90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை- இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு !

தற்போது பி.சி.ஆர். சோதனை வழியிலான கொரோனா பரிசோதனை முடிவை அறிய பல மணி நேரம் காத்திருக்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் இம்பீரியில் கல்லூரியை அடிப்படையாக கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டி.என்.ஏ.நட்ஜ்’ என்ற நிறுவனம் ‘லேப்-இன்-கார்ட்ரிஜ்’ என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய பெட்டி வடிவிலான துரித பரிசோதனை கருவியை கண்டுபிடித்து உள்ளது.
இதை இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் சோதித்து அறிந்துள்ளனர். இந்த கருவி, மிக விரைவாகவும், துல்லியமாகவும் கொரோனா பரிசோதனை முடிவை தருகிறது. 90 நிமிடங்களில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லி விடும்.
இந்த துரித கருவியை கொண்டு என்.எச்.எஸ். என்று அழைக்கப்படக்கூடிய இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை பணியாளர்கள், நோயாளிகள் மீது சோதனை நடத்தப்பட்டது. இதில் துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளன.
இதுபற்றி பேராசிரியர் கிரஹாம் குக் கூறுகையில், “எந்தவொரு மாதிரி பொருட்களையும் கையாள வேண்டிய அவசியமின்றி, நோயாளியின் படுக்கையில் செய்யக்கூடிய சோதனையை, தரமான ஆய்வுக்கூட சோதனைக்கு ஒப்பிடக்கூடிய துல்லியத்தன்மையை கொண்டுள்ளது இந்த முடிவுகள்” என குறிப்பிட்டார்.
மேலும், “நீங்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர முயற்சிக்கும்போது, இது மிகவும் உறுதி அளிக்கிறது” எனவும் கூறுகிறார்.
தற்போது இந்த துரித சோதனைக்கருவி லண்டனில் 8 ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படுகிறது.
58 லட்சம் துரித பரிசோதனை கருவிகளுக்கு இங்கிலாந்து அரசு ஆர்டர் செய்தள்ளது என இம்பீரியல் கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.
மூக்கு அல்லது தொண்டை சளி மாதிரியை (ஆர்.டி.பி.சி.ஆர். மாதிரியே) எடுத்து, ரசாயனங்கள் அடங்கிய நீல நிறம் கொண்ட சிறிய கார்ட்ரிஜூக்குள் (பெட்டிக்குள்) வைக்கப்படுகிறது.
பின்னர் இது தொற்று நோயை ஏற்படுத்துகிற கொரோனா வைரசுக்கு சொந்தமான மரபணு பொருட்களின் தடயங்களை தேடுகிறது. 90 நிமிடங்களில் இதன் முடிவு தெரிந்து விடுகிறது.
இந்த துரித கருவியின் பாதகமான அம்சம் என்பது ஒரே நேரத்தில் ஒரு மாதிரியை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஒரு நாளில் 16 சோதனைகளை மட்டுமே நடத்த முடியும் என்பதுதான்.
இந்த சோதனை புதுமையானது என்று வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லாரன்ஸ் யெங் பாராட்டியுள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *