப்பாண பகுதியை மட்டுமே மையப்படுத்தி பொதுக்கட்டமைப்பு நகருமாயின் அது வீண் முயற்சியே..!
ஆக்கபூர்வமான வகையில் எங்களுடைய தேவைகளையும் வலிகளையும் பெரும்பான்மை சமூகத்திடம் முன்வைக்க வேண்டிய பொறுப்பினை பொதுக்கட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள், மாணவர் படுகொலை நிகழ்வுகள் என்பன பற்றிய நிகழ்வுகளை ஆக்கபூர்வமாக எல்லா தரப்பினருக்கும் தெரியப்படுத்தல் வேண்டும். அதாவது எங்களுடைய வலிகளையும் தேவையையும் அதன் நியாயப்பாட்டையும் பெரும்பான்மை சமூகத்துக்கு எடுத்துக்கூற கூடிய ஒரு ஊடகமாக இந்த பொதுக்கட்டமைப்பு செயற்பட வேண்டும்.
இவை தவிர பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புக்கான உதவிகளை வழங்குதல், நுண்நிதி உள்ளிட்ட தொடரும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே பேசுதல், அழிந்து வரும் கலைகளையும் கடந்த கால வரலாறுகளையும் ஆவணப்படுத்துதலும் மீள் ஆக்கப்படுத்தலும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்ற வகையிலாக சமூகப்பபொறுப்புடன் கூடிய ஒரு பொதுக்கட்டமைப்பே இன்றைய காலத்தின் தேவையாகும்.
இந்த வகையிலாக எல்லா பகுதி தமிழர்களையும் ஒரே கோர்வையாக இணைத்துக்கொண்டு செல்லக்கூடியதான நெகிழ்திறன் உள்ள ஒரு அமைப்பாகவும், தமிழர் சமூகத்தின் அடிப்படையில் இருந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களூடாக தன்னுடைய எதிர்கால தூரநோக்குககளையும் இலக்குகளையும் கட்டமைத்து பயணிக்க கூடிய ஒரு அமைப்பாகவும் இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே இந்த அமைப்பினுடைய பயணத்தின் மீது முழுமையான மக்கள் நம்பிக்கையும் திருப்பப்பட்டு அரசியல் சார்பற்ற ஆனால் அரசியலை தீர்மானிக்க கூடிய அமைப்பாக அது வளர்ச்சி கண்டு தமிழ் மக்களுக்கான அமைப்பாக மிளிர முடியும். இந்த அமைப்பினுடைய வெற்றிக்காக எத்தனை வருடங்களும் எடுக்கலாம். ஆனால் அமைப்பினுடைய வெற்றியின் இறுதியில் இந்த பொதுக்கட்டமைப்பு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையின் அளவே மதிப்பீடாக காணப்படும். அந்த மக்கள் நம்பிக்கையே பொதுக்கட்டமைப்பு கைகாட்டும் வழி சரியெனும் நிலைக்கு மக்களை கொண்டு செல்ல அத்தியாவசியமானது.
பொறுத்திருந்து பார்க்கலாம் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை இலங்கைத்தமிழ் இளைஞர்களும் புத்திஜீவிகளும் அரசியாலாளர்களும் எவ்வாறு கையாளப்போகின்றனர் என்று……..!