நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதாக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
குறித்த அரச வங்கிகள் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் மற்றும் பொதுமக்களினால் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதால் முறைப்பாடுகளை ஏற்கும் இறுதி திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை பரிசீலித்த பின்னர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தரப்பினரை அழைத்து வாக்குமூலம் பெறப்படவுள்ளது. 5 முன்னணி அரச வங்கிகளில் 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைப்பதற்கும் நட்டத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் மற்றும் வெளிதரப்பினரை அடையாளங் காண்பதற்குமான பொறுப்பும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரச வங்கி கட்டமைப்பை செயற்றிறன் மிக்கதாக மாற்றுதல் மற்றும் அரச வங்கிகளில் இடம்பெறும் குளறுபடிகளை ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஏற்ப இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.