09

09

தமிழர் பகுதியில் இரவோடு இரவாக விகாரை அமைக்க முயற்சி – ஊர்மக்கள் செய்த துணிகர செயல் !

அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான தமிழர் பாரம்பரிய வரலாற்றுத் தொல்லியல் பூமியான முள்ளிக்குளம் மலை அடிவாரப் பகுதியில் இரவோடு இரவாக அத்திவாரம் வெட்டப்பட்டு விகாரை அமைக்கும் பணிக்கான ஒழுங்குகள் நடைபெற்ற வேளை இன்று காலை பிரதேச பொதுமக்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்தது ரஷ்யா !

ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றபோது, ரஷ்யா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.
இந்நிலையில், விசாரணையை புறக்கணித்தது குறித்து ரஷ்யா தரப்பில் முதல் முறையாக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இது பொருத்தமில்லாத அபத்தமான வழக்கு என்பதால் விசாரணையில் கலந்து கொள்ளவில்லை’ என ரஷிய வெளியுறவுத்துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இனப்படுகொலையைத் தடுப்பதற்காகவே தாக்குதல் நடத்துவதாக தவறாகக் கூறி ரஷ்யா தனது படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சித்ததாக உக்ரைன் தரப்பில் வாதிடப்பட்டது.

“அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறையுங்கள்.” – வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு !

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சினால் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள சந்தர்ப்பங்களில் வளி சீராக்கி (A/C) பாவனையை தவிர்த்து மின்விசிறிகளை உபயோகிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அனைத்து மின்விளக்கு, மின்சாதனங்களை அணைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பிற்பகல் 2.30 முதல் பி.ப 4.30 வரை வளி சீராக்கியின்(A/C) செயற்பாட்டை இடைநிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை வேளையில் வெளிபுறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிபுற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை(A/C) செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு !

நான்கு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கிரிபத்கொட முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அயலவர்கள் நேற்று (08) மாலை 119க்கு வழங்கிய தகவலின் பேரில் கிரிபத்கொட பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் ஒருவராவார், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் பொலிஸாரால் தெரிவித்தனர்.

பெண் உயிரிழந்த வீட்டைப் பழுதுபார்ப்பதற்காக ஆண் ஒருவர் வருகை தந்துள்ளதாகவும், சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“சமூக ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.” – பேராசிரியர் சரித ஹேரத்

நாட்டில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் காப்புரிமைச் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இளைஞர்கள் தமது ஆக்கப்பூர்வமான நுண்ணறிவுடன் டிஜிட்டல் துறையில் தொழில்களை ஆரம்பிக்கும் வகையில் காப்புரிமைச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வணிக வளர்ச்சிக்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த பெரிதும் பயனடைவார்கள் என சரித ஹேரத் குறிப்பிட்டார்.

அறிவுசார் சொத்துரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை மீதான வலுவான சட்ட கட்டமைப்பை நாம் கொண்டிருக்க முடியாவிட்டால் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தாய் வெளிநாட்டில் – வவுனியாவில் சிறுமி கர்ப்பம் – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை !

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரின் பெண்ணின் சிறிய தந்தையார் பூவரசன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் குடும்பம் ஒன்றின் கணவன் விட்டு சென்ற நிலையில், பெண் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் வேறு ஒருவரை திருமணம் செய்திருந்தார்.குறித்த பெண் வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுள்ள நிலையில் இரு பிள்ளைகளும் சிறிய தந்தையாருடன் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் 17 வயது சிறுமி உடல் நிலை சுகவீனமுற்ற நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த சிறுமி கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தாயின் இரண்டாவது கணவனரான சிறிய தந்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேருந்தை இடைமறித்து சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டிய நபர் – யாழில் சம்பவம் !

யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை – ரணில்விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு என்ன..?

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சஆகியோருடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை நிராகரித்துள்ளதுடன் ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கத்தை அமைக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளன.

தனிப்பட்ட ரீதியில் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய நெருக்கடிகள் குறித்து பிரதமருடன் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டுள்ளார் என முன்னாள் பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதியுடனோ அல்லது பிரதமருடனோ அவர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவை தெரிவித்துள்ளன. எனினும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க கட்சிகள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து தற்போதைய பிரச்சினைகளிற்கான அடிப்படை காரணங்களை கண்டறியமுயலவேண்டும் அதன் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணலாம் என தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தேசிய கொள்கையொன்று குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் அதன் மூலம் நாட்டை 15 வருடங்களிற்கு முன்னோக்கி நகர்த்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தேசிய கொள்கையை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டவுடன் தேர்தலைநடத்தவேண்டும்,அதன் மூலம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய கொள்கை மூலம் நாடு இன்னுமொரு நெருக்கடிக்குள் சிக்காத நிலையை நாங்கள் ஏற்படுத்தவேண்டும்,அடுத்த அரசாங்கம் எதுவாகயிருந்தாலும் அவர்கள் இந்த கட்டமைப்பை அடிப்படையாக வைத்து செயற்படவேண்டும். அல்லது கொள்கைகள் தொடர்ந்தும் மாறும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என ரணில்விக்கிரமசிங்க தனது கட்சியின் சிரேஸ்ட தலைவர்களிற்கு தெரிவித்துள்ளார்.

“கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்.” – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி !

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நேற்று (8) பாராளுமன்ற விவாதத்தின் போதே இதை தெரிவித்தார்.

மேலும், கூட்டு பலாத்காரத்தின் விளைவாக உருவாகும் கர்ப்பத்தை கலைப்பதற்கு சில நாடுகள் ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார,“கூட்டு வன்புணர்வுக்கு உள்ளான சிறுமிகளின் கருவில் உள்ள சிசுவை (கருவை) அகற்றும் நடைமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தற்கொலை செய்து கொண்ட சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது முக்கியம்” எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர்,

கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளுக்கு சில நிபந்தனைகளின் கீழ் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.