19

19

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டு !

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். அவர் பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து இருக்கிறார். இந்தநிலையில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து எமி டோரிஸ் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

கடந்த 1997-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது என்னிடம் டிரம்ப் தவறாக நடந்துகொண்டார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றார். என் விருப்பத்துக்கு மாறாக என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவரது பிடியில் இருந்து நான் வெளியேற முயன்றபோது அது முடியாமல் போய் விட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போதே இந்த விசயத்தை வெளியே சொல்ல நினைத்தேன். ஆனால் எனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமோ? என்ற பயத்தில் சொல்லவில்லை. இப்பொழுது எனது மகள்கள் வளர்ந்து விட்டார்கள்.

உங்கள் விருப்பம் இல்லாமல் யாரும் உங்களிடம் செயல்படக்கூடாது என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்பதால் தைரியமாக இப்போது இதை சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

எமி டோரிஸ் கூறும் சம்பவம் நடந்தபோது அவருக்கு 24 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் 23 ஆண்டுகள் கழித்து அவர் மீது முன்னாள் மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, ‘எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு எமி டோரிசை ஏவி விட்டிருக்கிறார்கள்’ என்றார்.

ஏற்கனவே டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தும் கொரோனா ! – உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.06 கோடியாக அதிகரிப்பு !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று முதன் முதலாக வெளிப்பட்டு ஏறக்குறைய 9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவல் இன்னும் சில நாடுகளில் உச்சத்தில் உள்ளன.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருப்பதால், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.23 கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.55 லட்சமாக உள்ளது. சிகிச்சை பெற்று வரும் 74 லட்சம் பேரில், 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,925,666 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,497,434 ஆக உயர்ந்துள்ளது.

90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை- இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு !

தற்போது பி.சி.ஆர். சோதனை வழியிலான கொரோனா பரிசோதனை முடிவை அறிய பல மணி நேரம் காத்திருக்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் இம்பீரியில் கல்லூரியை அடிப்படையாக கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டி.என்.ஏ.நட்ஜ்’ என்ற நிறுவனம் ‘லேப்-இன்-கார்ட்ரிஜ்’ என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய பெட்டி வடிவிலான துரித பரிசோதனை கருவியை கண்டுபிடித்து உள்ளது.
இதை இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் சோதித்து அறிந்துள்ளனர். இந்த கருவி, மிக விரைவாகவும், துல்லியமாகவும் கொரோனா பரிசோதனை முடிவை தருகிறது. 90 நிமிடங்களில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லி விடும்.
இந்த துரித கருவியை கொண்டு என்.எச்.எஸ். என்று அழைக்கப்படக்கூடிய இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை பணியாளர்கள், நோயாளிகள் மீது சோதனை நடத்தப்பட்டது. இதில் துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளன.
இதுபற்றி பேராசிரியர் கிரஹாம் குக் கூறுகையில், “எந்தவொரு மாதிரி பொருட்களையும் கையாள வேண்டிய அவசியமின்றி, நோயாளியின் படுக்கையில் செய்யக்கூடிய சோதனையை, தரமான ஆய்வுக்கூட சோதனைக்கு ஒப்பிடக்கூடிய துல்லியத்தன்மையை கொண்டுள்ளது இந்த முடிவுகள்” என குறிப்பிட்டார்.
மேலும், “நீங்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர முயற்சிக்கும்போது, இது மிகவும் உறுதி அளிக்கிறது” எனவும் கூறுகிறார்.
தற்போது இந்த துரித சோதனைக்கருவி லண்டனில் 8 ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படுகிறது.
58 லட்சம் துரித பரிசோதனை கருவிகளுக்கு இங்கிலாந்து அரசு ஆர்டர் செய்தள்ளது என இம்பீரியல் கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.
மூக்கு அல்லது தொண்டை சளி மாதிரியை (ஆர்.டி.பி.சி.ஆர். மாதிரியே) எடுத்து, ரசாயனங்கள் அடங்கிய நீல நிறம் கொண்ட சிறிய கார்ட்ரிஜூக்குள் (பெட்டிக்குள்) வைக்கப்படுகிறது.
பின்னர் இது தொற்று நோயை ஏற்படுத்துகிற கொரோனா வைரசுக்கு சொந்தமான மரபணு பொருட்களின் தடயங்களை தேடுகிறது. 90 நிமிடங்களில் இதன் முடிவு தெரிந்து விடுகிறது.
இந்த துரித கருவியின் பாதகமான அம்சம் என்பது ஒரே நேரத்தில் ஒரு மாதிரியை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஒரு நாளில் 16 சோதனைகளை மட்டுமே நடத்த முடியும் என்பதுதான்.
இந்த சோதனை புதுமையானது என்று வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லாரன்ஸ் யெங் பாராட்டியுள்ளார்.

