15

15

”தியாகி திலீபன் நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார் ” – மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவுக்கு பொ. ஐங்கரநேசன் பதில்.

திலீபன் ஒரு அரசியற் போராளி என்றும் அவர் நோயாளி அல்ல, நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார்  என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாக அவர் விடுத்திருத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் ஏற்பட்ட அமைதிக் காலத்தில் அப்போது யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன், மலையகத்தில் தமிழ் உறவுகளுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தார்.

ஆனால், ஒப்பந்தத்துக்கு மாறாகத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டதோடு, சிங்களக் குடியேற்றங்களும் நிகழத் தொடங்கின. அத்தோடு நிராயுத பாணிகளாக உலாவிய புலிகள் மீதுபிற ஆயுதக் குழுக்கள் தாக்குதலையும் தொடங்கினர்.

இவற்றைத் தடுக்கும் முகமாகவே திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் என ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தரப்பினர்களாலும் பேரினவாதிகளாலும் விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு ஊகங்களும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டுவருகின்றன.

அவற்றில் ஒன்றே திலீபன் உண்ணாவிரதத்தால் உயிரிழக்கவில்லை அவர் நோயாளி என்பதால் பிரபாகரன் உண்ணாவிரதம் இருக்க அனுப்பி வைக்கப்பட்டார் என்ற பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமால் குணரட்ண கூறியிருக்கும் நயவஞ்சகக் கருத்து என்றும் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் பற்றிய உண்மைகள் ஒருபோதும் தோற்கடிக்கப்படாது என்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடை ஏற்பட்டாலும் மக்கள் மனங்களில் குடியேறியிருக்கும் திலீபன் பற்றிய எழுச்சி நினைவுகளுக்கு ஒருபோதும் தடைபோட முடியாது என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

டெனிஸ்வரனிடம் மன்னிப்பு கேட்க முடியாது சி.வி.விக்கினேஸ்வரன் திட்டவட்டம் ! – வழக்கை விலக்க டெனீஸ்வரன் தரப்பு மறுப்பு.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அதனை வாபஸ் பெறுவதற்கு டெனீஸ்வரன் தரப்பு மறுத்துவிட்டது.

சமரசமாகத் தீர்பதற்கு டெனீஸ்வரன் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளை ஏற்பதற்கு விக்கினேஸ்வரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குறிப்பாக தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்பதை அவர் உறுதியாகக் கூறிவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை நாளையும், நாளை மறுதினமும் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்கினேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், “கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி தொடுத்த வழக்கால் ஓர் நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டார் என்றோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்ற இழி நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். சட்டத்தரணி டெனிஸ்வரன் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெருந்தன்மையாக கைவாங்க வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும்” எனவும் அரசியல் ஆர்வலர்கள் பலரும் டெனீஸ்வரனுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதற்கு தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்த டெனீஸ்வரன், “கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும், இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். அதேவேளையில், இந்த வழக்கை தான் வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டெனீஸ்வரன் தரப்பு மூன்று நிபந்தனைகளை முன்வைத்தது. விக்கினேஸ்வரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். வழக்கின் செலவுத் தொகையை முழுமையாகத் தரவேண்டும், உச்ச நீதிமன்றத்தில் விக்கினேஸ்வரன் தரப்பால் டெனீஸ்வரனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ்பெறப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். மன்னிப்புக் கேட்பதற்கு விக்கினேஸ்வரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

”கொரோனா வைரஸை சீன அரசு திட்டமிட்டு உருவாக்கி பரப்பியது” – சீன விஞ்ஞானி லீ மெங் மீண்டும் பரபரப்பு பேட்டி.

சீன அரசுக்கு சொந்தமான வுஹான் ஆய்வு மையத்தில்தான் கொரோனா வைரஸ் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக அந்த நாட்டின் வைரஸ்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானி டாக்டர். மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஹொங்கொங் பொது சுகாதார வைத்திய நிறுவனத்தின் வைரஸ்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் நிபுணராக பணியாற்றிய டாக்டர். லீ மெங்  “சீன அரசுதான் கொரோனா வைரஸ் பரவ சீன அரசே காரணம்” என முன்னரும் குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது அமெரிக்காவில் தலைமறைவாக உள்ள அவர், கடந்த 11 ஆம் திகதி அடையாளம் தெரியாத பகுதியில் இருந்து பிரிட்டனின் ‘லூஸ் வுமன் ‘ என்ற நிகழ்ச்சிக்காக பேட்டியளித்தார். அதில் பல அதிர்ச்சித் தகவல்களை அவர் வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சீனாவில் பரவி வந்த புதிய வகையிலான நிமோனியா குறித்து இரண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். ஆய்வின் மோசமான முடிவுகள் குறித்து எனது மேலதிகாரியிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த மேலதிகாரி உலக சுகாதார மையத்தில் ஆலோசகராக இருப்பவர்.

அவரிடத்தில் சீன அரசு சார்பாகவும் உலக சுகாதார மையத்தின் சார்பாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரினோன். ஆனால், வாயை பொத்திக் கொண்டு இருக்காவி்ட்டால் காணாமல் போய் விடுவாய் என்று மிரட்டினார் எனவும் டாக்டர். லீ மெங் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் சீன புத்தாண்டு விடுமுறை தொடங்கியது. உலகமெங்கும் சீன மக்கள் பயணம் மேற்கொள்வார்கள். இதனால், உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயமும் இருந்தது. ஏனென்றால் , இது மிகவும் மோசமான ஒரு வைரஸ். உலக சுகாதாரத்தையே புரட்டி போட்டு விடும் திறமை கொண்டதாக இருந்தது. அதனால், என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அப்படி, நான் அமைதியாக இருந்தால் உலக மக்களுக்கு தீங்கிழைத்தற்கு சமமாகும். இந்த நிலையில், சீனாவிலிருந்து தப்பி நண்பர்களுடன் `ஹொங்கொங் சென்றேன். மிரட்டல்கள் வந்ததையடுத்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தேன் எனவும் அவா் கூறினார்.

வுஹானில் உள்ள விலங்குணவுச் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் உருவாகவில்லை. அது வௌவாலில் இருந்து உருவாக்கப்பட்டு ஆய்வக மாற்றத்துக்கு பிறகு கொரோனா வைரஸாக மாற்றப்பட்டது. CC45 மற்றும் ZXC41 என்றே இதற்கு பெயரிடப்பட்டிருந்தது.

ஜனவரி 17 – ஆம் ஆம் திகதி அமெரிக்காவில் வாழும் சீனாவை சேர்ந்த சமூக ஊடக பிரபலம் ஒருவரை தொடர்பு கொண்டு சீன அரசு கோவிட் -19 வைரஸை உருவாக்கியது குறித்து தகவல் தெரிவித்தேன் எனவும் டாக்டர். லீ மெங் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் மனிதரிடத்தில் மனிதருக்கு பரவும் என்பது அப்போதே சீனாவுக்கு தெரியும். கொரோனா வைரஸ் அதி தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன், இந்த வைரஸை பரப்புதற்கான ஒரு களமாக மட்டுமே வுஹான் விலங்குணவுச் சந்தை இருந்தது போன்ற வியங்களை அவரிடத்தில் விளக்கி கூறினேன்.

தற்போது வுஹானில் வைரஸ் உருவாக்கப்பட்ட விதம், பரவிய விதம் குறித்து இரண்டு அறிக்கைகள் எங்களிடத்தில் உள்ளன.

அந்த அறிக்கைகள் வுஹானில் வைரஸ் உருவாக்கப்பட்டற்கான அறிவியல் சான்றுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லும். உயிரியலில் எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் கூட கொரோனா வைரஸ் உருவத்தை வைத்தே உண்மையை அறிந்து கொள்ள முடியும்எனவும் டாக்டர். லீ மெங் தெரிவித்துள்ளார்.

வுஹான் ஆய்வகத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் டாக்டர் லீ மெங் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, டாக்டர் லீ மெங்கின் குற்றச்சாட்டை ஏற்கெனவே சீனா மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ள நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தடைகளை மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை கோண்டாவில் பகுதியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது | Virakesari.lk

 

ஆர்டிக்பகுதியில் அதிகரிக்கும் வெப்பம் ! – 113 சதுரக் கிலோமிட்டர் நீளமான பனிக்கட்டி சிதறல்.

