09

09

“அதிகரிக்கும் கனடா – சீனா இடையான முரண்பாடு.” – தூதுவரை வெளியேற உத்தரவிட்ட சீனா !

கனடா மற்றும் சீனா இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. சீனாவின் ஹூவாவெய் பகுதியை சேர்ந்த முக்கிய நபரை கனடா கைது செய்தது. இதற்கு பதிலடியாக சீனாவும், கனடா நாட்டை சேர்ந்த 2 பேரை தனது நாட்டில் வைத்து கைது செய்தது. அவர்கள் 3 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் கொள்கையை கனடா பின்பற்றுகிறது என கூறி தொடர்ந்து அந்நாடு மீது சீனா குமுறலை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் இனப்படுகொலை நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை ஆதரித்ததற்காக கனடாவின் எம்.பி.யான மைக்கேல் சோங் மற்றும் அவரது உறவினர்களை ஹாங்காங்கில் வைத்து சீன உளவு அமைப்புகள் கைது செய்ய திட்டமிட்டன. இதுபற்றி அறிந்ததும் கனடா அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில், கனடா வெளியுறவு மந்திரி மெலானி ஜோலி கூறும்போது, இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக சீன தூதர் ஜாவோ வெய், கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என கூறினார். எங்களது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை எந்த வடிவிலும் நாங்கள் சகிக்கமாட்டோம் என அவர் கூறினார். கனடாவில் உள்ள மற்ற வெளிநாட்டு தூதர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கையை கனடா விடுத்துள்ளது. இந்த நிலையில், இதற்கு பதிலடியாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், வருகிற மே 13-ந்திகதி சீனாவில் இருந்து வெளியேறும்படி, கனடா தூதர் ஜெனிபர் லின் லாலண்டுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என அறிவித்தது. இதுபோன்ற காரணமற்ற முறையிலான ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்தும்படி கனடாவை சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் வலியுறுத்தி உள்ளார்.

“உக்ரைன் போருக்கு மேற்கு நாடுகளின் ஆணவமே காரணம்.” – புடின் காட்டம் !

கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் நாசி படைகளை வீழ்த்தி வெற்றி பெற்ற தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக ரஷ்ய அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்டத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மேற்குலக நாடுகள் உண்மையான நாசிக்களின் வழிமுறைகளை உருவாக்கி வருவதாக புடின் குற்றம்சாட்டினார்.

ரஷியாவை தாக்குவதற்காக திட்டமிடும் மேற்கு நாடுகள், 2-ம் உலகப்போரின் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்வதாகவும், தற்போது நாகரீகத்தின் முக்கியமான திருப்புனையில் நாம் இருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் உக்ரைன் பிரச்சினைக்கு மேற்கு நாடுகளின் கட்டுப்பாடற்ற இலக்குகளும், ஆணவமும் தான் காரணம் என்று தெரிவித்த அவர், நமது தாய்நாட்டின் மீது உண்மையான போர் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது கைது !

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், தேசத்துரோகம், மதநிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராணுவம், உளவு அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக ராணுவம் தெரிவித்த மறுநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்ற இம்ரான் கான், நீதிமன்றத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்தபோது, ரேஞ்சர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து, வழக்கறிஞர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கி, இம்ரான் கானை கைது செய்து கைது செய்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மசாரி தெரிவித்துள்ளார். ‘என்ன சட்டங்கள் இவை? நிலத்தை ஆக்கிரமிப்பது போல் ரேஞ்சர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதுதான் இன்றைய பாகிஸ்தான். துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு இது. அரச பயங்கரவாதம், ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை தாக்கி, இம்ரான் கான் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவரை கடத்திச் சென்றுவிட்டனர்’ என்றும் மசாரி கூறி உள்ளார். ரேஞ்சர்கள் இம்ரான் கானை சட்டை காலரைப் பிடித்து சிறை வேனில் ஏற்றிச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.