06

06

துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,300ஐ தாண்டியது !

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிச்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிச்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது.

மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலில் சுடப்பட்ட விவகாரம் – பதிலடி வழங்குவோம் என சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவின் மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சட்டபூர்வமான நடவடிக்கை என்றும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு சீனா கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் எனவும், இதற்கு தேவையான பதில் நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் – இதுவரை 195 பேர் பலி !

துருக்கி, சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவான நிலையில் இருநாடுகளிலும் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது.

காசியான்டேப் நகரம் சிரிய எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 195 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியிலிருந்து சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் இடிந்த கட்டிடங்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் என வேதனைகளை சாட்சியாக்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளைப் பார்க்கும்போது பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கி அதிபர் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யாதீர்கள் – மக்களை அறிவுறுத்தும் நியூசிலாந்து..?

இலங்கைக்கு பயணம் செய்வதற்கு எதிராக நியூஸிலாந்து மக்கள் அறிவுறுத்தப்படவில்லை என நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச சுற்றுலாத்துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நியூசிலாந்து அங்கீகரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்குச் செல்வதற்கு எதிராக நியூசிலாந்து மக்களுக்கு இரண்டு வகையான பயண ஆலோசனைகள் உள்ளன.

‘பயணம் செய்ய வேண்டாம்’ ‘அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்’. என்பதே அவையாகும். தற்போது 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வகையான பயண ஆலோசனைகள் உள்ளன. எனினும் அதில் இலங்கை உள்ளடங்கவில்லை.

மாறாக, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் இலங்கை இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் நியூசிலாந்து மக்கள் ‘அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் ‘என்பதையே தாம் அறிவுறுத்தியதாக உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான நியூசிலாந்தின் பயண ஆலோசனைகள் அண்மையில் ‘இறுக்கப்பட்டுள்ளன’ என்று ஒரு செய்தி தவறாகக் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விளக்கத்தை நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளது.