”ஐ.நாவின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு அடியோடு நிராகரித்து ஐ.நாவைப் பகைப்பது மடைமைத்தனமானது” – எச்சரிக்கிறார் சஜித் பிரேமதாஸ!

“இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு அடியோடு நிராகரித்து ஐ.நாவைப் பகைப்பது மடைமைத்தனமானது”  என  எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ள ராஜபக்ச அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை அரசு வழங்குகின்றமையும், சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுகின்றமையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றமையும் மிகவும் கண்டனத்துக்குரியவை.

ராஜபக்ச அரசின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை இலங்கையிலுள்ளவர்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் எதிர்க்கின்றது என்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வெளிப்படையான உண்மைக் கருத்துக்கள் சான்று பகிர்கின்றன.

எனவே, இந்த அரசு திருந்தி நடக்கும் வழியைப் பார்க்க வேண்டும். இல்லையேல் வீட்டுக்கே செல்ல வேண்டி வரும்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *