27

27

“புலிகள் பெயரை சொல்லி இனிமேலும் அரசியல் செய்யாதீர்கள்.”- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச

“சர்வகட்சி மாநாட்டிலும், ஜனாதிபதியுடனான பேச்சிலும் கூட்டமைப்பினர் பங்கேற்றமையை வரவேற்கின்றேன்.” என  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அரசின் அதிருப்திக் குழு கட்சிகளின் தலைவர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, “விடுதலைப் புலிகள் ஆயுதத்தால் பெற முடியாததை கூட்டமைப்பு டொலரை முன்னிறுத்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அதனால்தான் சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நிதியமைச்சர், “கம்மன்பில, விமல் வீரவங்ச ஆகியோர் இனவாதத்தை முன்வைத்துத்தான் தமது அரசியலை நடத்தி வருகின்றார்கள்.

அரசுக்குள்ளிருந்தும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டார்கள். இதனால் அரசு பெரும் அவப்பெயரைச் சந்தித்தது. தற்போது அரசுக்கு வெளியில் சென்றும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இவர்களின் இந்தக் கருத்துக்கள் அரச தலைவர் ஆரம்பித்துள்ள கூட்டமைப்புடனான பேச்சுக்கு எந்த விதத்திலும் தடங்கலை ஏற்படுத்தாது. அதேவேளை, தமிழ் – சிங்கள உறவிலும் பாதிப்பு ஏற்படுத்தாது.

அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை முன்வைத்து கம்மன்பில முன்வைத்து எத்தனை நாளைக்குத்தான் அரசியலை முன்னெடுக்கப்போகின்றார்கள்? சர்வகட்சி மாநாட்டிலும், ஜனாதிபதியுடனான பேச்சிலும் கூட்டமைப்பினர் பங்கேற்றமையை வரவேற்கின்றேன்.

அரச தலைவர் தலைமையிலான அரசு கூட்டமைப்புடனான பேச்சுக்களை தொடர்ந்து முன்னெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்.”- ஜோ பைடன் கடுமையான விமர்சனம் !

உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார்.

உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு ஜோ பைடன் சென்று உள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் ஜோ பைடன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

உக்ரைனில் ரஷியாவுக்கு வெற்றி கிடைக்காது. இந்த போரில் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ வெற்றி பெற முடியாது. நீண்ட காலத்துக்கு தொடரக்கூடும். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பெரும் பொருளாதார நாடுகள் ஒன்றுபட வேண்டும். கடவுள் அருளால் இந்த மனிதர் (புடின்) ஆட்சியில் நீடிக்க கூடாது. அவர் அதிகாரத்தில் இருக்க முடியாது.

புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர். உக்ரைன் மீதான ரஷியாவின் ஊடுருவலை சுதந்திர உலகம் எதிர்க்கிறது என்றார்.

புடின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும் போது, ரஷியாவின் அதிபர், ரஷிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதை ஜோ பைடன் முடிவு செய்யக்கூடாது என்றார்.

இந்த நிலையில் ஜோ பைடன் தெரிவித்த கருத்து தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும் போது, புதின் குறித்த அதிபர் ஜோ பைடன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அவர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. அதிபர் ஜோ பைடனின் கருத்தின் அர்த்தம் என்னவென்றால் புதின் தனது அண்டை நாடுகள் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது. ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. புதினின் அதிகாரம் குறித்தோ அல்லது ஆட்சி மாற்றம் பற்றியோ அவர் விவாதிக்கவில்லை என்றார்.

ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது ஆளும் கட்சி !

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இன்று காலை விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த பாராளுமன்ற அமர்வில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

“அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் தோல்வியடைந்து விட்டன.” – ஹர்சா டிசில்வா

இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைகள் காணப்படுகின்றன என ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் 22 மில்லியன் மக்கள் தற்போது இலங்கையில் என்றும் காணப்படாத மிகவும் துயரமான- மிகவும் மோசமான பொருளாதார சமூக நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாடாளுமன்ற பொறிமுறை ஊடாக நாங்கள் இந்த தீவிரமான சீர்திருத்தங்களை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதிக்குழு அல்லது விசேட குழு மூலம் இதனை முன்னெடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை இதற்கான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஹர்ச டிசில்வா மத்திய வங்கி ஆளுநர் தான் ஒருபோதும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடப்போவதில்லை- அதன் ஆலோசனையும் தேவையில்லை என தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பின்பற்றிய பொருளாதார கொள்கைகள் முற்றாக தோல்வியடைந்துவிட்டன என சர்வதேச நாணயநிதியம் தற்போது தெரிவித்துள்ளது மத்திய வங்கியின் திட்டமும் தோல்வியை என்பதை நிருபித்துள்ளது என குறிப்பிட்டுள்ள ஹர்சா டி சில்வா சர்வதேச நாணயநிதியத்தின் பரிந்துரைகளை ஏற்கவேண்டுமா இல்லையா என்பது அரசியல் தீர்மானம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த இம்ரான் கான் ஒருபோதும் தலைவணங்க மாட்டான்.” – பாக்.பிரதமர்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், இம்ரான் கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சியை சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது இம்ரான் கானுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று அரசு கவிழும் நிலை உள்ளது. எனவே, வாக்கெடுப்பு முன்பாகவே இம்ரான் கான் பதவி விலகலாம் என்ற தகவல் பரவியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இம்ரான் கானின் பலத்தை காட்டும் வகையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆளும் கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இம்ரான் கான் பேசுகையில்,
தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட பணிகளை குறிப்பிட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் தனது அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் செய்யாத பணிகளை, வேறு எந்த அரசாங்கமும் செய்யவில்லை என்று கூறினார்.
“ஒயிட் காலர் குற்றவாளிகளால் பாகிஸ்தான் ஏழை நாடாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் நாட்டை மூன்று எலிகள் சூறையாடி வருகின்றன.
இந்த இம்ரான் கான் ஒருபோதும் தலைவணங்க மாட்டான், தனது நாட்டை யாருக்கும் பணிய விடமாட்டான். நமது வெளியுறவுக் கொள்கை வெளியில் இருந்து கையாளப்படுகிறது. அரசாங்கத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்ய முடியும், ஆனால் குற்றவாளிகளை மன்னிக்க முடியாது’ என்றும் இம்ரான் கான் பேசினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !

பொதுஜனபெரமுனவின் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தன்னை தாக்கியதாக சட்டம் பயிலும் மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குளியாப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றின் முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட மாணவர் குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் எனது நண்பனை தாக்கினார் பின்னர் என்னை தாக்கினார் அவரது பாதுகாப்புபிரிவை சேர்ந்தவர்களும் என்னை தாக்கினார்கள் என தாக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
நாரம்மல கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றது அதன்போது அந்த பகுதி மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது,அங்கு காணப்பட்ட நபர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது கல்தாக்குதலை மேற்கொண்டுள்ளார் –அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் தாக்கியதாக தங்களிற்கு வேறு சிலரும் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட ஐவர் குளியாப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தன்னையும் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் சிலர் கற்களால் தாக்கினார்கள் என தெரிவித்துள்ளார்.

மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது டெல்லி அணி !

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் துடு்ப்பெடுத்தாட செய்த மும்பை அணி,  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ஓட்டங்கள் விளாசினார். தலைவர் ரோகித் சர்மா 41 ஓட்டங்கள் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி, 32 ஓட்டங்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கவனமாக ஆடிய துவக்க வீரர் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் தனது பங்கிற்கு 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 104 ஓட்டங்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ், அக்சர் படேல் இருவரும் அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.
லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களும் விளாச, டெல்லி அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 6 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் சேர்த்த டெல்லி அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் கைது !

வாகனங்களுக்குள் மறைந்திருந்தவாறு ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சிறிய பேருந்துகள் டிரக் ரக வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு நட்லாக் 11 எல்லையை கடக்க முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இந்த வாகனங்களின் சாரதிகள் ருமேனியாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ருமேனியாவில் பதியப்பட்ட மினிபஸ்களின் சாரதிகளாக 32 மற்றும் 42 வயதுடைய இருவர் செயற்பட்டனர். அந்த வாகனங்களை எல்லையில் சோதனையிட்டவேளை பொருட்களை வைப்பதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட பகுதியிலும்,பயணிகள் அமரும் பகுதியிலும் பலர் மறைந்திருந்தது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களில் 16 இலங்கையர்கள் காணப்பட்டனர், இவர்கள் 22 முதல் 51 வயதுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட ஆவணங்கள் மூலம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் எல்லைக்கு வந்த காரில் ருமேனியாவை சேர்ந்த ஒருவரும் இலங்கையை சேர்ந்தவரும் காணப்பட்டனர்,ருமேனிய பிரஜை அந்த காரை ஓட்டினார், அந்த கார் இத்தாலியில் பதிவு செய்யப்பட்டிருந்தது,அந்த காரை சோதனை செய்தவேளை முன்னர் பேருந்தில் மறைந்திருந்தவர்களின் பயணபொதிகளும் ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பின்னர் அந்த பகுதியில் டிரக்ஒன்றில் மறைந்திருந்தவாறு எல்லையை கடக்க முற்பட்ட துருக்கி சிரியா ஈராக்கை சேர்ந்த 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார்.” – அமைச்சர் நாமல் ராஜபக்ஸ

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்ற விதத்தில் அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவார்களாயின், தான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதனால், தமது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு முன்னுதாரணமாக செயற்பட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முடியும் என நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அவ்வாறு செய்யும் பட்சத்தில் தானும் பதவி விலக தயார் என அவர் கூறுகின்றார்.ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னுதாரணமாக செயற்படுமானால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தான் முன்னுதாரணமாக பதவி விலகுவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர் தற்போது துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது 95 ஆயிரம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஆயிரத்து 630 கிலோகிராம் ஹெரோயின், 15 ஆயிரம் கிலோகிராம் கஞ்சா மற்றும் ஆயிரத்து 377 கிலோகிராம் செயற்கை போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.