பெலாரஸ் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கடத்தல் ! – பெலாரஸில் தொடரும் பதற்றம்.

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.  அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை எனவும், அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி அலெக்சாண்டர் தனது பதவியில் இருந்து விலகி அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு ஒன்று எதிர்க்கட்சி சார்பில் அமைக்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா, வெரோனிகா டிசிப்கலோ மற்றும் மரியா கொலிஸ்னிகோவா என்ற மூன்று பெண்கள் முக்கிய நபர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள், தேர்தல் முடிவுக்கு வந்த சில நாட்களில் ஸ்வியாட்லானா மற்றும் டிசிப்கலோ ஆகிய இருவரும் பெலாரசை விட்டு தப்பிச்சென்று அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.
ஆனால், மரியா கொலிஸ்னிகோவா மட்டும் பெலாரசிலேயே இருந்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மின்ஸ்க்கில் மரியா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான மரியா கொலிஸ்னிகோவாவை மர்ம நபர்கள் நேற்று காலை கடத்திச்சென்றுள்ளனர். முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்
மரியா மற்றும் அவரது உதவியாளர்கள் சிலரை மினி வேனில் கடத்தி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சிலரும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கருத்து தெரிவித்துள்ள பெலாரஸ் பாதுகாப்புத்துறை மரியாவை நாங்கள் கைது செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் முக்கிய தலைவர்கள் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெலாரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவங்களால் மக்களின் போராட்டம் தொடர்ந்து அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *