10

10

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நீக்கம் தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் இருந்து பெறப்பட்டது எழுத்துமூல ஆவணம் !

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமது தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்துமூல ஆவணத்தை எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று நேரில் கையளித்தார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நாம் கையெழுத்து வேட்டையை முன்னெடுத்து வருகின்றோம். இந்த நடவடிக்கைக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், மாணவர்கள் மற்றும் மூவின மக்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்று அதனைப் பிரதியீடு செய்ய வேண்டுமென்ற தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்துமூல ஆவணத்தை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று காலை என்னிடம் கையளித்தார்.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்து இந்த ஆவணத்தை அவர் என்னிடம் கையளித்தார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் மற்றும் புத்திக பத்திரண ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்” – என்றார்.

“இந்த போர் உக்ரைனின் இறையான்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல.” – ரஷ்யா அறிவிப்பு !

“உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை. இதற்காக அந்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.” என ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஸகாரோபோவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்.
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை. இதற்காக அந்த நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த போர் உக்ரைனின் இறையான்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்தபோது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார். உக்ரைனை நாஜிக்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.
பின்னர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் உக்ரைன் இராணுவத்தின் நாஜி ஆதரவு சக்திகளுக்கு எதிராகத்தான் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும், சாதாரண உக்ரைன் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பினருடனான சந்திப்பு – மௌனம் களைத்தது ஜனாதிபதி செயலகம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியினை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் அதுகுறித்து ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ தொடர்ச்சியாக மௌனமாகவே இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் அவர்கள் கோரிக்ககை விடுத்திருந்தனர். எனினும் ஜனாதிபதி அன்றைய தினம் செயலகத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடுநாடாக டொலருக்கு மன்றாடுகின்றார்.” – நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் !

நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. நிதியமைச்சர் நாடுநாடாக டொலருக்கு மன்றாடுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாங்கள் இது குறித்து வெட்கப்படவேண்டும். நிதியமைச்சர் டொலர் தாருங்கள் என நாடு நாடாக சென்று இரந்து கேட்கின்றார். ரஸ்யாவிடமிருந்தும் அவர் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கேட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபனைவெளியிட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித்பண்டார,  வங்குரோத்து நிலை என்பது தவறு அதனை விலக்கிக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இது தீயநோக்கம் கொண்ட அறிக்கை என அவர் தெரிவித்தார்.

 

 

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் வங்கி கணக்கிலிருந்து முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்ட பணத்தை, பகுதி பகுதியாக செலுத்துவதற்கு, பிரதமரின் முன்னாள் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக கடமையாற்றிய உதித்த லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, அலரிமாளிகைக்கு அண்மையில் வருகைத் தந்த உதித்த லொக்குபண்டார, முதல்கட்டமாக 25 லட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளமை, விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பணத்தை பகுதி பகுதியாக செலுத்த உதித்த லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து மாதாந்தம் 15 லட்சம் ரூபா விதம் உதித்த லொக்குபண்டார பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பெற்றுக்கொண்ட பணத்தை கொண்டு நண்பர்களுடன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளுதல், சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட மேலும் பல்வேறு விடயங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வரலாறு காணாத அளவுக்கு எகிறியது டொலரின் பெறுமதி !

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சில தமது இணையத்தளங்களில் குறிப்பிட்டுள்ளன.

மேலும், வாங்கும் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அதிக அளவில் குறைப்பதற்கு கடந்த 7ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலையை 202.99 ஆக பேணி வந்தது.

எவ்வாறாயினும், உண்டியல் மற்றும் ஹவாலா போன்ற முறைசாரா முறைகள் மூலம் டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கை அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஐம்பது வீதம் வழங்கப்பட வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஐம்பது வீதம் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் பெண்களின் வகிபாகத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டதுடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும், மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு இந்திய உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அவருக்கு சிறை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த விடுமுறை 10 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், தற்காலிக விடுப்பில் இருந்தாலும் தனக்கு வெளியே செல்ல முடியாத காரணத்தினால் பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்குள் ராஜபக்ஷக்கள் உடன் பதவி விலக வேண்டும்.” – சந்திரிகா குமாரதுங்க விசனம் !

“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.” என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரம் அதளபாலத்துக்குள் சென்ற பின்னர் சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது. இந்த அரசு புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது. இதை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் பேர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இன்று வீதிகளில் பொருட்களைக் வாங்க வரிசையாக நிற்கின்றனர். பொருட்களின் விலையேற்றத்தாலும் பொருட்களின் பற்றாக்குறையாலும் மக்கள் இன்று திண்டாடுகின்றனர்.

எனவே, பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்கு முன் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” – என்றார்.

முடிவுக்கு வருகிறது ரஷ்ய உக்ரைன் மோதல் – உக்ரைன் ஜனாதிபதியின் உரையால் போரில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் !

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போர், சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது.

கீயுவ்வின் புறநகர் பகுதிகளில் ரஷ் ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கட்டிடங்களை தரை மட்டமாக்கின. கடந்த மாதம் ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையம், சர்வதேச அணுசக்தி முகமைக்கு தரவுகள் அனுப்புவதை நிறுத்தி உள்ளது. இது ரஷிய துருப்புகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

போரால் உக்ரைன் மட்டுமல்லாது ரஷ்யாவும் பெரும்பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், இரு தரப்பும் தங்கள் பிடிவாதங்களைக் கைவிட்டு இணக்கமான சூழலுக்கு வழிவகுத்து வருவது ஒரு திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து குண்டு மழை பொழிந்து, ஏவுகணைகளை வீசி, பீரங்கி தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, கடந்த 2 நாட்களாக அமைதிகாக்கிறது. மேலும் பல நகரங்களில் போர் நிறுத்தம் அமுலிலுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி ஏ.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி, அவர் சமாதான கொடி நாட்டுவதற்கு தயாராகி விட்டார் என தெளிவுபடுத்துகிறது.

இந்த பேட்டியில் அவர் கூறிய முக்கிய தகவல்கள்:-

சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கும், ரஷ்யாவுடனான மோதலுக்கும் நேட்டோ அமைப்பு பயப்படுகிறது. உக்ரைனை ஏற்க நேட்டோ தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்டு இந்த விஷயத்தில் நான் அமைதியாகி விட்டேன். எதையும் காலில் விழுந்து பெறுகிற நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ், லுகான்ஸ்க் ஆகிய 2 ரஷ்ய சார்பு பிரதேசங்களின் நிலை குறித்து சமரசம் செய்ய தயார்.  எனவும் கிரீமியாவை ரஷ்யாவின் அங்கம் என அங்கீகரிக்கும் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும்   உக்ரைன் ஜனாதிபதி  விளாடிமிர் ஸெலன்ஸ்கி கூறி உள்ளார்.

இப்படி, ரஷ்யா எந்த நோக்கங்களுக்காக போர் தொடங்கியதோ, அவற்றில் எல்லாம் இப்போது உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலன்ஸ்கி இறங்கி வந்திருப்பதால், போர் முடிவுக்கு வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் துருக்கி அதிபர் எர்டோகன் மத்தியஸ்தராக இருப்பார் என தெரிய வந்துள்ளது.

இரு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் உதவிக்கரம் நீட்டுகிறார். அவர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். வரும் சனிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேரடியாக சந்தித்து பேச உள்ளார்.

எனவே ரஷியா, உக்ரைன் போர் அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.