காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.
அத்துடன், சீனோர் நிறுவனத்தினூடாக பயணிகள் போக்குவரத்து படகுகளை உருவாக்கி அவற்றை கொழும்பில் பயணிகளில் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ள நிலையில் இவ் வேலைத் திட்டம் தொடர்பிலும் ஆராயுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சின் செயற்றிட்ட ஆய்வு மற்றும் மீளாய்வுக் கூட்டம் நேற்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு மாநாட்டு மண்பத்தில் நடைபெற்ற நிலையிலேயே சீனோர் அதிகாரிகளிடம் அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்துள்ளார்.
சீனோர் நிறுவனத்தின் படகு கட்டும் செயற்பாடுகள் கடந்த காலத்தில் வினைத் திறனுடன் மேற்கொள்ளப்படாமையினால் அவற்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்ட்டுள்ளதுடன் சீனோர் நிறுவனம் பற்றிய நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழந்த நன்மதிப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, பயணிகள் படகுகளை உருவாக்கி கொழும்பு நகரில் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
காரைநகரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய ரக படகுகளை உருவாக்கும் உட்கட்டுமானங்களைக் கொண்ட தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவதன் மூலம் சிறிய ரக படகுகளை உருவாக்க முடியுமெனவும் தெவித்தார்.