14

14

5 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு !

இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 23 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி (13 ஓட்டங்கள், 16 பந்து) அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில் விக்கெட்டை தாரை வார்த்தார்.
குறைந்த ஓட்டங்களில்  வீழ்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 50 ஓட்டங்களுக்கு கீழ் சென்றது. இதுவரை 101 டெஸ்டில் ஆடியுள்ள கோலி 27 சதம் உள்பட 8,043 ஓட்டங்கள் (சராசரி ஓட்டம் 49.95 ) எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ஓட்டங்கள் சராசரியை தக்க வைத்திருப்பார்.
மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கண்டு 28 மாதங்கள் உருண்டோடி விட்டது. இந்த நிலையில் அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

“ரஷ்ய – உக்ரைன் போர் – 43 குழந்தைகள் உள்ளடங்கலாக 596 பொதுமக்கள் பலி.” – ஐ.நா கவலை !

உக்ரைன் – ரஷ்யா இடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில், இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. அதையடுத்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ம் திகதி நடைபெற்றது.

சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து 2 முறை பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காணொலி மூலமாக நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 18வது நாளாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 596 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறைந்தது 1,067 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 43 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 57 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

டெல்டா, ஒமிக்ரோன் கலவையாக உருவெடுத்துள்ள புதிய கொரோனா திரிபு !

“டெல்டக்ரோன்” என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.

அது டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் வகை குறித்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் இதனை உறுதிசெய்தார்.

அந்த வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வைரஸ் வகை குறித்து கவலைப்படுவதா என்பதை இப்போது உறுதி செய்யமுடியாது என்று அமைப்பு கூறியது. தற்போது சில பாதிப்புகள் பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அதனுடன் தொடர்புடைய சுமார் 30 சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

பேஸ்புக் போதைப்பொருள் விருந்து – பொலிஸாரிடம் சிக்கிய 39 இளைஞர்கள் !

வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருள் விருந்து நடத்திய 39 சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகநூல் சமூக வலைத்தளம் ஊடாக சந்தேக நபர்களால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை !

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில்  நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறாமை, நிதி நெருக்கடியை ஏற்படுத்தியமை, மக்கள் மீது விலையேற்றம் என்ற சுமையைத் திணித்தமை உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பிரேரணை முன்வைக்கப்படும்.

அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுந்தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. சாதாரண பெரும்பான்மைகூட ஊசலாடும் மட்டத்திலேயே உள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதான எதிரணி இப்படியொரு வியூகத்தை கையாள எதிர்பார்த்துள்ளது

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இலங்கை மக்களே காரணம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சாடல் !

தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும் வாகனங்களுக்கு மேலதிகமாக எரிபொருளை சேகரிப்பதால் மக்கள் வரிசையில் நிற்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில், நாட்டில் நாளாந்த பெற்றோ லின் தேவை 1,000 மெட்ரிக் தொன்களாலும், டீசலின் தேவை நாளாந்தம் 2500 மெட்ரிக் தொன்களாலும் அதிகரித்துள்ளதாகவும் எரிபொருளை பதுக்கி வைக்க வேண்டாம் எனவும்  மக்களை வலியுறுத்திய அவர், நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்குவதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார்.

தமக்குத் தேவையான எரிபொருளை மட்டும் பெற்றுக்கொள்ள முடிந்தால் அனைத்து வரிசைகளும் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்ன..? – முன்னாள் பிரதமர் ரணில் விளக்கம் !

அரசாங்கங்களை மாற்றுவதோ தேசிய அரசாங்கங்களைஅமைப்பதோ இந்த தருணத்தில் தேவையற்ற விடயங்கள் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் நிகழ்வில் கருத்துவெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலம் பேசிய முன்னாள் பிரதமர், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உறுதியான பொருளாதார கட்டமைப்பிற்கு இணங்கவேண்டும்.

இதிலிருந்து மீள்வது எவ்வாறு என்பது குறித்த தேசிய கருத்தொருமைப்பாடு ஏற்படவேண்டும். தற்போது தேவையானது தேசிய அரசாங்கம் இல்லை. நாங்கள் அமைச்சரவை பதவிகளை எங்களிற்குள் பிரித்துக்கொள்கின்றோம் என மக்கள்தெரிவிப்பார்கள்.

தற்போது அவசியமான தேசிய கருத்தொருமைப்பாடே.

எதிர்கட்சிகள் எதிரணியில் தொடரலாம் அரசாங்கம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம்,ஆனால் அவர்கள் அனைவரும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான தேசிய இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அவர்கள் ஒருவருடம் இரண்டு வருடம் நீடிக்கின்ற இணக்கப்பாட்டை காணக்கூடாது 15 முதல் 20 வருடங்கள் நீடிக்கின்ற இணக்கப்பாட்டினை காணவேண்டும்.

கருத்தொருமைப்பாடு ஏற்பட்டவுடன் அரசாங்கமும் எதிர்கட்சியும் தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கலாம். முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்து கூட ஆராயலாம். ஆனால் தேசிய கட்டமைப்பையும் அடிப்படை கொள்கைகளையும் மாற்ற முடியாது.

