07

07

எத்தியோப்பியா, சோமாலியா நாடுகளை விட மோசமான மருந்துப்பற்றாக்குறை இலங்கையில் !

மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், பிரச்சினையை மறைக்காமல், பொதுமக்களின் பாதுகாப்புக்காக மருந்துகளுக்கான மனிதாபிமான உதவியைப் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும் என சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்

சுகாதார நிபுணர்கள் சங்க தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில், சமீபகால வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடிகள் எத்தியோப்பியா, சோமாலியா, வடகொரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்படவில்லை.

தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை வழங்கும் 60% களஞ்சிய சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ளவை 4 முதல் 6 வாரங்களில் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகாரசபையால் வேண்டுமென்றே இந்த நிலைமை உருவாக்கப்பட்டதாகவும், போதைப்பொருள் ஏகபோகமும், ஒழுங்குமுறை மாஃபியா என்றழைக்கப்படுவதே இந்த தாமதங்களுக்கு முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைத்து விடுங்கள்.” – நிதி அமைச்சர் பசில் புதிய ஆலோசனை !

நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் இன்று தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச  கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கு தேவையான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு டீசல் , பெற்றோல் விரைவில் !

இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

இலங்கைக்கு கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்வதற்கான உத்தரவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.

அத்தோடு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் முழு கொள்ளளவில் இயங்கி வருவதாகவும் அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மேலும் சுத்திகரிப்பு நோக்கங்களுக்காக நிலையங்களில் 208,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் இருப்பை வைத்திருக்க முடியும் என அமைச்சர் கூறினார்.

இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனித்து வருவதாகவும், நுகர்வோர் மற்றும் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

“ நம் இனத்தின் விடுதலைக்காகவும் தமிழரசுக்கட்சியின் மகளிர் அணியினர் போராடுவார்கள்.” – மாவை சேனாதிராசா

எந்த இலட்சியத்திற்காக எமது இளைஞர்கள் கடந்தகாலத்தில் தம் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியத்தினை எட்டும்வரையில் எமது பயணம் ஓயாது என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சி – பசுமைப் பூங்காவில், இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சிமாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, 2022ஆம் ஆண்டிற்கான மகளிர்தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

 

கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிற்பாடு தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்த 90ஆயிரம் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்காக நாம் ஆட்சியாளர்களிடத்திலே பேசினோம். அந்த 90ஆயிரம் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்காக நான் பிரார்த்திக்கின்றேன்.

குறிப்பாக அப்போதிருந்த பிரதமர் மற்றும், ஜனாதிபதி, நீதியமைச்சர் ஆகியோரிடத்திலே பேசினோம். அதனடிப்படையில் வரவு செலவுத்திட்டத்திலே பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்காக இரண்டுகளாக நிதிகளும் ஒதுக்கப்பட்டன. அத்தோடு போராலே பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
அவை திருப்தி அடையக்கூடிய விதத்தில் அமைந்தது என்று நான் செல்லவில்லை.

அதேபோல் அனைவருக்கும் அந்தக்கொடுப்பனவுகளும், வேலைவாய்ப்புக்களும் சரியாகப் போய்ச் சேர்ந்தன என்றும் நான் சொல்லவில்லை.
போரில் இழந்த பெண்கள் அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது இளைஞர்கள் எந்த இலட்சியத்திற்காக கடந்த காலத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியட்சியத்தை எட்டும்வரை எமது பயணம் ஓயாது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பெண்கள் விடுதலைமாத்திரம் அல்ல நம் இனத்தின் விடுதலைக்காகவும், நம் தேசத்தின் விடுதலைக்காகவும் தமிழரசுக்கட்சியின் மகளிர் அணியினர் போராடுவார்கள். அதற்கு எனது வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கும் படி பாகிஸ்தானுக்கு வந்த கடிதம் – இம்ரான்கான் கொடுத்த பதிலடி !

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ந்திகதி போர் தொடுத்தது. தற்போது வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
போர் நடந்து கொண்டிருக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது. அப்போது ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்கள் கொண்டு வந்தன. இந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன. இந்தியா, பாகிஸ்தான் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் கடந்த 1-ந்திகதி இஸ்லாமாபாத்தில் உள்ள வடக்கு நாடுகளில் தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் ஐ.நா. வாக்கெடுப்பின்போது பாகிஸ்தான் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தக் கடித விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாங்கள் அவர்களின் அடிமைகளா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் ‘‘அவர்கள் எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. நாம் அவர்களுடைய அடிமைகளா? அவர்கள் என்ன சொன்னாலும் நாம் அதை செய்ய வேண்டுமா?. ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுக்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவர்கள் இந்தியாவுக்கு இதுபோன்று கடிதம் எழுதினார்களா?’’ என்றார்.
மேலும், நாங்கள் ரஷ்யாவுடன் நட்பாக இருக்கிறோம். மேலும் அமெரிக்காவுடனும் நட்டபாக இருக்கிறோம். சீனா, ஐரோப்பா நாடுகளுடனும் நட்டபாக இருக்கிறோம். ஆனால், எந்த முகாமிலும் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கு நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது. அதனால் நன்றி கிடைப்பதற்குப் பதிலாக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.

5 நாட்களாக காய்ச்சல் – ஒரு வயது குழந்தை மரணம் !

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகீசன் விதுசன் என்ற ஒரு வயதும் ஐந்து மாதமுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு ஆயுர்வேத வைத்தியம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து நோய் தீவிரமடைந்ததை தொடர்ந்து நேற்று பிற்பகல் 5 மணிக்கு சாவச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். குழந்தை டெங்கு காய்ச்சலால் மரணமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மரண விசாரணையை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“ஐ.நா ஒன்றால் தான் எங்களது இனப் பிரச்சினைகளை தீர்க்க முடியும்” – செல்வம் அடைக்கலநாதன்

“ஐ.நா ஒன்றால் தான் எங்களது இனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது.”  என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

உலக நாடுகளில் ஐ.நா ஒன்றால் தான் எங்களது இனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எல்லா இனங்களையும் சமமாக கருத்தப்பட வேண்டும் என்ற ஐ.நாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். தட்டிக் கழிக்க முடியாது.

இலங்கை அரசு தட்டிக் கழித்து வருவதால் தான் ஐ.நா முக்கியமான தீர்மானத்தை சொல்லியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஐ.நா முன் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டி வரும்.

மேலும், யாழ்ப்பாணத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரதமர் கண்காணிப்பை மேற்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் எல்லா மாவட்டகளிலும் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும். அப்போது தான் செய்யப்படுகின்ற வேலைகள் ஒழுங்காக நடைபெறும். ஆகையால் பிரதமரது நடவடிக்கை எல்லா மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன் வைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

“கூட்டமைப்பு உறுப்பினர் மீதான தாக்குதல் அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் காட்டுகிறது.” – சுகாஷ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் அவரது சகோதரிகளை அரச ஆதரவுக் கட்சியினரும் பொலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது அரச அராஜகத்தையும் பொலீசாரின் வக்கிரத்தையும் அரச ஆதரவுக்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கொடூர முகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. இத் தாக்குதலை ஜனநாயகத்தையும் சட்ட திட்டங்களையும் மதிக்கின்ற அரசியல் இயக்கமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்கமாட்டாது.

தனியாள் பிரச்சனைகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகத் தீர்க்கப்பட வேண்டுமே தவிர காடைத்தனமாகவல்ல என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

சட்டத்தைக் கையிலெடுத்தவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும் என்று கோருகின்றோம். அரச அராஜகத்தை நாங்கள் ஒருபோதும் மௌனமாகக் கடந்துசெல்லத் தயாரில்லை-என்றார்