இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று(18.09.2020) சென்றிருந்த ஞானசார தேரர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.
தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டது போல் எவரும் செயற்பட முயற்சித்தால், அது வரலாற்று ரீதியாக செய்யும் தவறு.
குறிப்பாக இரட்டை குடியுரிமையை எடுத்து கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கை பிரஜை எனக் கூறி நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.எப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.