”இந்த ஆட்சி குடும்ப ஆட்சி; இராணுவ ஆட்சி; சர்வாதிகார ஆட்சி. குற்றங்கள்தான் இந்த ஆட்சியில் மலிந்து கிடக்கும். இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்கள்தான் பாவப்பட்டவர்கள்” – அநுரகுமார திஸாநாயக்க

”இந்த ஆட்சி குடும்ப ஆட்சி; இராணுவ ஆட்சி; சர்வாதிகார ஆட்சி. குற்றங்கள்தான் இந்த ஆட்சியில் மலிந்து கிடக்கும். இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்கள்தான் பாவப்பட்டவர்கள்” என ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்  ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு அடியோடு நிராகரித்துள்ளமை தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய – மஹிந்த தலைமையிலான ராஜபக்ச அரசு மீது நாம் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களையே தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் முன்வைத்துள்ளார். இந்தநிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்று அரசு எப்படிக் கூற முடியும்?

“ஐ.நா. தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகினாலும் ஐ.நா. மனித சபையின் உறுப்புரிமை நாடுகளில் இலங்கை தொடர்ந்து அங்கம் வகிக்கின்றது. எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு நிராகரித்தாலும் ஐ.நா. வைத்துள்ள பொறியில் இருந்து ஒருபோதும் தப்பவே முடியாது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் சொன்னால், நீங்கள் திணறிப் போய் விடுவீர்கள்” – பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ´பகிடிவதை´ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய பகிடிவதை  தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நான்கு சிரேஸ்ட மாணவர்களால் புதுமுக மாணவர்களைப் பாலியல் ரீதியாக இம்சிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட “சைபர் ராக்கிங்” தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (18.09.2020) காலை துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, துணைவேந்தருடன், வணிக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன், சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ்உமேஸ், மாணவர் நலச்சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஐங்கரன் மற்றும் வணிக முகாமைத்துவ பீடத்தின் மாணவ ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பின் ஆரம்பத்தில் உரையாற்றிய துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைகழகத்திற்குள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்து வந்துள்ளது. கொரோனாவிற்கு பின்னர் விரிவுரைகளும் ஒன்லைனில் நடக்கிறது. ராகிங்கும் ஒன்லைனிற்கு சென்றுள்ளது.

பலாலி இராணுவ முகாமில் லெப்டினனட் தர அதிகாரியாக உள்ள உளவியல் பெண் வைத்தியர் ஒருவரின் சகோதரனும் ராகிங் செய்யப்பட்டுள்ளார். அவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை தெரிவித்தார். சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் சொன்னால், நீங்கள் திணறிப் போய் விடுவீர்கள். பொது இடத்தில் சொல்ல முடியாதது. சட்டையை கழற்றி உடம்பை காட்டுவது மாத்திரமல்ல. அதற்கு மேலாகவும் கேட்கப்பட்டது. அது கிட்டத்தட்ட “நீலவான நிகழ்வுகளை” எல்லாம் முழுக்க பார்ப்பதை போல.

உனது அக்கா பலாலியில் இராணுவத்தில் இருக்கிறார்தானே என்றும் ராகிங்கில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தனியே மன எழுச்சியால் நடப்பதல்ல. அதற்கு அப்பால் அரசியல் பின்னணியுள்ளவை. ஏற்கனவே பல்கலகழகத்தில் நடந்த மோதல் ஒன்றில், அரசியல் பின்னணியை நான் சுட்டிக்காட்டினேன். பல்கலைக்கழகத்திற்கு வரும் கிராமப்புற மாணவர்கள் அரசியல் கட்சிகளின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளனர்.

பகிடிவதையை தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் இந்த சம்பவம் நடந்தால், பீடாதிபதி எமக்கு அறிவிப்பார். சிரேஷ்ட மாணவ ஆலோசகர், பிரதி சட்ட ஒழுக்காற்று அதிகாரி ஆகியோர் பீடாதிபதியுடன் இணைந்து அந்த விடயம் தொடர்பான ஆரம்ப அறிக்கையை 2 நாட்களிற்குள் வழங்க வேண்டும். அதனடிப்படையில் குற்றப்பத்திரிகை வழங்குவோம். அவர்கள் குற்றத்தின் அடிப்படையில் விடுதியிலிருந்தும், வகுப்பிலிருந்தும் நீக்கப்படுவார்கள்.

நாட்களிற்குள் மாணவர்கள் அதற்கு விளக்கமளிக்க வேண்டும். மாணவர் ஒழுக்காற்று சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். அந்த குழு, மாணவனின் விளக்கத்தை ஆராய்ந்து, விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்குவார்கள். சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்பு பட்டங்கள் பெற முடியாது, 4ஆம் வருட கற்கையில் ஈடுபட முடியாது, சிறப்பு தேர்ச்சிகள் வழங்கப்படாது. ஆகக்குறைந்தது ஒரு வருடம் அனைத்து கல்வி நடவடிக்கையில் இருந்தும் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

வணிக, முகாமைத்துவ பீட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை நிமலதாசன் கருத்து தெரிவித்தபோது, நாங்கள் மிக வேகமாக ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளோம்.

அந்த விசாரணையின் அடிப்படையில் 10 மணித்தியால விசாரணையில் சந்தேகத்திற்குரிய 2ஆம் வருடத்தை சேர்ந்த 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிற்கு உதவியதற்காக விசாரணையை நம்பக தன்மையை ஏற்படுத்த முதலாம் வருட மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த இம்சையில் ஈடுபட்டவர்களிற்கு சிறப்பு கற்கை நெறி வழங்கப்படாது, ஒரு வருட வகுப்புத்தடை விதிக்கப்படும். இணைய குற்றம் தொடர்பில் பொலிசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது என்றார்.

பேரவையுடன் இணைந்து பயணிக்க மாவை.சேனாதிராஜாவுக்கு, சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு !

”கௌரவ மாவை சேனாதிராசா அவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் முன்னெடுப்புக்களை தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக மேற்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயகம் மற்றும் மனிதநேய பண்புகளுக்கு கிஞ்சித்தும் இடமளிக்காமல் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எல்லா அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி எவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நான் வரவேற்கின்றேன் இத்தகைய செயற்பாடுகள் அரசியல் கட்சிகளை மட்டுமன்றி ஏனைய பொது அமைப்புக்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி அரசியல் சாராத வகையில் முன்னெடுக்கப்படுவதே பொருத்தமானதாகவும் நிலையானதாகவும் அமையும்.

இவ்வாறான போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காகவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இத்தகைய பல்வேறு செயற்பாடுகளை தமிழ் மக்கள் பேரவை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு அல்ல. ஆகவே, கௌரவ மாவை சேனாதிராசா அவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் முன்னெடுப்புக்களை தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக மேற்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவையில் அவரும் இணைந்து அதன் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை நான் வகிப்பது பொருத்தமானது அல்ல.

ஏனைய அரசியல் கட்சிகள் இதில் இணைவதற்கும் பேரவையின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கும் இது தடையாக அமையும்.

இதனால், பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நான் பல தடவைகள் கோரிக்கை விடுதிருந்தும் பேரவையின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தொடர்ந்தும் அந்த பதவியை வகித்து வந்தேன்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றங்களின் கீழ் தமிழரசு கட்சி மற்றும் ஏனைய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் பேரவையில் இணைந்து மாபெரும் வெகுஜன கட்டமைப்பாக பேரவையை கட்டிய எழுப்பி அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வழி ஏற்படுத்தும் வகையில் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்று தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளேன்.

இதனை பேரவைக்கு இன்று அறிவித்துள்ளேன்.

தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகள் பேரவையில் அங்கம் வகித்து அதன் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும்.

தனிப்பட்ட ரீதியில் நான் என்னாலான சகல ஒத்துழைப்பையும் பேரவைக்கு வழங்குவேன்.

இதேவேளை, ஏற்கனவே மாவை சேனாதிராசா மேற்கொண்டுள்ள வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அடுத்த வாரம் முன்னெடுக்கவிருக்கும் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது முழுமையான ஆதரவை வழங்கும். இந்த போராட்டத்தை நடத்துவதற்கு மிகவும் குறுகிய காலமே இருப்பதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி இந்த போராட்ட ஏற்பாடுகள் நடைபெறுவதே பொருத்தமானது.

நடைபெறவிருக்கும் இந்த போராட்டம் எல்லா தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொதுஜன அமைப்புக்களும் உள்வாங்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களையும் உள்வாங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.” என்று தெரிவித்தார்.

”தமிழ் மக்கள் பேரவையை கட்சி சார்பற்ற வகையில் ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்காக அதன் தலைமையிலிருந்து விலகுகிறேன் ” – விக்னேஸ்வரன் !

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவதற்காகவே அதன் இணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் இணைய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் தான் நேற்று பேசியதாகவும், தமிழ் மக்கள் பேரவையை கட்சி சார்பற்ற வகையில் ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான நிலையை உருவாக்குவதற்காகவே இவ்வாறுதான் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய தேசிய ரீதியான பிரச்சினைகள் உருவாகும் போது தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களை ஒன்றிணைத்துச் செயற்படுவதற்கான சூழல் இதன்மூலமாக ஏற்படுத்தப்படும் என்பதால்தான் இவ்வாறான முடிவைத் தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவையை அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது கடந்தகாலங்களில் உருவாக்கப்பட்டிருந்த இந்த பேரவையானது தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியல்பின்னணி கொண்டதாக மாற்றப்பட்டது என்பதே கசப்பான உண்மையாகும். இந்நிலையியிலேயே வடக்கு – கிழக்கு இளைஞர்கள் புதிய பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மீளவும் இளைஞர்களுடைய சமூகம்நோக்கிய நிலையை தடுப்பதாகவே பேரவையினுடைய மீள்கட்டுமானம் அமையப்போகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

”சீனப்பிரஜைகளும் இனிமேல் இலங்கை நாடாளுமன்றம் செல்வார்கள் ” – ஞானசார தேரர்

இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று(18.09.2020) சென்றிருந்த ஞானசார தேரர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.

தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டது போல் எவரும் செயற்பட முயற்சித்தால், அது வரலாற்று ரீதியாக செய்யும் தவறு.

குறிப்பாக இரட்டை குடியுரிமையை எடுத்து கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கை பிரஜை எனக் கூறி நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.எப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பது தொடர்பாக ஆராய தமிழ்தேசிய கட்சிகள் இணைவு !

கோட்டாபாய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பது தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ்தேசியம் சார் நிலைப்பாட்டிலுள்ள கட்சிகளுக்கு அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றைய தினம் இளங்கலைஞர் மண்டபத்தில் விசேட கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின்பிரதிநிதிகள்  பங்குபற்றியுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சி பிரதிநிதிகள் அனைவரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். ஜனாதிபதி கோட்டாபாயவின் அரசால் மனித உரிமை மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளும் அரச பாதுகாப்பு தரப்பினராலும் காவல் துறையினராலும் அடக்கி ஒடுக்கப்படும் நிலை தீவிரமடைந்து வருகிறது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் விரிவாக ஆராயப்பட வுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ் மக்கள் தேசியக் கூட்டனி,தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஐனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

”ஐ.நாவின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு அடியோடு நிராகரித்து ஐ.நாவைப் பகைப்பது மடைமைத்தனமானது” – எச்சரிக்கிறார் சஜித் பிரேமதாஸ!

“இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு அடியோடு நிராகரித்து ஐ.நாவைப் பகைப்பது மடைமைத்தனமானது”  என  எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ள ராஜபக்ச அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை அரசு வழங்குகின்றமையும், சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுகின்றமையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றமையும் மிகவும் கண்டனத்துக்குரியவை.

ராஜபக்ச அரசின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை இலங்கையிலுள்ளவர்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் எதிர்க்கின்றது என்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வெளிப்படையான உண்மைக் கருத்துக்கள் சான்று பகிர்கின்றன.

எனவே, இந்த அரசு திருந்தி நடக்கும் வழியைப் பார்க்க வேண்டும். இல்லையேல் வீட்டுக்கே செல்ல வேண்டி வரும்” – என்றார்.