ஏற்றுமதி அபிவிருத்தி சபை 28 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் ஒன்று கூடியது.
1979ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டது. ஏற்றுமதியாளர்களை வலுவூட்டி அத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது அதன் நோக்கமாகும். கொள்கைகளை வகுத்தல், அங்கீகரித்தல் மற்றும் பரிந்துரைகளை செய்தல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிகளாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையை வெற்றிகொண்டு மக்கள்மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்துவது இச்சபையின் விடயப்பரப்புக்கு உட்பட்டதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையை மீள செயற்படுத்தி, முதலாவது சந்திப்பு நேற்று (23.09.2020) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சட்டத்தின் பிரகாரம் இதன் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு உரியதாகும். துறையின் பிரச்சினைகளை தீர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மாதத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூட வேண்டுமென முன்மொழியப்பட்டது.
ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை விளக்கிய ஜனாதிபதி, அந்தந்த நாடுகளுக்கு தேவையான வகையில் ஏற்றுமதித்துறையில் பல்வகைத்தன்மையை கொண்டிருப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
கைச்சாத்திடப்பட்டுள்ள பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் நாட்டுக்கு அனுகூலமானவையல்ல. நாட்டுக்கு அனுகூலமான அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடிய வகையில் இந்த உடன்படிக்கைகளை விரைவாக மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஏற்றுமதித் துறையில் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையை விரைவாக மீளாய்வு செய்து புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் ஆரம்ப உற்பத்திகளை ஏற்றுமதி சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஏற்றுமதி காரணமாக கடந்த காலங்களில் ஏற்றுமதி துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பாரியதாகும். விவசாயிகளினதும் உற்பத்தியாளர்களினதும் நாட்டுக்கே உரிய உயர் தரத்துடன் கூடிய உயர்தரம் வாய்ந்த பயிர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது உயர் தரத்துடனும் சிறந்த கண்காணிப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உலக சந்தையில் சுதேச உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும். ஊக்கத்துடன் செயற்படுமாறு தான் தனிப்பட்ட முறையில் தூதுவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அடைந்துகொள்ள வேண்டியுள்ள இலக்குகளை அனைவருக்கும் நிர்ணயிக்க உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தூதரக அலுவலகங்களில் உள்ள வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிகளின் வினைத்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
விமான நிலைய வசதிகளை விரிவுபடுத்தி வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
ஏற்றுமதியாளர்களை அதைரியப்படுத்தும் தேவையற்ற சட்டதிட்டங்களை நீக்க வேண்டுமென பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.