04

04

உலக சுகாதார அமைப்புடன் தொடரும் அமெரிக்காவின் பகை – கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்துக்கான நிதியிலும் அமெரிக்கா பங்கேற்காது என ட்ரம்ப் அறிவிப்பு !

உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 62 மில்லியன் டாலருக்கு மேல் செலுத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “2020 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய 120 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையில், 62 மில்லியன் டாலருக்கு மேல் வழங்க முடியாது. கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்துக்கான நிதியிலும் அமெரிக்கா பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், சீனாவுடன் கூட்டு சேர்ந்து, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு அளித்துவரும் நிதியையும் நிறுத்தினார். மேலும், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 63 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகள் விடயத்தில் தன்னை சமாதானவானாகவும் சீன தொடர்பான விடயத்தில் தன்னை சண்டைக்காரனாகவும் காட்டி வருகின்ற ஒரு போக்கு தொடர்வதை காணலாம்.

”இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை சாதகமாக்கி கொண்டு பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் “ – முப்படை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் எச்சரிக்கை!

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் கூட நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் எதையும் எதிர்கொள்ளும் திறனுடன் இந்தியா இருப்பதாகவும் முப்படை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு மாநாட்டில் காணொலிக்‍ காட்சி மூலம் உரையாற்றிய முப்படை தலைமை தளபதி திரு. பிபின் ராவத், சீனாவின் அத்துமீறலை இந்தியா தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை சாதகமாக்கி கொண்டு பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒருவேளை இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் கூட நடத்தப்படக் கூடும் என்றும், ஆனால், அதனையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாகவும் திரு. பிபின் ராவத் கூறினார்.

கொரோனா வைரஸ் உயிரிழப்பு மத்தியக் கிழக்கு நாடுகளில் 50,000-த்தை தாண்டியது !

மத்தியக் கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 50,000-ஐத் தாண்டியுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அல்ஜசிரா கூறும்போது, “மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 50,000-ஐக் கடந்துள்ளது. மேலும், போர் நடைபெறும் பகுதிகளான லிபியா, ஏமன், சிரியா நாடுகளில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் குறைவாகவே இருப்பதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் கூடுதலாகக் கூட இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லிபியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால், அங்கு மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானில் அதிகபட்சமாக 22,044 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இராக்கில் 7,356 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

உலகம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கு அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

மசகு எண்ணெய்க் கப்பல் தீ விபத்து: கப்பலின் எண்ணெய்க்கசிவு 25-30 வருடங்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!

அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் தீபற்றிய MT – New Diamond கப்பல் இன்று (04.09.2020) காலை 5 மணியாகும் போது 25 கடல் மைல்கள் கரை நோக்கி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, ´இந்த கப்பல் மூலம் வெளியேறும் எரிப்பொருள் வலய ரீதியாகவும், உலகிலும் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்சினி லஹந்தபுர கூறினார்.

´கிரிந்தையில் இருந்து கிழக்கே உள்ள கடற்பகுதிக்கு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அது உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. குறித்த கப்பலின் எரிபொருள் களஞ்சியசாலையில் சிறிய துளையொன்று ஏற்பட்டாலும் அதனை தடுக்க தயாராவதற்கு காலம் போதாது´ எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை ´எண்ணெய் கசிவு ஏற்பட்டவுடன், அது திடப்படுத்துகிறது. இது கிரீஸாக மாறி நீரில் மிதக்கிறது. ஆந்தளவு இந்த அளவு கிரீஸ் அருகம்பே, நிலாவெளி, வாகரை மற்றும் திருகோணமலை கடற்கரை பகுதிகளை அடையக்கூடும் அவ்வாறுவந்தால் அவற்றை அகற்ற சிறிது காலம் எடுக்கும்´ என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் தர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். அவ்வாறு அகற்றினாலும் எம்மால் சுமார் 60 சதவீதத்தையே அகற்ற முடியும்´ என அவர் கூறினார்.

எனினும் 40 சதவீதத்தை அகற்ற முடியாது. ஒவ்வொரு மணற்கல்லையும் சுத்தம் செய்ய முடியாது. எண்ணெய் அடுக்கு அதன் உண்மை நிலைக்கு திரும்ப 25 அல்லது 30 வருடங்கள் எடுக்கும். ஏன அவர் கூறினார்.

எண்ணெய் மென்மையாய் இருப்பதால் திமிங்கலங்கள், ஆமைகள் போன்ற விலங்குகள் தண்ணீரிலிருந்து மேல் எழும்ப முடியாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.

கப்பலின் மேல்புறத்தில் நீர் மட்டத்திலிருந்து 20 மீட்டர் வரை எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார், வெடிக்கும் நேரத்தில் கப்பலின் கொதிகலனுக்குள் மட்டுமே தீ பரவியது.

இருப்பினும், கப்பலின் கேப்டன் தீயை அணைக்க முயற்சிக்காமல் அந்த பகுதியை மூடியுள்ளார். அந்த நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

பனாமா நாட்டு கொடியுடன் பயணித்த நியூ டயமண்ட் என்ற குறித்த எண்ணை தாங்கி கப்பல் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் பயணித்து கொண்டிருந்த போது கப்பலின் சமயலறையில் உள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து நேற்று (03.09.2020) தீ பிடித்திருந்தது.

23 பேர் அடங்கிய கப்பல் பணியாளர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் கப்பலில் பயணித்த பிலிப்பினிய நாட்டவர் ஒருவர் உயிரழந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருளுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை உறுதிப்பட தெரிவித்துள்ளது.

தீப்பற்றி உள்ள கப்பலின் தற்போதைய நிலையின் அடிப்படையில் இலங்கைக்கு  எவ்வித ஆபத்தும் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில் விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

24 மணி நேரமும் செயற்படக்கூடிய ஒரு கூட்டு நடவடிக்கையின் ஊடாக விபத்திற்குள்ளான கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தொல்லியல் செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் புத்திஜீவிகளை தெரிவு செய்வது கடினமாகவுள்ளது ! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என ஆதங்கத்தினை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லீம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், குறித்த ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், பொருத்தமான இருவரை சிபாரிசு செய்யுமாறு அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

எனினும், இதுவரை குறித்த இருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு காலத்தில் புத்திஜீவிகளினால் நிரம்பியவர்களாக நம்மவர்கள் இருந்தனர். ஆனால், கடந்த காலத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்களின் விவேகமற்ற வீரத்தின் வெளிப்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாக புத்திஜீவிகளுக்கும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால ஆயுதச் செயற்பாடுகளினால் பல புத்திஜீவிகள் விவேகமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது நாட்டில் இருக்கின்றவர்களும் பெரும்பாலும் சமூகம் சார் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறான காரணங்களினால் குறித்த செயலணிக்கு பொருத்தமான தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதநிதிகளை நியமிக்க முடியாமல் இருக்கின்றது.

எனினும் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் விரைவில் இருவர் நியமிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

”எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்” – ஜீவன் தொண்டமான்

” எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04.09.2020) திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மூலம் எனது அமைச்சுக்கு ஆயிரத்து 56 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த நான்கரை வருடங்களில் கடன் அடிப்படையிலேயே மலையகத்தில் வேலைகள் நடந்துள்ளன. அவற்றை மீள செலுத்த வேண்டியுள்ளது.

முதலில் அடிக்கல் நாட்டவேண்டும், கட்டிடத்தை நாமே திறந்து வைக்க வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கில் திட்டங்களை உரிய வகையில் செய்யவில்லை. எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும், பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்.

பிரச்சினைகளை பேசி, பேசி காலத்தை ஓட்டமுடியாது. நீங்கள் பாடசாலை பிரச்சினையை அறிவித்தீர்கள். இன்று தீர்வை வழங்கினோம். மைதானம் தேவையென கூறினீர்கள். இட ஒதுக்கீடு தொடர்பில் கம்பனியுடன் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு மைதானப்பணியும் ஆரம்பமாகும். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளேன்.

அதேவேளை, கல்வி என்பது புத்தக படிப்பு மட்டும் அல்ல, அதனையும் தாண்டி பல விடயங்கள் உள்ளன. விளையாட்டு உட்பட பல் துறைகளில் மாணவர்களால் சாதிக்க முடியும் அதேபோல் அமைதி, அமைதி எனக்கூறி மாணவர்களை முடக்காமல், அவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் வழங்கவேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களை உருவாக்கமுடியும். ” – என்றார் ஜீவன் தொண்டமான்.

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13,540 பேரில் 4,230 பேர் நீக்கம் ! – கிளிநொச்சியில் 950 பேர் மட்டுமே தெரிவு.

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13,540 பேரில் 4,230 பேர் நீக்கப்பட்டு எஞ்சிய தொகையினருக்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 2,261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராக குறைக்கப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது.

வருமானம் குறைந்த ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வடக்கு-கிழக்கு மாகாணத்தினை  தற்சமயத்திற்கு கவனத்தில்கொள்வதில்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 19ம் திகதி மாலை அவசர உத்தரவை பிறப்பித்தது.

க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு-கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம் ஏனைய 7 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு கடந்த 19 ஆம் திகதி மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேநேரம் இந்த எண்ணிக்கையில் ஏனைய 7 மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 7 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா என்ற ஐயம் அப்போது எழுப்பப்பட்டது.

