23

23

நாடாளுமன்றில் திலீபனின் போராட்டத்தை நினைவுபடுத்திய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் !

சிறிலங்கா நாடாளுமன்றில் தியாகி திலீபனின் வார்த்தைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நேற்று திருத்தங்களுடன் நிறைவேறியது.

இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்று கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் 12 நாட்கள்  தியாகி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு உயிர்த் தியாகம் செய்திருந்தார்.

இந்தச் சட்டம் இறுதியில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது தியாகம் தங்களிடம் கூறியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய தினம் குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.

இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் திலீபன் ஆகியோர் ஆதரவாக வழக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“வறுமை கொடுமை காரணமாக நாட்டை விட்டு மக்கள் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.” – சர்வகட்சி மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் !

வடக்கில் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து இரண்டு நாட்களில் 16 பேர் படகு மூலமாக இந்தியாவிற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறுமை, கொடுமை காரணமாகவே அவர்கள் இவ்வாறு அயல் நாட்டில் சென்று தஞ்சமடைந்துள்ளனர் என இன்று சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என அனைவரையும் வெகுவாகப் பாதிப்படையச் செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் தற்போது ஆட்சியிலிருப்பவர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் மக்கள் பிரதிநிதிகளான எமக்கு இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே தான், கூட்டமைப்பிலிருந்து இரா.சம்பந்தன், சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை கொடுமை காரணமாக நாட்டை விட்டு மக்கள் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

பட்டினிச்சாவுக்கு அஞ்சி இந்தியாவுக்கு அகதிகளாய் தப்பியோடும் இலங்கை தமிழர்கள் !

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணி சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து சேர்ந்ததாக வவுனியாவிலிருந்து அகதிகளாய் வந்துள்ள இலங்கை தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால் பவுடர், அரிசி, பருப்பு, கோதுமை மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர்.

நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பின் இஞ்சின் சரி செய்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை அடைந்தனர்.

இலங்கை நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்ககை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக் தமிழக்ததிற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மேலும் பலர் அகதிகளாக தனுஸ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய தகவல் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மீண்டும் அதிகரித்ததது காற்றில் தூசு துகள்களின் செறிவு !

நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களில் தூசு துகள்களின் செறிவு 100 முதல் 150 இற்கு இடையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு 100 இற்கும் குறைவாகவே காணப்படல் வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் அதிகரித்துள்ள வளிமாசடைவினால் இலங்கையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவாசக் கோளாறுடையவர்களை அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி கோரிக்கை விடுத்துள்ளார்.

““ஜனாதிபதி செய்த செயல்களால்  உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது.” – அமைச்சர் ஜோன்ஸ்டன் புகழ்ச்சி !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஜனாதிபதி செய்த செயல்களால்  உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன். இந்த நாட்டு மக்களும், உங்களுக்கு வாக்களித்த மக்களும், எமக்கு வாக்களித்த மக்களும் காப்பாற்றப்பட்டனர். 200,000 பேர் இறப்பார்கள் என்றீர்கள். ஒக்ஸிஜன் இல்லை என்றீர்கள். நீங்கள் சொன்ன பொய்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது.

எண்ணெய் கொண்டு வர டாலர்கள் இல்லை. ஆனால் தார் கொண்டு வரப்படுவதாக கூறினீர்கள். ஆனால் அரசு தார் கொண்டு வருவதில்லை. தனியார் மூலம் தார் கொண்டுவரப்படுகிறது. கொரோனா தொற்று நிலைமையிலும் இந்த நாட்டில்  பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது

கொவிட் பிரச்சினை இல்லாத நிலையிலும் மக்களுக்கு வரிசையில் இருக்க நேரிட்டது. கப்பல் வரும்வரை காலிமுகத்திடலில் காத்திருக்க நேர்ந்தது,   உங்கள் தரப்பு  1.5 மில்லியன் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

உங்கள் கட்சிக்கு பல பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் நிரம்பியுள்ளனர். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாங்களும் இருக்கிறோம்.

