18

18

“இ.தொ.கா. கள்ள மௌனம் காப்பதாக மனோகணேசன் கூறியுள்ள கருத்தானது தவறான புரிதலாகும்” – மனோகணேசன் கருத்துக்கு செந்தில் தொண்டமான் பதில்.

மனோ கணேசன் இ.தொ.கா மீதான தமது தவறான புரிதலை மாற்றிக்கொள்ள வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதிகளாகவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் செயற்படும்“ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு விவகாரத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கள்ள மௌனம் காப்பதாக கூறியுள்ளமை தொடர்பில் விளக்கமளித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இ.தொ.கா. கள்ள மௌனம் காப்பதாக மனேகணேசன் கூறியுள்ள கருத்தானது தவறான புரிதலாகும். இ.தொ.காவின் உபத் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கும் அந்த செய்தியை வாசித்த மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இ.தொ.கா. இரண்டு எம்.பிகளை கொண்டுள்ளதுடன், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது.

இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களுக்குத் தேவையான அனைத்து பணிகள் குறித்தும் கவனம் செலுத்துவது மட்டுன்றி மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் அவதானமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவின் பின்னரும் இ.தொ.கா. கருத்து வேறுபாடுகளின்றி பிளவின்றி செயல்பட்டு வருகிறது. ஒரு தலைவர் இறந்த பின்னர் கட்சிகள் பிளவுபடுவதுதான் வழமையாகும்.

தலைவர் மறைந்த பின்னரும் இ.தொ.கா சக்திவாய்ந்த அமைப்பாக பிளவுபடாது உள்ளதுடன் கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

அரசியல் ரீதியாக சில முடிவுகள் வெளிப்படையான எடுக்கும் சூழ்நிலை அமையும் என்பதுடன் சில முடிவுகளை காலம் சென்றே அமுல்படுத்த முடியும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை அனைத்து சந்தர்ப்பங்களிலும் காப்பாற்றிய பலமான அமைப்பாக இருந்தது.

இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரையும் வைத்திருந்தது. அரசாங்கத்தை காப்பாற்றிய அமைப்பாக இருந்தாலும் பல விடயங்களில் மலையக மக்களுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலைமைகள் இருந்ததை அவர்களும் அறிவர். நாமும் அறிவோம்.

அப்படியான சூழலில் இன்று மலையக மக்களின் ஆதரவின்றி தனி பெரும்பான்மையை பெற்றிருக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன், அவதானமாகவும் மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய செயற்படும் ஓர் அமைப்பாகவும் இ.தொ.கா. பணியாற்றி வருகிறது.

ஐ.தே.க. அரசாங்கத்தால் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் மலையக மக்களின் பிரதிநிதிகள் எவரும் இருக்கவில்லை. அதேபோன்று 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டிருந்த அரசியமைப்பிலும் மலையக பிரதிநிதிகள் எவரும் இருக்கவில்லை என்பதை நினைவுப்படுத்த விருப்புகிறேன்.

மலையக பிரதிநிதி ஒருவரை சேர்க்கக் கூடாதென எவரும் கூறவில்லை. சேர்ப்பதற்கான முயற்சிகளையே எடுத்து வருகின்றோம். மலையக பிரதிநிதி ஒருவர் புதிய அரசியமைப்புக்கான நிபுணர் குழுவின் உள்ளே இருக்க வேண்டுமென ஏற்கனவே அரசாங்கத்திற்கு இ.தொ.கா. பரிந்துரைத்துள்ளது. அதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளமையின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் விரைவில் அது கைகூடும் என நாம் நம்புகிறோம்.

அதுமாத்திரமின்றி இ.தொ.கா. ஒவ்வொரு முடிவுகளையும் எடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காது செயற்படும்.

அதில் அனைவரும் உறுதியாக உள்ளனர். இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒருமாதம்தான் ஆகியுள்ளது. எமக்கு கால அவகாசம் வேண்டும். புதிய அரசாங்கத்தின் புதிய செயல்திட்டங்களை ஆராய்ந்து அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் ஒன்றிணைந்து செல்பட்டு கொண்டிருக்கும் போது மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான இ.தொ.கா. அந்த மக்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் என்றும் முன்னுரிமை வழங்கி செயல்படும்.

அதனால் மனோ கணேசன் இ.தொ.கா மீதான தமது தவறான புரிதலை மாற்றிக்கொள்ள வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதிகளாகவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் செயற்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் ஊடாக படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” – அமைச்சர் ரமேஷ் பத்திரண

”போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன, இக்குழுக்கள் ஊடாககூட மேற்படி படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(17.09.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கைப்படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை.

போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அனைத்து குழுக்களின் ஊடாகவும் இது உறுதியானது. எனவே. ஐ.நா. மனித உரிமை பேரவையின் குற்றச்சாட்டையும் அடியோடு நிராகரிக்கின்றோம்.

மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உரிய பதிலை கூட்டத்தொடரில் வழங்கியுள்ளார்.

இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை, போலியான முறையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளே சுமத்தப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது என மிகவும் தெளிவாக அவர் எடுத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்றது.

போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன, இக்குழுக்கள் ஊடாககூட மேற்படி படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை“ எனவும் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

”நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிந்தால் கொரோனா தொற்று இல்லை” – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !

மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன.
அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு வைத்தியசாலையின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த வைத்தியசாலை ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.

இவர்கள் தங்களது ஆய்வு முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

அதில் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளில் கூறி இருப்பதாவது:-

ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது.

இது ஒற்றை ஆய்வாக அமைந்துள்ளது. இதை உறுதி செய்வதற்கு கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அதுவும் பல இடங்களில் பெரிய அளவுகளில் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கண்ணாடிகள், அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவலுக்கு எதிராக தடையாக செயல்படக்கூடும் என ஒப்புக்கொண்டுள்ளார்.

உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமர் ஆலோசனை !

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதி செயலாளருக்கு இன்று (18.09.2020) காலை இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உளுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ் வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமர் இன்று காலை ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கையின் உதவிகளுக்கு முஹம்மத் ஸப்தார் கான் பாராட்டு !

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மத் ஸப்தார் கான் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை கடந்த 15.09.2020 அன்று சந்தித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கோள் காட்டிய கேர்ணல் ஸப்தார், கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கையின் உதவிகளை பாராட்டினார்.

இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியின் அதிகாரிகள், பாக்கிஸ்தானுக்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தான் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திய பாகிஸ்தான் அரசுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்திற்கு பாகிஸ்தான் இராணுவம் அளித்த உதவிகளையும் மேஜர் ஜெனரல் குணரத்ன இதன்போது நினைவு கூர்ந்தார்.

மேலும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

அத்துடன் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன“ – ரஞ்சித் மத்தும பண்டார

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால், 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு 19 பிளஸைக் கொண்டு வருவதற்கே அரசு முயற்சிக்க வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று 20ஆவது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டம் இடம்பெற்றது. இதன்போது மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் தொடக்கம் இதுவரையில் அரசமைப்பு பல்வேறு முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் 17ஆவது திருத்தம் மற்றும் 19ஆவது திருத்தம் மாத்திரமே ஜனநாயகப் பண்புகளுக்கு முதலிடம் கொடுத்து, மக்களின் நலனை மாத்திரம் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட திருத்தங்கள். ஏனையவை அரசியல்வாதிகளின் நலனைக் கருத்தில்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 19 ஆவது திருத்ததில் குறைப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதேவேளை, 20 ஆவது திருத்த வரைவை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.

20ஆவது திருத்தத்தில் காணப்படும் சர்வாதிகாரப் பண்புகளைக் கொண்ட ஏற்பாடுகள் தொடர்பில் தற்போது விமர்சனங்கள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இந்தத் திருத்தத்தைத் தாம் தயாரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்” – என்றார்.

காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு பணிப்பு !

காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.

அத்துடன், சீனோர் நிறுவனத்தினூடாக பயணிகள் போக்குவரத்து படகுகளை உருவாக்கி அவற்றை கொழும்பில் பயணிகளில் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ள நிலையில் இவ் வேலைத் திட்டம் தொடர்பிலும் ஆராயுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சின் செயற்றிட்ட ஆய்வு மற்றும் மீளாய்வுக் கூட்டம் நேற்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு மாநாட்டு மண்பத்தில் நடைபெற்ற நிலையிலேயே சீனோர் அதிகாரிகளிடம் அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்துள்ளார்.

சீனோர் நிறுவனத்தின் படகு கட்டும் செயற்பாடுகள் கடந்த காலத்தில் வினைத் திறனுடன் மேற்கொள்ளப்படாமையினால் அவற்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்ட்டுள்ளதுடன் சீனோர் நிறுவனம் பற்றிய நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழந்த நன்மதிப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, பயணிகள் படகுகளை உருவாக்கி கொழும்பு நகரில் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காரைநகரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய ரக படகுகளை உருவாக்கும் உட்கட்டுமானங்களைக் கொண்ட தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவதன் மூலம் சிறிய ரக படகுகளை உருவாக்க முடியுமெனவும் தெவித்தார்.

”புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசுடன் உள்ள கருணா, பிள்ளையான் குற்றமற்றவர்கள் தியாகி திலீபன்தான் இவர்கள் பார்வைக்கு குற்றவாளி” – மாவை சேனாதிராஜா காட்டம்!

”புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா, பிள்ளையான் குற்றமற்றவர்கள் தியாகி திலீபன்தான் இவர்கள் பார்வைக்கு குற்றவாளி” என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘ அமரர் வன்னியசிங்கத்தின் 61ஆவது நினைவு தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (17.09.2020) நடைபெற்றது. அங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்

“ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையாலும் சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் அமைப்புகளினாலும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவர்களே இந்த நாட்டை ஆளுகின்றார்கள்.

அவ்வாறான கட்டமைப்புக்குள்தான் நாம் வாழ வேண்டிய நிலைக்குள் இருக்கின்றோம். எமது மக்களின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் போராடிய தியாக தீபம் திலீபனை நினைவேந்துவதற்கு இந்த அரசு பொலிஸார் ஊடாக நீதிமன்றத் தடையைப் பெற்றுள்ளது. இந்தத் தடையால் கண்ணீர்விட்டு அழுவதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அஹிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் நோயினால் இறந்தார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறுகின்றார்.

மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களை இவர்கள் இப்படித்தான் கூறுவார்கள். இந்த நாட்டில் முதலில் ஆயுதம் எடுத்துப் போராடிய ஜே.வி.பியில் இருந்தவர்கள் தற்போது அமைச்சரவையில் இருக்கின்றார்கள். இதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறிப்பாக கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அரசுடன் உள்ளனர். அவர்கள் இன்று குற்றமற்றவர்களாம்.

20ஆவது திருத்தத்தின் மூலம் இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் வேளையில் எங்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள்.

நீதிமன்றத் தடைகள் மூலம் நீதியை எதிர்பாக்கும் எங்களுக்கு நீதியும் இல்லை; கண்ணீர் விட்டு அழுவதற்கும் எங்களுக்கு வழியும் இல்லாத நிலையில் வாழுகின்றோம்.

அமரர் வன்னியசிங்கம் ஒற்றுமையாக இருந்து மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். அவர் வழியில் நாமும் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.