இதேநேரம் வடக்கு-கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தேர்தல் பணிகளையும் பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தன.

இந்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6,626 பேரும் , கிளிநொச்சியில் 2,261 பேரும் , மன்னாரில் 1830 பேரும் , முல்லைத்தீவில் 1565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் 1258 பேரும் என 13,540 பேர் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு கடந்த 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.

இருந்தபோதும் வடக்கு-கிழக்கிற்கு அதிக நியமனம் செல்வதாக தெரிவித்து அனைத்தும் இடை நிறுத்தப்பட்டு தற்போது ஒரு கிராம சேவகர் பிரிவில் 10 பேரிற்கு மட்டுமே என்ற அடிப்படையில் குறித்த எண்ணிக்கை பாதியாக குறைகின்றது.

இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 6626 பேரிற்குப் பதிலாக 4,350 பேருக்கும் , கிளிநொச்சியில் 2,261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராகவும் , மன்னாரில் 1,830 பேரிற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,530 பேரிற்குமே சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முன்னர் 1,565 பேரிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,360 பேர் நியமிக்கப்படவிருப்பதோடு வவுனியாவில் 1,258 பேரும் என முன்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,020 பேரிற்கே அனுமதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு முன்னர் 13 ஆயிரத்து 540 பேர் நியமிக்க அனுமதிக்கப்பட்டபோதும் இந்த தொகையில் 4,230 பேரை நீக்கி 9,210 பேரிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

வடக்கு – கிழக்கிற்கு இடை நிறுத்தினாலும் இந்த நியமனம் கிடைக்கும் எனவும் அரசு எந்த பாராபட்சமும் காட்டாது எனவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கிய டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் குறிப்பிட்டிருந்த நிலையில் , இது இவ்வாறு நடைபெற்றமையானது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியதுடன் அரசு ஒரு தலைப்பட்சமாக நடக்கின்றதோ..? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு ! – சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியன்

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. அதனடிப்படையில் சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, அந்த இடத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சார்பில், ‘பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த இடம் மட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சசிகலாவின் சட்டத்தரணி ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இப்பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை.

ஏனென்றால் அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்த இடம் 2013-2014-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். ஒருவர் பங்குதாரராக சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்?

இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள். அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?

ஒருவர் தான் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ‘ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி’ என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும். வருமான வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு சட்டம் இடம் கொடுக்காது. எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.

நான் சசிகலாவின் வக்கீலாக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறை நோட்டீஸ் நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சசிகலா கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம்.

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின் படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே 43 மாத காலம் சிறைவாசம் முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை ” – ஷோய்ப் அக்தர்

ஷோய்ப் அக்தர் அடிக்கடி இந்திய வீரர்களைப் புகழ்ந்து பேசி வருவது வழக்கம், அதுவும் நட்சத்திர வீரர்கள், செல்வாக்குள்ள வீரர்களை தேர்ந்தெடுத்து புகழ்வார்,  இந்த நிலையில் அவர் விராட் கோலியை புகழ்ந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியை அவர் பெரிய அளவில் புகழ்ந்துள்ளார், காரணம் அதற்குள்ளேயே கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களையும், 80 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் அக்தர் இந்திய வீரர்களை, குறிப்பாக கோலியைப் புகழ்வது குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்தர் பதில் கூறுகையில், “நான் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் புகழக்கூடாது. பாகிஸ்தானில்.. ஏன் உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை.

ஏன் என் மீது கோபப்பட வேண்டும், போய் புள்ளி விவரங்களைப் பார்த்து விட்டு பேசுங்கள், பிறகு என்னை விமர்சியுங்கள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தங்கள் வீரர்களிடத்தில் எதிர்பார்த்தனர், ஆனால் இன்றைய நிலமை தலைகீழாகி விட்டது” என்றார் ஷோயப் அக்தர்.

மேலும் சமீபத்தில் இங்கிலாந்திடம் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றதையும் கடுமையாக ஷோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை. – ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிப்பு !

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு ஏற்றவாறான நடைமுறைச்சாத்தியமான செயற்திட்டமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்காலம் என்ற திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழித்து, அனைத்து மக்களும் பயனடையத்தக்க வகையிலான உயர் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

அதனை முன்னிறுத்தி கொள்கை ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான செயற்திட்டம் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதலீட்டு விரிவாக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த உபகுழுவில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, டளஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, எஸ்.எம்.சந்திரசேன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை மேற்படி உபகுழுவின் செயற்பாடுகளுக்காக இராஜங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, திலும் அமுணுகம, டி.வி.சானக, நாலக கொடஹேவா மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது.