ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும்.
அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல்
நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டைநாடான லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.
அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச்சென்றுவிட்டார். ஆனால் ஒருங்கிணைப்பாளர்களில் முக்கிய நபரான மரியா கொலிஸ்னிகோவா போலாரஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
இதனால், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், அதிபர் அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு அளித்து வருகிறார். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால், வல்லரசு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நடைபெறும் களமாக பெலாரஸ் மாறி வருகிறது. இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ நேற்று பெலாரஸ் நாட்டின் அதிபராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டதாக அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டது. மேலும், அவர் ரகசிய காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெலாராஸ் நாட்டின் ஜனாதிபதியாக அலெக்ஸ்சாண்டர் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை எனவும், தேர்தல் முறைகேடுகளுடன் நடைபெற்றுள்ளதால், அவர் ஜனாதிபதியாக அங்கீகரிக்க முடியாது என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவும் பெலாரஸ் அதிபராக அலெக்சாண்டரை ஏற்றுக்கொள்ளவில்லை என அறிவித்துள்ளது.
பெலாரஸ் அதிபராக அலெக்ஸ்சாண்டர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அந்நாட்டு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அலெக்ஸ்சாண்டர் பதவி விலகக்கோரி 1 மாதத்திற்கு மேலாக பெலாரசில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.