“நான்கு விடயங்களில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.” என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், சாதாரண வேகத்தில் விடயங்களை செய்ய முடியாது. எல்லாவற்றையும் வேகமாக கண்காணிக்க வேண்டும். எனவே தான் இந்தியா கூடுதல் நேரம் வேலை செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா வந்திருந்த நிலையில், தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பத் தயாராகவுள்ள நிலையில், இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவாதகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.
400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்றம், 500 மில்லியன் டொலர் கடன் ஒத்திவைப்பு, எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் மற்றும் ஒரு பில்லியன் டொலர் கடன் வரி என்பவற்றை புதுடில்லி இந்த ஆண்டு இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை, காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு விடயங்கள் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்போது இரு தரப்பினரும் குறிப்பிட்ட, செயற்படக்கூடிய புள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றில் இணக்கம் கண்டுள்ளனர் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்னும் உரையாடல் முடிவடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.