துருக்கி, சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவான நிலையில் இருநாடுகளிலும் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது.
காசியான்டேப் நகரம் சிரிய எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 195 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியிலிருந்து சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் இடிந்த கட்டிடங்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் என வேதனைகளை சாட்சியாக்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளைப் பார்க்கும்போது பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
துருக்கி அதிபர் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.