பேரவையுடன் இணைந்து பயணிக்க மாவை.சேனாதிராஜாவுக்கு, சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு !

”கௌரவ மாவை சேனாதிராசா அவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் முன்னெடுப்புக்களை தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக மேற்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயகம் மற்றும் மனிதநேய பண்புகளுக்கு கிஞ்சித்தும் இடமளிக்காமல் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எல்லா அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி எவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நான் வரவேற்கின்றேன் இத்தகைய செயற்பாடுகள் அரசியல் கட்சிகளை மட்டுமன்றி ஏனைய பொது அமைப்புக்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி அரசியல் சாராத வகையில் முன்னெடுக்கப்படுவதே பொருத்தமானதாகவும் நிலையானதாகவும் அமையும்.

இவ்வாறான போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காகவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இத்தகைய பல்வேறு செயற்பாடுகளை தமிழ் மக்கள் பேரவை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு அல்ல. ஆகவே, கௌரவ மாவை சேனாதிராசா அவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் முன்னெடுப்புக்களை தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக மேற்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவையில் அவரும் இணைந்து அதன் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை நான் வகிப்பது பொருத்தமானது அல்ல.

ஏனைய அரசியல் கட்சிகள் இதில் இணைவதற்கும் பேரவையின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கும் இது தடையாக அமையும்.

இதனால், பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நான் பல தடவைகள் கோரிக்கை விடுதிருந்தும் பேரவையின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தொடர்ந்தும் அந்த பதவியை வகித்து வந்தேன்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றங்களின் கீழ் தமிழரசு கட்சி மற்றும் ஏனைய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் பேரவையில் இணைந்து மாபெரும் வெகுஜன கட்டமைப்பாக பேரவையை கட்டிய எழுப்பி அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வழி ஏற்படுத்தும் வகையில் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்று தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளேன்.

இதனை பேரவைக்கு இன்று அறிவித்துள்ளேன்.

தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகள் பேரவையில் அங்கம் வகித்து அதன் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும்.

தனிப்பட்ட ரீதியில் நான் என்னாலான சகல ஒத்துழைப்பையும் பேரவைக்கு வழங்குவேன்.

இதேவேளை, ஏற்கனவே மாவை சேனாதிராசா மேற்கொண்டுள்ள வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அடுத்த வாரம் முன்னெடுக்கவிருக்கும் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது முழுமையான ஆதரவை வழங்கும். இந்த போராட்டத்தை நடத்துவதற்கு மிகவும் குறுகிய காலமே இருப்பதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி இந்த போராட்ட ஏற்பாடுகள் நடைபெறுவதே பொருத்தமானது.

நடைபெறவிருக்கும் இந்த போராட்டம் எல்லா தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொதுஜன அமைப்புக்களும் உள்வாங்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களையும் உள்வாங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.” என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *