05

05

‘“சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டு வராது.” – சாள்ஸ் நிர்மலநாதன்

வேறு நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாது சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டு வராது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு பிறகு வருகின்ற ஆட்சியாளர்கள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நிபுணர் குழு ஒன்றை நியமித்த போதும் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று வரும் என்று நம்பிக்கையில்லை. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்சைப் பொறுத்தவரை அரசியல் யாப்பு தொடர்பான நீண்டகால அனுபவம் உள்ள ஒருவர்.

ஆனால் சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் யாப்பை இலங்கை அரசாங்கம் கொண்டு வராது. அதற்கு வேறு நாடுகள் மத்தியஸ்தம் வகித்து இன ரீதியாக தமிழர்கள் பாதிகட்கப்படும் விடயங்களை வலியுறுத்துவதன் மூலமே தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்று வருமே ஒழிய இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியில் தமிழர்கள் இன ரீதியாக, கௌரவமாக வாழக்கூடிய வகையில் அரசியலமைப்பில் எந்தவொரு மாற்றமும் வராது என்பது என்னுடைய கருத்து எனத் தெரிவித்தார்.

மெஹாலி டெஸ்ட் – இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த ஜடேஜா – இலங்கை அணிக்கு முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் !

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று (05) இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டி இந்தியாவின் மொஹாலியில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

ரிசப் பந்த் 96 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தலைவர் கருணாரத்ன 28 ஓட்டங்கள், லகிரு திரிமன்னே 17 ஓட்டங்கள், மேத்யூஸ் 22 ஓட்டங்கள், தனஞ்செய டி சில்வா 1 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் நாள் முடிவில் பதும் நிசங்கா 26 ஓட்டங்களுடனும், அசலங்கா 1 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி, இந்தியாவை விட 466 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஒரே நேரத்தில் அதிக போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞன் யாழில் உயிரிழப்பு !

போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர், நேற்றிரவு உயிரிழந்தார். சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து போதை மாத்திரைகளை இருவர் வாங்கியுள்ளனர்.

தண்ணீரில் நனைந்த போதை மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு காணப்பட்டுள்ளது. அவற்றை ஒரேயடியாக உயிரிழந்த இளைஞன் உட்கொண்டார் என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு போதை மாத்திரைகளை உட்கொண்ட மற்றையவரிடமும் விசாரணையின் போது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

“கையெழுத்துப்போராட்டங்களால் எந்த பயனும் இல்லை.” – சுமந்திரன் தரப்பை சாடியுள்ள கு.திலீபன் !

“இலங்கை தமிழர் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை– கருத்தை நாம் வரவேற்கின்றோம்.” எம்.ஏ.சுமந்திரன் 

“இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் எந்த விதத்திலும் போதாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலில் பல நாடுகள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோல் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என இம்மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் போதும் என இந்தியா ஏற்கவில்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அந்நாடு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை – கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவம் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்” – என்றார்.

“எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போது என் முகத்தை மூடிக் கொள்கிறேன்.” – ஆளுங்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க

எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்கள் என அஞ்சுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று எரிபொருள் பிரச்சினை முழு இலங்கையையும் பாதித்துள்ளது. நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போது என் முகத்தை மூடிக் கொள்கிறேன். நான் ஓட்டுனரை விரைவாக செல்லச் சொல்கிறேன். அப்படியொரு நிலை உருவாகியுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கசப்புடன் உள்ளனர். நானும் 12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், விரக்திதான் மிச்சம் எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா – ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் !

உக்ரைன் மீது 10வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகிறார்கள். அவர்கள் எல்லையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டினரும் வெளியேறி வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தாக்குதல் தீவிரமடைந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் அங்கிருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியவில்லை. சண்டை நடக்கும் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. அந்த நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மீட்பு பணி தொடங்கி உள்ளது.
அதேசமயம் மற்ற பகுதிகளில் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்கிறது. குறிப்பாக தலைநகர் கீயுவில் தொடர்ந்து முன்னேறுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இன்று செர்னிவ் நகரில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ரஷ்ய படையின் வாகன அணிவகுப்பு கீயுவில் முன்னேறுகிறது.
இதனையடுத்து உக்ரைன் இராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பதிலடி கொடுக்கத் தொடங்கி உள்ளது.  விமான தாக்குதலை சமாளிக்கும் வகையில் ஏவுகணைகளை செலுத்தியவண்ணம் உள்ளது. செர்னிவ் புறநகர்ப்பகுதியில் ரஷியாவின் ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி எங்கே..? – வெளியாகியுள்ள காணொளி !

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி நாட்டைவிட்டு போலந்துக்கு தப்பி ஓடியதாக வதந்தி பரவியது. இதை மறுத்துள்ளார் அந்நாட்டின் ஜனாதிபதி  இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் செல்ஃபி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய செலன்ஸ்கி, தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் கூறி உள்ளார். ‘நான் கீவ் நகரில்தான் இருக்கிறேன். இங்கிருந்துதான் எனது பணிகளை மேற்கொள்கிறேன்’ என்றும் செலன்ஸ்கி தனது செல்ஃபி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி இருக்கும் கீயுவ் நகரில் இரவு பகலாக ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

“யாழில் வீட்டுத்திட்டமாக வழங்கப்பட்ட 700 வீடுகளில் மக்கள் யாருமே இல்லை.” – அங்கஜன் இராமநாதன் விசனம் !

வீட்டுத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 700 வீடுகளில் நிரந்தமாக மக்கள் குடியேறாத நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

சில நடைமுறை சிக்கல்கள் உட்பட வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

வீட்டுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் தங்களின் காணிகளில் குடியேற வேண்டும் என அதிகாரிகள் கூறுவதாகவும் வீடுகள் இல்லாத காணிகளில் எவ்வாறு தாம் குடியேறுவது என மக்கள் கேட்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீட்டு திட்டங்கள் முன்னர் வழங்கப்பட்ட பலர் வீடுகளை தமது காணிகளில் கட்டிவிட்டு அவர்கள் வேறு இடங்களில் வசிக்கின்றனர் என்றும் குறித்த வீடுகளை தங்கள் “விடுமுறை விடுதியாக” பலர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் வீட்டு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி போதாது என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும் தற்போதைய விலைவாசி அதிகரிப்பு இதற்கு காரணம் என்றும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

 

சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நிமலனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2007 மே 28 ஆம் திகதி இரத்மலானையில் விசேட அதிரடிப்படையினர் சென்ற ட்ரக் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியமை குறித்தும் விசாரணை இடம்பெறுகின்றது.

மேலும் 2009 பெப்ரவரி 7 இல் குருநாகலில் அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தமை குறித்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

2009 மார்ச் 13 ஆம் திகதி அக்குரஸ்ஸ தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் உட்பட 46 பேரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பாகவும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுகின்றன.

அத்துடன், 2009 ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பாகவும் தங்கவேலு நிமலனுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.