அதனால்  பைசர்  தடுப்பூசி  ஏற்றி  ஜனாதிபதி கோத்தபாய அவரை பாதுகாத்தார். அவர் இருக்க வேண்டும்.  அவர் பாதுகாக்கப்பட வேண்டும்.  எதிர்காலத்தில் எண்ணெய் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். வாயு பிரச்சினைகளை தீர்ப்போம்.

இவை தற்காலிகமான பிரச்சினைகள்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த சவாலை நாம் நிச்சயமாக வெற்றிகொள்வோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம், கூட்டமைப்பை சந்திக்கும் ஜனாதிபதியின் திட்டம்.” – இலங்கை அரசை பாராட்டிய விக்டோரியா நூலண்ட் !

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தமிழ்தேசிய கூட்டமைப்பினை சந்திக்கவுள்ளதை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களிற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் வரவேற்றுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தமிழ்தேசிய கூட்டமைப்பினை சந்திக்கவுள்ளதை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவி;ன் அரசியல் விவகாரங்களிற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் வரவேற்றுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்திக்கும் ஜனாதிபதியின் முடிவு மிக முக்கியமான ஒன்று அதனை நாங்கள் வரவேற்கின்றோம்என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்துடன் உதவியை நாடுவதற்கு எடுத்துள்ள துணிச்சலான முடிவை வரவேற்றுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களிற்கான துணைச்செயலர் விக்டோரியா நூலண்ட் இலங்கை அரசாங்கம் மாகாணாசபை தேர்தலை நடத்தவேண்டும் ஜனநாயக செயற்பாடுகளிற்கான சூழலை அதிகரிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்த பி;ன்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையுடனான எங்களுடைய உறவு மிகவும் நெருக்கடியான கொவிட் பெருந்தொற்று காலம் உட்பட 70வருடங்களிற்கு மேல் வலுவானதாக காணப்படுகின்றது, இந்தக்காலப்பகுதியில் இலங்கைக்கு தடுப்பூசிகளையும் உபகரணங்களையும் வழங்கமுடிந்தமை குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம்.

ஆனால் இலங்கைக்கு மிகவும் கடினமான முக்கியமான தருணத்தில் நாங்கள் வந்துள்ளோம். நீங்கள் இலங்கையின் முக்கியமான சகா. இந்தோ பசுபிக்கில் முக்கியமான அமைவிடத்தில் இலங்கை உள்ளது, எங்களால்இந்த முக்கியமான தருணத்தில் உதவுவதற்கு ஆர்வமாக உள்ளோம்.

வெளிப்படையான சுதந்திரமான இந்தோ பசுபிக்கிற்கான அர்ப்பணிப்iயும் உங்கள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தது போல விதிமுறைகளை அடிபப்படையாக கொண்ட ஜனநாயக உலக ஒழுங்குமுறைக்கான அர்ப்பணிப்பையும் நாங்கள் பகிர்ந்துகொள்கின்றோம். வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தது போல அமெரிக்காவுடன் ஒத்துழைப்புடனான – அதிக வலுவான -அதிக ஜனநாயக தன்மை மிக்க அதிக வளம் மிக்க- அதிகளவு நியாயமான இலங்கைகக்கான எங்களின் பகிரப்பட்ட அபிலாசைகள் குறித்து நாங்கள் மிகவும் ஆழமான பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம்,

இந்த சூழமைவி;ன் அடிப்படையில் சமீபவாரங்களில் எடுக்கப்பட்டுள்ள நீதியை நோக்கிய- காயங்களை ஆற்றுவதை நோக்கிய – மனித உரிமைகளை நோக்கிய ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகின்றோம். குறிப்பாக நேற்றுபயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபப்பட்டதையும் சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டதையும் வரவேற்கின்றோம்.

இன்னமும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. வேறு எவரையும் விட உங்களிற்கு நன்கு தெரிந்திருக்கும் நீங்கள் இந்த முக்கியமான பணியை முன்னெடுக்கும் அதேவேளையில்

நாங்கள் உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளோம். வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதை போல வெள்ளிக்கிழமை தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்திக்கும் ஜனாதிபதியின் முடிவு மிக முக்கியமான ஒன்று அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

உலக வரலாற்றில் நெருக்கடியான வரலாற்றை கொண்ட பல நாடுகள் செயற்பட்டதை போல உண்மையை கண்டறியும் பொறிமுறையை அமைக்கும் எண்ணம் – குறிப்பாக தென்னாபிரிக்க அனுபவத்தை பயன்படுத்தும் யோசனை மிகச்சிறந்தது – அதற்கு ஆதரவளிப்பது குறித்து ஆர்வமாக உள்ளோம். அரசசார்பற்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினர் மீதான கண்காணிப்பை-தடுத்துவைத்தலை- துன்புறுத்தல்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டியதை நாங்கள் வலியுறுத்தவிரும்புகின்றோம்.

நாங்கள் இன்று சிவில் சமூக தலைவர்களை சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். மாகாணசபைதேர்தல்களையும் ஜனநாயக சூழலை மேலும் விரிவுபடுத்துவதையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

ஒட்டுமொத்தத்தில் நான் வெளிவிவகார அமைச்சரையும் நீதியமைச்சருடனான அவருடைய இணைந்த செயற்பாடுகளையும் நீதி மற்றும் தேசிய காயத்தை ஆற்றுதல் தொடர்பான விடயங்களை முன்னோக்கி நகர்த்துவதற்காக பாராட்ட விரும்புகி;ன்றேன்,நீங்கள் இந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது இது எங்கள் இரு நாடுகளிற்கு மத்தியிலான இணைந்த செயற்பாடுகளிற்கான தளத்தை மேலும் அதிகரிக்கும்,குறிப்பாக பாதுகாப்பு துறைகளில.

வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தது போல பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது,கொவிட் காலம் முழுவதும் அது வலுவானதாக காணப்பட்டது, இருநாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது,

தற்போது மிகவும் முக்கியமான நடவடிக்கை என்னவென்றால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடும் துணிச்சலான நடவடிக்கையாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வ கட்சி மாநாட்டில் வாக்குவாதம் – ரணிலிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி !

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பது பற்றி ஆராய நாம் இங்கு வரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றிக் கதைக்க முடியாது. இறுதியில் விஜய மன்னர் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை இருந்திருக்காது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும்.”

இவ்வாறு சர்வகட்சி மாநாட்டில் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிமரசிங்க.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று சர்வகட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைப் பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ரணில் விக்கிமரசிங்க:

“நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவே நாம் இங்கு வந்தோம். மாறாக கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல. எனினும், குறுகிய அரசியல் நோக்கில், தற்போதைய நிலைமைக்கு கடந்த அரசுதான் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார்.

அதற்கு என்னாலும் பதில் வழங்க முயும். பிறகு அவர் கருத்து வெளியிடுவார். அதற்கு நான் பதில் வழங்குவேன். அப்படியானால் இந்தப் பிரச்சினையைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டியிருக்கும்.

இறுதியில் விஜய மன்னன் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கும் வரக்கூடும். அதேபோல் எதிரணிகளைத் தோற்கடிக்க நாம் இங்குவரவில்லை. எதிர்காலத்தில் அவர்களையும் இணைத்துக்கொள்ளும் நோக்கில்தான் வந்துள்ளோம்” – என்றார்.

அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச:

“மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு உங்களுக்கு ஏதேனும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகின்றோம். கடந்த கால நிலவரம் பற்றியே அவர் கூறவிளைந்துள்ளார்” என்றார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பிலும் ரணில் இதன்போது கருத்து வெளியிட்டார். நிதி அமைச்சருடன் இது பற்றி விளக்கம் கோரினார்.

இலங்கையை சொர்க்கபுரியாக்க செய்ய வேண்டியது என்ன..? – ஜனாதிபதிக்கு சித்தார்த்தன் கடிதம் !

