08

08

மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவான, பிரேமலால் ஜயசேகரவுக்கு, பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி வழங்க வேண்டும் என்பதோடு, அவரை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று (07) சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று (08) பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை வேனில் அழைத்து வரப்பட்டிருந்தார்.

சிறைச்சாலையிலிருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் அமளி துமளிக்கு மத்தியில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின்  பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பலரும் பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணம் முறையற்றது என தெரிவித்து அது அரசியலமைப்புக்கு முரணானது என்றும்  வாதிட்டிருந்தனர்.

இந்த நிலையில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சகல உரிமையும் உள்ளது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்பை மீறவில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர 104,237 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி கொலை வழக்கு தொடர்பில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தமிழீழ வங்கிகளில் வைப்புச் செய்திருந்த தமிழ்மக்களின் நகைகள் என்னவாயிற்று ? – பாராளுமன்றில் ஸ்ரீதரன் கேள்வி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது, எமது மக்களின் தங்கங்களை ஏன் மீண்டும் எமது மக்களுக்கு கொடுக்க மறுக்கின்றீர்கள்?  அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்வடாறு தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் நுண் கடனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தத்தைக் காரணங்காட்டி வடக்கு, கிழக்கில் கடந்தக் காலங்களில் பொருளாதார வசதிகள், அபிவிருத்திகளை கடந்த அரசாங்கங்கள் செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படட அபிவிருத்தித் திட்டங்களால் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. கிளிநொச்சியில் 7 பேர் நுண் கடன் திட்டங்களால் தற்கொலை செய்திருக்கிறார்கள். எனவே இது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மோசடி செய்பவர்கள் யாரும்  நாடாளுமன்றத்திற்கு  வரமாட்டார்கள்,” – பாராளுமன்றில் அனுரகுமார

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மோசடி செய்பவர்கள் யாரும்  நாடாளுமன்றத்திற்கு  வரமாட்டார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற அமர்வில் அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மோசடி செய்பவர்கள் யாரும்  நாடாளுமன்றத்திற்கு  வரமாட்டார்கள், அணிந்திருக்கும் ஆடை வெள்ளையாக இருந்தாலும் அவர்களது உள்ளங்கள் கருமையாகதான் காணப்படுகின்றது.

இப்போது எனது கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு எழும்பியவர்களில் பெரும்பாலானோர் நில மோசடி, வரிமோசடி மற்றும் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர்களேயாவர்.

மோசடி செய்பவர்களையும் குற்றவாளிகளையும் தண்டிக்கும் அதிகாரம் தனக்கு இருந்தால், இன்று ஆளும் கட்சியில் பலர் இருக்க மாட்டார்கள்.

1989ஆம் ஆண்டு சம்பவங்கள் நடைபெற்றிருந்தால் தண்டனை வழங்குவதற்கு 31வருடங்கள் இருந்தன. தண்டிக்கப்பட நாங்களும் விரும்புகின்றோம்.

தற்போது வாதிட்ட புதிய முகங்கள் தொடர்பாக எனக்கு பெரிதாக தெரியாது, ஆகவே பழைய முகங்கள் எழும்பினால் அவர்கள் தொடர்பாக என்னால் பல விடயங்களை தெரியப்படுத்த முடியும்.

தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ளது புதிய அரசாங்கம் அல்ல. சிறிய மாற்றங்கள் மாத்திரமே இந்த அரசாங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

நான் மேன்மையை அழிக்க விரும்பவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை ஜனாதிபதியாகவும் தற்போது பதவிக்கு வர முடியும் ! – ஹர்ஷ டி சில்வா

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள 20வது சீர்திருத்தம் தொடர்பாக இலங்கையின் ஒவ்வொரு தரப்பினரும் தங்களுடைய கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் முன்வைத்த வண்ணமுள்ளனர். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ராஜபக்ஸக்களுக்கேற்றாற் போல சீர்திருத்தம் உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பஷில் ராஜபக்க்ஷ நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவிக்கு வர எண்ணியிருந்ததால், அதற்கான தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை ஜனாதிபதியாகவும் தற்போது பதவிக்கு வர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவது தடை ! – ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த யோசனை.

இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று காலை நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

இதற்கு மாற்றீடாக வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு பின் இந்த யோசனை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”பலஸ்தீனர்களுக்கான நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கு சவூதி ஆரேபியா ஆர்வமாக உள்ளது.” – டொனால்ட் டிரம்பிடம் சவூதி ஆரேபியா மன்னர் தெரிவிப்பு.

பலஸ்தீனர்களுக்கான நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கு சவூதி ஆரேபியா ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் உரையாடிய போதே இதனைத் தெரிவித்ததாக சவூதி அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் அமைதி முயற்சியை பாராட்டி இருக்கும் மன்னர் சல்மான், 2002இல் சவூதியினால் பரிந்துரைக்கப்பட்ட அரபு அமைதி முயற்சியை அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீனர்களுக்கு நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை காண சவூதி அரேபியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

அந்த பரிந்துரையின் கீழ், 1967 மத்திய கிழக்கு போரில் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெற்று பலஸ்தீனத்துடன் தனி நாடு ஒன்றுக்கான உடன்படிக்கைக்கு பகரமாக இஸ்ரேலுடன் அரபு நாடுகள் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் பிறந்தகமும், இரு புனிதத் தலங்களையும் கொண்டிருக்கும் சவூதி அரேபியா இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை.

எனினும் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் விமானங்களுக்கு தமது வான் பகுதியை பயன்படுத்த சவூதி அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் மற்றொரு அரபு நாடு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் என்று டிரம்பின் மருமகனும் வெள்ளை மாளிகை ஆலோசகருமான ஜரட் குஷ்னர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றுவது குறித்து வேறு எந்த அரபு நாடும் உறுதி அளிக்கவில்லை.

“ஜோ பிடனும், கமலா ஹாரீஸும் அமெரிக்க பொருளாதாரத்தை அழித்துவிடுவார்கள்“ – டொனால்ட் ட்ரம்ப்

கொரோனா தடுப்பூசி தொடர்பாக சர்ச்சைக்‍குரிய வகையில் கருத்து தெரிவித்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும், துணை வேட்பாளர் கமலா ஹாரீஸும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்‍க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார்.ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். மேலும் அக்கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு  கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.

தேர்தலையொட்டி தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமலா ஹாரிஸ், ஹாரிஸ் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில், கொரோனா தடுப்பூசி பற்றிய டிரம்பின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை எனக்கூறினார். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் கூறுவதை மட்டும்தான் நான் நம்புவேன். டிரம்ப் கூறும் கருத்துகளை நம்பமாட்டேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிர்பர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா தடுப்பூசி தொடர்பாக சர்ச்சைக்‍குரிய வகையில் கருத்து தெரிவித்த ஜோ பிடனும், கமலா ஹாரீஸும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிபர் வலியுறுத்தியுள்ளார். தனது தலைமையிலான அரசு கொரோனா வைரசுக்‍கு விரையில் தடுப்பூசியை உருவாக்‍கும் என உறுதியுடன் கூறினார். ஜோ பிடனும், கமலா ஹாரீஸும் அமெரிக்க பொருளாதாரத்தை அழித்துவிடுவார்கள் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதில் தொடரும் இழுபறி !

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி நியமிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சஜித் பிரேமதாஸ கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து,  கட்சியின் புதிய பிரதி தலைவரை செயற்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிஸ்ஸங்க நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக தற்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக பல தடவைகள் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். எனினும் இதுவரையில் தீர்மானமிக்க முடிவொன்று அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலை விதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கது.

 

பெலாரஸ் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கடத்தல் ! – பெலாரஸில் தொடரும் பதற்றம்.

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.  அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை எனவும், அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகி அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஒன்று எதிர்க்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா, வெரோனிகா டிசிப்கலோ மற்றும் மரியா கொலிஸ்னிகோவா என்ற மூன்று பெண்கள் முக்கிய நபர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள், தேர்தல் முடிவுக்கு வந்த சில நாட்களில் ஸ்வியாட்லானா மற்றும் டிசிப்கலோ ஆகிய இருவரும் பெலாரசை விட்டு தப்பிச்சென்று அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.
ஆனால், மரியா கொலிஸ்னிகோவா மட்டும் பெலாரசிலேயே இருந்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மின்ஸ்க்கில் மரியா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான மரியா கொலிஸ்னிகோவாவை மர்ம நபர்கள் நேற்று காலை கடத்திச்சென்றுள்ளனர். முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்
மரியா மற்றும் அவரது உதவியாளர்கள் சிலரை மினி வேனில் கடத்தி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சிலரும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கருத்து தெரிவித்துள்ள பெலாரஸ் பாதுகாப்புத்துறை மரியாவை நாங்கள் கைது செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் முக்கிய தலைவர்கள் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெலாரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவங்களால் மக்களின் போராட்டம் தொடர்ந்து அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று கூடுகின்றது பாராளுமன்றம் !

நாடாளுமன்றம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுதாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழான ஒன்பது ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாளை மறுதினம் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆறு தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

அத்துடன், நாளை பிற்பகல் ஒரு மணி முதல் பிற்பகல் ஏழரை மணி வரையும், நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் ஏழரை மணிவரையும் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன்தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 மணி முதல் 6.30 மணிவரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றவுள்ளனர்.