கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம் !

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (24.09.2020) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பாடசாலையின் பிரதான வாயிலை மறித்து இடம்பெற்ற இந்தப் போராட்டத்தினால் பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணிநேரம் இடம்பெறவில்லை.

262 மாணவர்களைக் கொண்ட குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக அதிபர் அடங்கலாக 19 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்றனர்.

இவ்வாறான நிலையில் நேற்று பாடசாலை மாணவர் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்கு வருமாறும் பாடசாலை ஒழுக்க விதிகளைப் பேணுமாறும் பாடசாலை அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாகவும், தடுக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களைப் பாதுகாத்துத் தருமாறு கோரி பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி கோட்டக்கல்லி அதிகாரி தர்மரட்ணம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் பெற்றோரிடம் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை, பாடசாலையின் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும், உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் கிளிநொச்சி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *