11

11

இம்ரான்கானை விடுதலை செய்தது உயர் நீதிமன்றம் !

நீதிமன்றத்தில் வைத்து இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதம் என கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

ஊழல் வழக்கில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ´ரேஞ்சர்ஸ்´ எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை, 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இம்ரான் கான் கைது சட்ட விரோதம், நீதிமன்றத்தில் யாரையும் கைது செய்யக்கூடாது. அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி அவர் மீதான வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டார்.

 

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் – விசாரணைகளை ஆரம்பித்த ஐ.சி.சி !

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளதா..? என்பதை ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா உள்ளிட்ட இரு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

குழுவின் ஏனைய உறுப்பினராக பங்களாதேஷ் துடுப்பாட்ட சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் உள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.சி.சி. அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தகவல்கள் கண்டறிவார்.

அரசியல் தலையீடுகள் குறித்து சிறிலங்கா கிரிக்கெட் தரப்பில் இருந்து பலமுறை முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்திருந்தது.

இதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஐ.சி.சி தலைவர் கிரே பார்க்லேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி சந்திப்பொன்றை மேற்கொள்ள சந்தர்ப்பமொன்றை கோரினார்.

இந்நிலையிலேயே இந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2022ல் அரசியல் தலையீடு இலங்கை கிரிக்கெட்டில் நிரூபிக்கப்படுமாயின் ஐசிசி உறுப்புரிமை ரத்து செய்யப்படலாம்.

ஐ.சி.சி.யின் விதிகளின்படி, விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்துடன் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.