பலஸ்தீனர்களுக்கான நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கு சவூதி ஆரேபியா ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் உரையாடிய போதே இதனைத் தெரிவித்ததாக சவூதி அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் அமைதி முயற்சியை பாராட்டி இருக்கும் மன்னர் சல்மான், 2002இல் சவூதியினால் பரிந்துரைக்கப்பட்ட அரபு அமைதி முயற்சியை அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீனர்களுக்கு நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை காண சவூதி அரேபியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
அந்த பரிந்துரையின் கீழ், 1967 மத்திய கிழக்கு போரில் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெற்று பலஸ்தீனத்துடன் தனி நாடு ஒன்றுக்கான உடன்படிக்கைக்கு பகரமாக இஸ்ரேலுடன் அரபு நாடுகள் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் பிறந்தகமும், இரு புனிதத் தலங்களையும் கொண்டிருக்கும் சவூதி அரேபியா இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை.
எனினும் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் விமானங்களுக்கு தமது வான் பகுதியை பயன்படுத்த சவூதி அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் மற்றொரு அரபு நாடு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் என்று டிரம்பின் மருமகனும் வெள்ளை மாளிகை ஆலோசகருமான ஜரட் குஷ்னர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றுவது குறித்து வேறு எந்த அரபு நாடும் உறுதி அளிக்கவில்லை.