அரசாங்கத்தினால் நாட்டின் கல்விமுறை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ‘டிஜிட்டல் தளங்களில்’ யோசனைகளை முன்வைக்க முடியும். இதனூடாக 2023 ஆம் ஆண்டில் எமது மாணவர்களுக்கு மிகச்சிறந்த கல்விமுறையொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கைப் பாடசாலை மாணவர்களின் கல்வி கற்றல் காலத்தில் 9 மாதங்கள் அவர்களை கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைக்கும் வகையிலான கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய கல்விமுறையின் பிரகாரம் சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெற்று வருகின்றது. இதன் போது சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உயர்தரத்திற்கான தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கும் இடையில் 9 மாதகால இடைவெளி காணப்படுகின்றது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு அவ்விரு பரீட்சைகளும் நடைபெறும் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது சிறந்த தீர்வாக அமையும்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் மாதம் நடைபெற்றால் அதற்குரிய பெறுபேறுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும். எனினும் உயர்தர மாணவர்கள் இருக்கின்ற காரணத்தினால் சாதாரண தரம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உடனடியாகப் பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியாத நிலையேற்படும். உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைந்ததன் பின்னரே அந்த மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியும்.
அதேபோன்று க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகும். பெறுபேறுகள் வெளிவந்ததன் பின்னர் மீள்திருத்தப்பணிகள் இடம் பெறுவதற்கு சுமார் 3 – 5 மாத காலம் தேவைப்படும். அதன் பின்னரே பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டால், அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அவர்கள் உயர்தரத்திற்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். க.பொ.த உயர்தரப்பரீட்சை டிசம்பர் மாதத்தில் நடைபெற்றால் அதன் பின்னர் அம்மாணவர்கள் பாடசாலைக்க சமூகமளிக்க மாட்டார்கள். மேலும் உயர்தரப் பரீட்சையின் மூலம் தெரிவாகும் மாணவர்களின் மாவட்டங்களை நிர்ணயிப்பதை இலகுவாக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பதிவாளர் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்று தயாரிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் ‘சுபீட்சமான எதிர்காலம்’ கொள்கைத்திட்டத்தின் 21 ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றங்கள் இடம்பெறுகின்றது. சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எடெக்ஸல், கேம்பிரிட்ஜ், லண்டன் போன்ற பரீட்சைகளுக்குத் தோற்றுவதன் ஊடாக மிச்சப்படுத்திக்கொள்ளக்கூடிய காலத்தை தற்போது ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் ஊடாக எமது நாட்டின் கல்வி முறையைப் பின்பற்றும் மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.