நேற்றையதினம் வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொருளாதார பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் பலரிடையேயும் பல விதமான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த சாவுக்கு அரசே காரணம் என கண்டித்திருனர்.
நேற்று :- பிள்ளைக்கு உணவு கொடுக்க முடியாத வறுமையால் தந்தை தற்கொலை. இன்று :- இங்க சாப்பிட வழியில்லாதவர்கள் யாரும் இல்லை என கூறி பெருமைப்பட்டுள்ள அமைச்சர் !
இந்த நிலையில், சாப்பிட இல்லாத மக்கள் என யாரும் இந்த நாட்டில் இல்லை என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு – ஹொரண வீதியின் 120 இலக்க பேருந்து மார்க்கத்தை விரிவுபடுத்தும் போது வீடுகளை இழந்தவர்களுக்கு, புதிய வீடுகளுக்கான திறப்புகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஒன்றரை வருடம் வீடுகளில் அடைப்பட்டிருந்ததை மக்கள் அறிவார்கள். அந்தக் காலத்தில் செய்ய முடியாது போனதை தற்போது செய்ய முயற்சிக்கிறார்கள்.
நாட்டின் பொருளாதாரத்தையும் தமது பொருளாதாரத்தையும் மக்களின் முழு சக்தியையும் செலுத்தி மக்கள் பெரும் அர்ப்பணிப்பைச் செய்கிறார்கள்.
நாட்டில் சீமெந்து பிரச்சினை இருப்பதை ஏற்க வேண்டும். ஆனால், மகிந்த யுகத்தின் பின்னர் அதிக அபிவிருத்தி நடைபெறுவது இந்த யுகத்தில் தான்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னர் அதிகமான வீதிகள் கோட்டாபய ஆட்சியிலேயே நிர்மாணிக்கப்படுகிறது.
தனியார் துறையினர் அதிக கட்டுமானத்தை முன்னெடுத்தது மகிந்த ஆட்சியில் தான். அதைவிட அதிகமாக தற்போது கோட்டாபய ஆட்சியில் நடக்கிறது.
வீதிகளை மேம்படுத்தும் போது அவர்களின் காலத்தில் செய்ய முடியாமல் போனதையிட்டு அவர்களுக்கு கவலை ஏற்படுகிறது. இதுதான் உண்மை நிலை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.