12

12

“ஐ.நா மனித உரிமை பேரவையின் விசாரணைகளை ஒத்தி வைப்பதற்கு சுமந்திரனே காரணம்.” – தமிழகத்தில் போராட்டம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை – தி.நகர் – தாமோதரன் தெருவிலுள்ள இந்து மக்கள் கட்சி காரியாலயத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு போராட்டம் இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து, ஈழ மக்களுக்கு எதிராக சுமந்திரன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஈழத்துக்காக தமிழகத்தில் 18 பேர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவ்வாறான தேசத்திற்கு சுமந்திரன் போன்றவர்கள் வருகைதர அனுமதிக்கக்கூடாது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சென்னைக்கு சென்றிருந்த சுமந்திரனை, உடனடியாக திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை பேரவையின் விசாரணைகளை ஒத்தி வைப்பதற்கு சுமந்திரனே காரணம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எம்.ஏ..சுமந்திரனை, தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை – முஸ்லீம்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல் !

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி தடையால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து முஸ்லிம் எம்.பிக்கள் நேற்றையதினம் பிரதமர் மகிந்தவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பேரீச்சம்பழம் மீதான தடையை நீக்குமாறு உடனடியாக பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்படி விரைவில் புதிய வர்த்தமானி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

பேரீச்சம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் சண்டை – பிள்ளைகளை கொலை செய்ய முயற்சி செய்த முன்னாள் இராணுவ வீரர் தற்கொலை !

தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பிள்ளைகள் இறந்திருக்கலாம் என நினைத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மிஹிர நேற்று இரவு பாடல் ஒன்றை பாடி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார். பின்னர் அவர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.

இன்று காலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் குறித்த நபர் இவ்வாறு தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் மிஹிர வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து விலகி கூலி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழந்தவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது பிள்ளைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

வீட்டின் வெளியே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மிஹிரவின் தாய், பிள்ளைகளின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பிள்ளைகள் இருந்துள்ளனர். பின்னர் அவர் பிள்ளைகளை அயலவர்களுடன் துணையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மிஹிர நேற்று மாலை இந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக அவரது முகநூல் கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.
சுமார் 3 அடி தடி ஒன்று தயார் செய்து வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, இரண்டு சிறுவர்களும் சிறுமியும் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்சார வேலியில் சிக்குண்டு இரு சிறுவர்கள் மரணம் !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு பதின்மூன்று வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக், முஹம்மட் இப்றாஹிம் என்ற இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“இனப்பிரச்சினைக்கான தீர்வே பொருளாதார வளர்ச்சிக்கான தீர்வு.” – இரா.சாணக்கியன்

நீண்ட காலமாக ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துவந்த நிலையில் இச்சந்திப்பு உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் எதிர்வரும் 15 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பேசிய அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்கத் தவறினால், நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.

இதேவேளை ஏறக்குறைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறைந்தது 20 சதவிகிதம் அதிகரிக்கப்படும்.

மேலும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அவர்கள் தமது கல்விக் கட்டணத்தை டொலர்களில் செலுத்துவதற்கு அதிக ரூபாயைக் தேடவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

“எங்கள் மீதும் இலங்கை அரசாங்கம்  தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கிறது.” – செல்வராசா கஜேந்திரன்

“உள்ளக பொறிமுறையால் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. ஆகவே ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையினுடைய ஆணையாளருடைய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. அவ் அறிக்கை இலங்கை அரசை கண்டிப்பதாக இருக்கின்றது. அதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆனாலும் கடந்த காலங்களிலே சில சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்திடம் இந்த பொறுப்பு கூறலுக்கான ஆர்வம் இல்லை. இலங்கை அரசாங்கத்தினுடைய அரச இயந்திரங்களுடைய கட்டமைப்புகள் இனவாதத்துக்குள் மூழ்கிப் போய்விட்டன. அவை ஒரு நடுநிலையான விசாரணை நடத்த தகுதி அற்றன. ஆகவே சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களையெல்லாம் வலியுறுத்தி இருந்தார்கள்.

ஆனால் இம்முறை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான கருத்துக்கள் எதுவும் இல்லை. அவ்வாறு அதனை பார்க்கின்ற போது இதுவரைக்கும் ஆணையாளருடைய அறிக்கைகளில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை முற்றாக புறக்கணித்து மனித உரிமைகள் பேரவையில் நாடுகள் தீர்மானங்களை இயற்றுகின்ற போது வெறுமனே இலங்கை தொடர்பான விவகாரத்தில் ஒரு பிடியை வைத்து கொள்வதற்காக ஒரு தீர்மானத்தை, நிறைவேற்றினார்களே தவிர உள்ளக விசாரணைக்கான வாய்ப்புகளை கொடுத்து இலங்கை அரசை தங்களுடைய வழிக்கு கொண்டு வருவதற்காகவே தவிர தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய முடிவுகளும் பொறுப்புக் கூறல் தொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அதன் காரணமாக நாங்கள் ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மனித உரிமைகள் பேரவையுடைய ஆணையாளருடைய அறிக்கை, ஓரளவுக்கு எங்களுக்கு ஆறுதல் கொடுப்பதாக இருந்திருக்கிறது. அவர் அங்கு நடந்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்துகின்ற போது அதன் அடிப்படையில் தொடர்ந்து ஒரு கருத்துருவாக்கத்தை செய்து அதை நோக்கி செல்வதற்கு எங்களுக்கு அது ஒரு உந்து சக்தியாக இருந்தது.

ஆனால் அந்த விடயங்களை எல்லாம் நீர்த்துப்போக செய்யப்பட்டு அவர்களுடைய அறிக்கை கூட அமைந்திருப்பது என்பது படிப்படியாக இவர்கள் அந்த பொறுப்பு கூறல் விடயத்தை மூடி மறைக்க அனைவரும் சேர்ந்து முற்படுகிறார்களா? என்கின்ற ஒரு சந்தேகத்தைத்தான் எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.
எங்களை பொறுத்தவரையில்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  உள்ளக பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளக விசாரணை மூலமாக எங்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது. நாற்பத்தாறு ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று ஒரு ஆண்டு கடக்கிறது.

இது வரைக்கும் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. எங்களை பொறுத்தவரையிலே ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த விடயம் காலம் தாமதிக்காமல் நாடுகள் முடிவை உடனடியாக எடுத்து ஐசிசி க்கு கொண்டு செல்லுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இன்று சிரியா – உக்ரேனில் நடைபெறுகின்ற போரிலே தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. எங்கள் மீதும் இலங்கை அரசாங்கம்  தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் பாதிக்கப்பட்ட தரப்புகளால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் சர்வதேச விசாரணையை நோக்கி கொண்டு செல்வதற்கு எந்த விதமான முயற்சிகளும் இல்லை. அவர்கள் வெறுமனே எங்கள் மக்கள் மீது நடந்த இந்த இனப்படுகொலைகள், குற்றங்கள், போர் குற்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி இலங்கை மீது ஒரு நாணயத்தை வைத்துக்கொண்டு தங்களுடைய பூகோள பிராந்திய ஆதிக்க நலன்கள் விடயத்திலே சீனாவிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு அழுத்த கருவியாக மட்டும்தான் அதை பயன்படுத்துகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு நீதி கொடுப்பதற்காக அவர்கள் இலங்கை விடயத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பது மிகப் பெரிய ஒரு ஏமாற்றம்.

எங்களை பொறுத்தவரையிலே இந்த மனித உரிமைகள் பேரவை செப்டம்பர் மாதம் வரைக்கும் காத்திருக்காமல் இலங்கை அரசு ஒரு போதும் பொறுப்பு கூறல் செய்யப் போவதில்லை. உள்ளக பொறிமுறையால் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. ஆகவே ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறோம் என மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் புகையிரதபாதைகளின் இரும்புகள் திருட்டு – ரயில்வே திணைக்களம் கவலை !

புகையிரதப் பாதைகளில் இரும்பு திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவை, கொரளவெல்ல, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் அதிகளவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
புகையிரத பாதுகாப்பு ஊழியர்களின் பற்றாக் குறையே இந்த நிலைமைக்குக் காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமையால் புகையிரத விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

“மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தாது.” – ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மறுபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நேற்று முன்தினம் துருக்கியில் இரு நாடுகளின் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது.
தற்போதைய நிலை தொடர்பில்  ரஷ்ய ஜனாதிபதி புடி ன் கூறும்போது, “உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக பின்னர் விரிவாக பேசுகிறேன். அது சாதகமானதாக இருக்கும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தாது. அதற்கு மாறாக வலுவானதாகவே மாற்றும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
உக்ரைனுடனான சமரச பேச்சு தினமும் தொடர்ந்து வருவதாகவும் புடின் தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த அடிப்படையிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அவர் கூறவில்லை.
அதேபோல் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைன் இராணுவம் முக்கியமான திருப்புமுனை மற்றும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.