தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவதற்காகவே அதன் இணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் இணைய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் தான் நேற்று பேசியதாகவும், தமிழ் மக்கள் பேரவையை கட்சி சார்பற்ற வகையில் ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான நிலையை உருவாக்குவதற்காகவே இவ்வாறுதான் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய தேசிய ரீதியான பிரச்சினைகள் உருவாகும் போது தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களை ஒன்றிணைத்துச் செயற்படுவதற்கான சூழல் இதன்மூலமாக ஏற்படுத்தப்படும் என்பதால்தான் இவ்வாறான முடிவைத் தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவையை அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது கடந்தகாலங்களில் உருவாக்கப்பட்டிருந்த இந்த பேரவையானது தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியல்பின்னணி கொண்டதாக மாற்றப்பட்டது என்பதே கசப்பான உண்மையாகும். இந்நிலையியிலேயே வடக்கு – கிழக்கு இளைஞர்கள் புதிய பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மீளவும் இளைஞர்களுடைய சமூகம்நோக்கிய நிலையை தடுப்பதாகவே பேரவையினுடைய மீள்கட்டுமானம் அமையப்போகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.