30

30

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள 3 ஏரிகள் கண்டுபிடிப்பு !

மெல்லிய வளி மண்டலம் கொண்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பது சாத்தியமற்றது. ஆனால் தரைக்கு கீழே நீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த நிலையில்  இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு சொந்தமான மாஸ்எக்ஸ்பிரஸ் என்ற ஆய்வு களத்தின் ரேடாரில் உள்ள தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில் 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலப்பரப்புக்கு அடியில் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் அருகில் நிலத்துக்கு அடி யில் 1.5 கிலோ மீட்டர் கீழே புதைந்துபோன 3 ஏரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஆய்வின்போது கண்டறியப்பட்ட 4-வது ஏரி ஒன்று இருப்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

திரவ நிலையில் நீர் இருப்பது என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாது. எனவே இந்த கண்டுபிடிப்பு சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா? என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் உப்புதன்மை வாய்ந்தவையே என்று கருதப்படுவதால் அதில் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார் !

கடந்த 2006-ம் ஆண்டு முதல் குவைத் மன்னராக  உள்ளவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் ( வயது 91) .   தந்தையின் மறைவுக்குப் பின் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை நிர்வகித்து வந்த நிலையில் இவர் வயது (91) முதிர்வுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூலை 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23-ம் தேதி அழைத்து செல்லப்பட்டார். அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவருக்கு பதிலாக, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் நவாப் அல் அகமது சபா(83), தற்காலிக மன்னர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் இன்று காலமானார். மன்னர் இறப்பை அடுத்து, குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எண்ணெய் வளம்மிக்க நாடான குவைத், அமெரிக்காவுடனும், இங்கிலாந்துடனும் நெருங்கிய நட்பு பாராட்டியதற்கு வழிவகுத்தவர் அமீர் ஷேக் சபா. அரபு நாடுகளில் முக்கிய நாடாக குவைத் மாறியதற்கு அமீர் ஷேக் சபாவின் வெளியுறவுக் கொள்கை முக்கிய பங்காற்றியது எனக்கூறப்படுகிறது. அமீர் ஷேக் சபாவின் ஆட்சிக் காலத்தில் குவைத் பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்த நாடாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவுக்கு இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவு தொடர்பான இரங்கல் பதிவை  தனது ருவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார்.

குறித்த இரங்கல் பதிவில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “கெளரவத்துக்குரிய குவைத்தின் எமிரான ஷேக் சபா அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபாவின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்நிலையில் இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், குவைத் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.