தொடர்ச்சியாக இலங்கையை ஆண்டவர்கள் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டதும் தேசிய கொள்கைகளாக விளங்கியிருக்கவேண்டியவற்றை மாற்றியதுமே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சில முஸ்லிம் அரசியல்வாதிகளை நான் நம்புவதில்லை. முஸ்லிம் மக்களை நம்புகின்றேன்.” – இரா.சாணக்கியன்

“20வது திருத்ததிற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை நான் நம்புவதில்லை. முஸ்லிம் மக்களை நம்புகின்றேன்.” என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

தாங்கள் 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருபோதும் நம்பாவிட்டாலும் முஸ்லிம் மக்களை நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடியிலும் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன் , எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரையும் தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்யலாம் என்ற காரணத்தினாலேயே இந்த சட்டத்தினை முழுமையாக நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அந்த கூட்டத்தினை நாங்கள் பகிஸ்கரித்தோம். பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக ஒழிக்கும் வரைக்கும் எங்களது போராட்டம் தொடரும். தற்போது கையெழுத்து போராட்டமாக நடைபெறும் இந்த போராட்டம் எதிர்காலத்தில் பல வடிவங்களில் முன்னெடுக்கப்படும்.

இதேநேரம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். நாங்கள் இரண்டு வருடமாக கேட்டுக்கொண்ட சந்திப்பினை ஜனாதிபதி தற்போது ஏற்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பினை வைத்துக்கொண்டு எங்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி எங்களை ஏமாற்றும் அளவுக்கு நாங்கள் இருக்கப்போவதில்லை. நீண்டகாலமாக தமிழ் மக்களின் தீர்க்கப்படாத நிலையில் உள்ள அரசியல் தீர்வு விடயத்திற்கு நாங்கள் முன்னுரிமை வழங்க தீர்மானித்திருக்கின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கும் போராட்டத்திற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஆனால் முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட 20வது திருத்ததிற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

தலைமைத்துவம் இருக்கம்போதே மக்கள் எதனையும் செய்யமுடியும். யாராவது முன்வந்து முஸ்லிம் பிரதேசங்களில் முன்வந்து இந்த கையெழுத்து போராட்டத்தினை முன்னெடுப்பார்களானால் அதனை செய்யமுடியும். திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அதற்கான ஆதரவினை வழங்கியுள்ளார். இந்த 20வது திருத்ததிற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை நான் நம்புவதில்லை. முஸ்லிம் மக்களை நம்புகின்றேன்.

எங்கும் நாங்கள் யாரையும் இந்த போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை. பல இடங்களிலிருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகின்றது இந்த போராட்டத்தினை தங்களது பகுதிகளிலும் முன்னெடுக்குமாறு. இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது முஸ்லிம் மக்களுக்கும் ஆபத்தானது என்ற காரணத்தினால் அவர்களது ஆதரவு இதற்கு கிடைக்கும். இலங்கையில் எப்பகுதியில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தாலும் அதில் கலந்துகொள்வதற்க நான் தயாராகயிருக்கின்றேன்.” எனவும் அவர் கூறினார்.

“மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.” – பழனி திகாம்பரம் உறுதி !

“மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, நேற்று ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

” மலையக மக்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும், மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

இன்னும் 20 வருடங்கள் இந்த அரசை அமைக்கமுடியாது. தங்களுடன் வந்துவிடுங்கள் என எமக்கும் ஆளுங்கட்சியின் அழைப்பு விடுத்தனர். நம்பி சென்றிருந்தால் இன்று மலையக அமைச்சர் போன்று, மாவு அமைச்சராகவே இருந்திருக்க வேண்டும். 20 வருடங்கள் என சூளுரைத்தனர். இன்று இரண்டு வருடங்களிலேயே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சி என்பது மலையகத்துக்கு பொன்னான காலம். 50 வருடங்கள் அரசியல் செய்தவர்களுக்கு மத்தியில் நான்கரை வருடங்களில் மலையகத்தில் பாரிய வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தோம். உரிமை அரசியலையும் வென்றெடுத்தோம்.

மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.

இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான பாரிய போராட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். அதன்பின்னர் ஏப்ரல் 03 ஆம் திகதி தலவாக்கலையிலும் நடைபெறும். அதில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார் திகா.

அவலட்சணமான அமெரிக்க பிரஜையால் சீரழிக்கப்பட்ட இலங்கை – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு !

“அவலட்சணமான அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ச இந்த நாட்டை சீரழித்துவிட்டார்.” என ஆளுந்தரப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அவலட்சணமான அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ச இந்த நாட்டை சீரழித்துவிட்டார். இந்த நாடு வங்குரோத்து அடையவில்லை, வங்குரோத்து அடையச் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச இன்று செல்லாக் காசாக மாறியுள்ளார், அவரை ஓரம் கட்டியுள்ளோம். இந்த நாட்டை தற்பொழுது ஆட்சி செய்வது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவோ, அல்லது மஹிந்த ராஜபக்சவோ கிடையாது.

நாட்டை பசிலே ஆட்சி செய்கின்றார், அரச தலைவர், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் சகோதரர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நாட்டை சீரழிக்க இடமளித்துவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.