பழிவாங்கும் விளையாட்டை தவிர்த்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை தேட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராரும் இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் ஊடகங்கள் எதிர்மறையான செய்திகளையே ஒளிபரப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் இரண்டு வருடங்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசியல்வாதி ஒருவர் பேரணியின் போது தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் மீதும் நாட்டின் மீதும் அவருக்கு அக்கறை இருந்தால் , தற்போது எந்த விலையும் இன்றி எரிபொருளை வழங்க அரசியல்வாதி முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நபர்கள் நாட்டை வழிநடத்துவதற்கு பொருத்தமானவர்கள் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மற்றுமொரு அரசியல் குழு, தற்போதைய நிர்வாகத்தை அகற்றுவதற்காக அரசியல் சார்புகள் இன்றி ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குமாறு பொதுமக்களிடம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதால் சலுகைகள் அல்லது நிவாரணம் கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.