“எமது நாட்டை ஒரு சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்றே துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன்.” அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.
இவ்விடயத்தில்,கட்சித் தலைமை தன்னிடம் எந்த அபிப்பிராயத்தையும் கோரவில்லை என்றும் அவர்தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்மைக்காக கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது.
இத்திட்டத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்குமாறு கட்சியின் தலைவர் என்னிடம் எதையும் தெரிக்கவில்லை. அதனால் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு நான் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன்.முஸ்லிம்கள், இந்நாட்டில் சிறுபான்மையாக வாழும் சந்தர்ப்பத்தில் எமது அநுராதபுரம் மாவட்டத்தில் குறைந்த ஒரு தொகையினரே முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை.இந்த அரசில் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் பின்னடைந்து காணப்படும் எமது மாவட்டத்தில், இதுவரை ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையே உள்ளது. இதனை இம்முறை நான் சுட்டிக்காட்டிய போது, மேலும் நான்கு முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டன.எமது நாடு தொடர்ச்சியாக பாரிய கடன் சுமைக்கு உள்ளாகி உள்ளது.இதனால் வெளிநாட்டு நிதி உதவிகளை கொண்டுதான் எமது நாட்டை வளமிக்க நாடாக மாற்ற வேண்டும்.
எமது நாட்டை ஒரு சிங்கப்பூராக மாற்ற வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் தேவை.இதற்காக வாக்களித்ததனால் எமது சமூகத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படப் போவதில்லை. எனவே நாட்டு நலனையும் எமது சமூக நலனையும் கருத்திற் கொண்டு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதராக வாக்களித்தேன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை இடைநிறுத்தியுள்ளதாக இதுவரை உத்தியோகபூர்வமான எந்த அறிவித்தலும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.
அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் கொழும்பு தறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், கட்சியிலிருந்து அவ்விருரையும் இடைநிறுத்தியதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
இதே நேரத்தில் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் துறைமுக நகர சட்டமூலத்துக்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமையானது முஸ்லீம் கட்சிகள் ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதை காட்டுவதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.