யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம்- பாண்டிருப்பு பகுதியில் நேற்று (14.09.2020) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் தவராசா கலையரசன் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் ஏற்பட்ட இன ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கல்வியாளர்கள் , புத்திஜீவிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள். தொன்மையான பூர்வீக நிலம், கட்டம் கட்டமாக அழிக்கப்பட்டு தமிழர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்களா என்ற நிலை தோற்றுவிக்கப்படும் .
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது. இந்த அரசு தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றது .
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தி தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர்.
அதேபோன்று 2020 நாடாளுமன்ற தேர்தலில் அரசு வழங்கிய வாக்குறுதியை நம்பி, 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்தனர். இது கல்முனை மக்களுக்கு எதிராக கிடைத்த ஏமாற்றம் அல்ல. இந்த நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் இதனையே செய்து வருகிறது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற கருணா, வாக்கெண்ணும் நிலையத்தில் வைத்து தமிழ் தரப்பில் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது என்பதனை அறிந்தவுடன் எனது பணி நிறைவேறியது என வெளியேறினார்.
யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா, இவரை இன்னும் நம்பினால் தமிழர்கள் இனி அழியப்போகின்றோம் என்ற செய்தியைதான் குறிப்பிடுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.