ஆர்டிக் கடல் பகுதியில் மிகப்பெரிய பனிக்கட்டி உடைந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டிக் கடல் பகுதியில் கீரிஸ்லாந்து நாட்டுக்கு மேலாக உள்ள பனிப்பகுதியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மிகப் பெரிய பனிக்கட்டி ஒன்று உடைந்தது.

இவ்வாறு உடைந்த பனிக்கட்டியின் நீளம் 113 சதுரக் கிலோமிட்டர் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்டிக் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருவதே பனிக்கட்சி உருகுதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சிரியா மீது இஸ்ரேல் நாட்டின் விமானப்படையினர் திடீர் வான்வெளி தாக்குதல் !

சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்களை அழிக்க இஸ்ரேல் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.
இந்நிலையில், சிரியாவின் டியிர் இசோர் மாகாணத்தில் அல்பு கமல் பகுதியில் நேற்று (14.09.2020) இஸ்ரேல் நாட்டின் விமானப்படையினர் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சிரியாவில் செயல்பட்டுவந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சிரியாவில் 2011 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலி – தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மாவை.சேனாதிராஜா அழைப்பு.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று (15.09.2020) தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தியாகி திலீபனின் நினைவேந்தலை தாயகமெங்கும் மக்கள் வழக்கமாக அனுஷ்டித்து வருகிறார்கள். இம்முறை தடை உத்தரவு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவா அல்லது வடக்கு பாதுகாப்பு தரப்பு எடுத்த நடவடிக்கையா என்பது தெரியவில்லை. அதையும் ஆராய வேண்டும்.

அரசின் கொள்கை முடிவென்றாலும் பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கையென்றாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை, தமிழ்ச் சட்டத்தரணிகள் நீதிப்பொறிமுறையின் ஊடாகவே பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுப்பது பற்றியும் நாம் ஆராயவுள்ளோம்.

அதுதவிர, யாழ். மாநகரசபை எல்லைக்குள் நினைவேந்தலை தடை செய்து நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளார்கள். இது தொடர்பாக இன்று மதியத்தின் பின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆராயவுள்ளோம். தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அநேகமான கட்சிகள் இன்று சந்திப்பில் கலந்துகொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

‘யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா’ – தவராசா கலையரசன்

யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம்- பாண்டிருப்பு பகுதியில் நேற்று (14.09.2020) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் தவராசா கலையரசன் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் ஏற்பட்ட இன ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கல்வியாளர்கள் , புத்திஜீவிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள். தொன்மையான பூர்வீக நிலம், கட்டம் கட்டமாக அழிக்கப்பட்டு தமிழர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்களா என்ற நிலை தோற்றுவிக்கப்படும் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது. இந்த அரசு தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றது .

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தி தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர்.

அதேபோன்று 2020 நாடாளுமன்ற தேர்தலில் அரசு வழங்கிய வாக்குறுதியை நம்பி, 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்தனர். இது கல்முனை மக்களுக்கு எதிராக கிடைத்த ஏமாற்றம் அல்ல. இந்த நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் இதனையே செய்து வருகிறது.

நடைபெற்று முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற கருணா, வாக்கெண்ணும் நிலையத்தில் வைத்து தமிழ் தரப்பில் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது என்பதனை அறிந்தவுடன் எனது பணி நிறைவேறியது என வெளியேறினார்.

யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா, இவரை இன்னும் நம்பினால் தமிழர்கள் இனி அழியப்போகின்றோம் என்ற செய்தியைதான் குறிப்பிடுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவெதுவுமின்றி அச்சுறுத்தும் கொரோனா! – கொரோனா உயிர்ப்பலி பிரேசிலில் 1,32,117.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும்  பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 94 லட்சத்து 33 ஆயிரத்து 477 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 36 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 676 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 390 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 1,98,974
பிரேசில் – 1,32,117
இந்தியா – 79,722
மெக்சிகோ – 70,821
இங்கிலாந்து – 41,637
இத்தாலி – 35624
பிரான்ஸ் – 30,950
ஸ்பெயின் – 29,848
பெரு – 30,812
ஈரான் – 23,313
கொலம்பியா – 23,123

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்தை ஈர்த்த ஒரு பதாகை ! – உடனடியாக யாழ்.வந்த இராஜாங்க அமைச்சர்.

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?”” என எழுதப்பட்ட பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தை நேற்று பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு இது தொடர்பில் ஆராய்ந்துள்ளார். யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.