17

17

“இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.” – சிறிதரன் விசனம் !

இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.”   எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பூநகரியில் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்து இருக்கிறார்கள்.

இலங்கையில் மக்கள் இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்கிறார்கள். எரிவாயுவிற்காக வரிசையில் நிற்கிறார்கள்,அத்தியாவசிய பொருட்களை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்கிற நிலை இப்போது உருவாகியிருக்கிறது. பொருளாதார நிலையில் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.

இப்படி இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்களில் கொரோனாக்காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத்தடைகளின் போது முளைத்த இராணுவ சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

வனவளத்திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றன தமிழர்களின் நிலங்களை பறித்து விவசாயம் செய்வதற்கு தடையாக இருக்கிறார்கள். முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களினால்த்தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது” தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார் வீ.ஆனந்த சங்கரி !

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய போதே, இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதுதவிர, 2022ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்கப்பட்டிருந்த 3 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக 76 விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களின் பிரச்சினைகளை Online ஊடாக முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் !

அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேற்று முதல் நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் முறைப்பாடு செய்யக்கூடிய முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

“தனிநபர் மீது குற்றஞ்சாட்ட வேண்டாம்.” – ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாக ஞானசார தேரர் குரல் !

தேசத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயாமல் தனியொரு நபர் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்ற விடயம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசியுள்ள அவர்,

சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு கிடைத்த 15 பில்லியன் அமெரிக்க டொலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் கடந்த இரண்டு வருட கொவிட் காரணமாகவும் இல்லாமல்போயுள்ளது.

சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தை பாதித்தது. கொவிட் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கையிருப்பில் இருந்த டொலர்கள் செலவு செய்யப்பட்டன.

அரசாங்கத்தை குற்றம்சாட்டும் அனேகமானவர்கள் நாட்டின் நெருக்கடியின் பின்னால் உள்ள உண்மை கதையை அறிந்துகொள்ளாதவர்கள் என்பதை பார்க்க முடிகின்றது. இதன் காரணமாக தற்போதைய விவகாரம் மேலும் குழப்பகரமானதாக மாறியுள்ளது.  தனியொரு நபர் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது என சில குழுக்கள் தெரிவிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபரை துரத்தியடித்தால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சரிசெய்யலாம் என ஏனைய குழுக்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை தனியொரு நபர் தொடர்பானதில்லை அவரை குற்றம்சாட்டுவது அபத்தமானது, என தெரிவித்துள்ள ஞானசார தேரர் 6.9 மில்லியன் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வழங்கினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளியானது சுறுப்பாக செயற்பட்ட முதல் 5 பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் உள்ளடக்கம். !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மும்மொழியிலும் நாடாளுமன்றத்தில் முழங்கிய இரா.சாணக்கியனுக்கு உயர் பதவி! |  Minnal 24 News

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் ஒருவரும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உறுப்பினர் ஒருவரும் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

manthri.lk ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2022 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக பின்வருவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
2. அலி சப்ரி
3. லக்ஷ்மன் கிரியெல்ல
4. பந்துல குணவர்தன
5. சாணக்கியன் ராசமாணிக்கம்

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய தந்தையும் – மகனும் கைது !

யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வீட்டில் இருந்து வாள் மீட்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து , வீட்டின் உரிமையாளர் எனும் அடிப்படையில் , இளைஞனின் தந்தையாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் கடனாக !

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், எரிபொருளுக்கான தொகையை, 750 மில்லியன் டொலராக அதிகரிக்குமாறு, இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்காவின் குண்டுகள் பல நாடுகளில் பல்லாயிரம் பேரை கொன்றுள்ளது” – பைடனுக்கு ரஷ்யா பதில் !

அமெரிக்க பாராளுமன்றத்தில் ரஷிய ஜனாதிபதி புடின் போர்க் குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் புதின் ஒரு போர் குற்றவாளி என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்து உள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் பேட்டி அளித்தபோது நிருபர் ஒருவர் புடினை நீங்கள் போர் குற்றவாளி என்று  நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டார். அதற்கு ஜோ பைடன் இல்லை என்று கூறினார்.
ஆனால் சில நிமிடத்தில் பதிலை மாற்றிய ஜோ பைடன் என்னை கேட்டால் புதினை நான் போர் குற்றவாளி என்றுதான் கூறுவேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
உக்ரைனில் பயங்கரமான பேரழிவையும், திகிலையும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்படுத்தி இருக்கிறார். அடுக்குமாடி கட்டிடங்கள், மகப்பேறு ஆஸ்பத்திரி மீது குண்டுகள் வீசப்படுகின்றன. ரஷ்ய படைகள் நூற்றுக்கணக்கான டாக்டர்களையும், நோயாளிகளையும் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இவை எல்லாம் அட்டூழியங்கள். இது உலகத்திற்கே ஆத்திரத்தை ஏற்படுத்த கூடியது.
உக்ரைனுக்கான எங்கள் ஆதரவில் உலகம் ஒன்று பட்டு உள்ளது. உக்ரைனை தாக்கியதற்காக புடின் மிக கடுமையான விலையை செலுத்த வேண்டும் என்று நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சேர்ந்து உக்ரைனுக்கு பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதினை போர் குற்றவாளி என்று ஜோ பைடன் விமர்சித்தது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. அதில், “ஜோ பைடன் தனது மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். புதின் ஒரு போர் குற்றவாளி என்பதை ஆழ் மனதில் இருந்து சொல்லி உள்ளார். உக்ரைன் போரில் நடந்த வி‌ஷயங்கள், புகைப்படங்களை பார்த்து விட்டு ஜோபைடன் இதை தெரிவித்து இருக்கிறார்” என்று விளக்கம் அளித்து உள்ளது.
இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ரஷிய அதிபர் புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறும்போது, “ஜோ பைடன் சொன்னது மிக மிக தவறானது. அவர் பேசியது மன்னிக்க முடியாத தவறான கருத்தாகும். ஒரு நாட்டின் தலைவர் இப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் நாட்டின் (அமெரிக்கா) குண்டுகள் பல நாடுகளில் பல்லாயிரம் பேரை கொன்றுள்ளது என்பதை மறுக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

தொடரும் பொருளாதார நெருக்கடி – பதவி துறக்க தயாராகும் ஜனாதிபதி கோத்தாபாய – அடுத்த தலைவர் யார்..?

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின்றி ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

‘ஹிரு’ சேனலுடனான நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலை தீவிரமடையும் போது ஒரு கட்டத்தில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்ஷ விலகுவார் என தாங்கள் நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பிரதமர் இப்போது மோசமான நிலையில் இருப்பதால் அந்த வாய்ப்புகள் உள்ளன. பசில் ராஜபக்ஷ தேர்தலுக்குச் செல்லாமல் வேறு வழியில் ஜனாதிபதியாக வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப இரவு உணவு மேசையில் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் ராஜபக்ஷகள் !

ஜனநாயக அரசியல் இணக்கப்பாட்டைப் பேணுவதில் ஜனாதிபதி தவறிவிட்டார். அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

முழு நாடும் சரியான பாதையில் பயணிக்கிறது என்ற தொனிப்பொருளில் 11 கட்சிகள் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குடும்ப இரவு உணவு மேசையில் அரசியல் தீர்மானங்களை எடுப்பதன் விளைவுகளை முழு நாடுமே இன்னல்களை அனுபவிப்பதற்கு காரணம் என அவர் தெரிவித்தார் .