மார்க்சிஸ்ட் புரட்சியாளரான சே குவேராவை துப்பாக்கி மூலம் சுட்டுக் கொன்றவராக அறியப்படும் பொலிவியா இராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. பொலிவியா காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்திருந்த சே குவேரா பட்டினியாலும், ஆஸ்துமா நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைப் பயன்படுத்தி கியூப – அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் உதவியுடன் பொலிவிய இராணுவத்தினர் அக்டோபர் 8 ஆம் திகதி 1967 ஆம் ஆண்டு சே குவேராவைப் பிடித்தனர். பின்னர் பொலிவிய இராணுவ வீரர்களால் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் சேகுவேராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவராக அறியப்படும், பொலிய ராணுவ வீரர் மரியோ டெரான் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இந்தச் செய்தியை அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
சே குவேராவை கொன்ற நிகழ்வை மரியோ டெரான் ஒரு முறை பகிர்ந்திருந்தார்.
அதில் அவர், ”சிறைப்பிடிக்கப்பட்ட சேகுவேரா, லா ஹிகுவேரா பகுதியில் பாழடைந்த பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார். அது என் வாழ்வின் மிக மோசமான தருணம். அந்த நேரத்தில் சே குவேரா பிரம்மாண்டமாக தோற்றமளித்தார். அவரது கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன.சேவின் பார்வை என் மீது விழும்போது எனக்கு மயக்கம் ஏற்பட்டது. ஒரே ஒரு விரைவான கண் அசைவால் சே குவேரா என்னை நிராயுதபாணியாக்க முடியும் என்பதை நான் அப்போது உணர்ந்தேன். சே என்னை நோக்கி அமைதியாக இருங்கள் என்று கூறினார், என்னை நன்றாகப் பாருங்கள். நீங்கள் ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள் என்றார். அதனைத் தொடர்ந்து நான் அந்த அறையின் வாசல் பக்கம் சென்றேன். கண்களை மூடிக் கொண்டு சே குவேராவை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.