கொழும்பில் நாளைமறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூட்டியுள்ள அனைத்துக் கட்சி மாநாடு தொடர்பில் பல கட்சிகளும் தங்களுடைய எதிர்பபை வெளியிட்டு வருகின்றனர்.
ஆளுங்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதில் அர்த்தம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது அரசாங்கத்திற்கு விசேட உதவிகளை வழங்குகிறது எனவும் அது தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்தை பலப்படுத்துவது அல்ல ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. சில அரசியல் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ள நிலையில், சிலர் தங்களது கொள்கைகளின் அடிப்படையில் அழைப்பை நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் மக்களின் சுமைகளிலிருந்து விடுபடுவதற்கான வேலைத்திட்டத்தை வகுப்பதற்கும் அனைத்து தரப்புக்களையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
எனினும் முக்கியமான பல கட்சிகள் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. “ பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நாளைமறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்ற மாட்டார் என்பதை ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் எம்.பி., பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் அதிகாரப் பகிர்வில்தான் தங்கியுள்ளது என்பதை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெதிவித்துள்ளார்.
மேலும் சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிக்கின்றது என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.