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றும் என்பதையும் நான் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விளைகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே,

நாட்டின் நிலைமையைப் பற்றி ஆழமான பொருளாதாரப் பகுப்பாய்வைச் செய்தால், நாட்டின் தற்போதைய பொருளாதார அவலத்திற்கு கோவிட் பெருந்தொற்று மாத்திரம் காரணம் அல்ல என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம். பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகக் கையாளுகையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணமாகும்.
சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும்.
எவ்வாறாயினும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் சித்தாந்தத்தால் உந்தப்பட்ட அரசாங்கங்கள் அரசியல் பிரச்சினைக்கு இராணுவ தீர்வையே தேர்ந்தெடுத்தன. உண்மையில், அதுவே இன்றைய பேரழிவுகரமான கடன் நெருக்கடிக்குள் நம் நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது.
நீங்கள் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால், பல தசாப்தங்களாக சிங்கள பௌத்த பெரும்பான்மை சித்தாந்தத்துடன் நடாத்தப்பட்ட யுத்தமானது இன்று எமது நாட்டின் அனைத்து சமூக மக்களினதும் தோள்களில் ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையையும் சுமத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னருங்கூட, தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து வந்த எமது நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை. மாறாக நீங்கள் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட அப்போதைய அரசாங்கம், தமிழ் மக்களை யுத்தத்தில் வெற்றிகொண்டுவிட்டோம் என்கின்ற மனப்பான்மையுடன் தொடர்ந்தும் எமது நாட்டை ஆட்சி செய்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தியது. அதுவே, அந்நேரத்தில் பெரும் ஆற்றலையும் விருப்பத்தையும் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதை தடுத்திருத்தது.
2009 இல் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கலாம். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வொன்றை நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையில் காணப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் உட்பட பல்வேறு சர்வதேச தலைவர்களுக்கும் உறுதியளித்திருந்தார். அவர் அதனைச் செய்திருந்தால், புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்த்திருப்பார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் மிக சக்திவாய்ந்த மனிதராக இருந்தபொழுது, அரசியல் தீர்வுக்கான சாத்தியமான யோசனையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவினால் முன்மொழியப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்கின்ற ஓர் அரசியல் தீர்வு இருந்தது. அதனை இந்த நாட்டு மக்களின் பேராதரவினைப் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ இலகுவாக அமுல்படுத்தியிருக்கலாம்.
அவர் வாக்குறுதியளித்தபடி 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண விரும்பாவிட்டாலும், குறைந்தபட்சம் 13வது திருத்த வரைபை, அதன் ஆரம்ப அசல் வடிவிலேயே முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதற்கான துணிவு அவருக்கு இருக்கவில்லை. நாட்டில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆற்றலுடன் இருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களுக்கு உரிய இடத்தினை வழங்க அரசாங்கம் முன்வராததால் விலகி நிற்க முனைந்தனர்.
இதற்கிடையில், எமது நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் வந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கடுமையான விதிமுறைகளைக் கடந்து அரசாங்கத்தின் சிங்கள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மேம்படுத்தப்பட்ட இந்த அதிகாரிகளின் சிங்கள பௌத்த பெரும்பான்மை மனோநிலை, அந்த முதலீட்டாளர்களின் பெரும் உற்சாகத்தை பாரிய அளவில் சிதைத்துவிட்டது. முதலீட்டாளர்கள் மீது சுமத்தப்பட்ட தாங்க முடியாத மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சுமைகள் அவர்கள் தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் வசிக்கும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது என்பதை நான் உங்களுக்குச் கூறமுடியும். சில முதலீட்டாளர்கள் நாட்டின் தென்பகுதியிலேயே முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தனிப்பட்ட முறையில், இதுபோன்ற சில சம்பவங்களை நான் அறிவேன். மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள்பற்றி; எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய ஆட்சிமுறை என்கின்ற நீண்ட கால அபிலாசையை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை எட்டும்வரை, ஒரே நாட்டிற்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான பரிந்துரையாக குறைந்தபட்சம் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அதன் ஆரம்ப வடிவிலேயே, முழுவதுமாக செயல்படுத்துமாறு எமது கட்சியின் சார்பில் பரிந்துரைக்க விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கை ஒன்று மாத்திரமே தற்போதைய பொருளாதார அவலநிலையில் இருந்து நமது நாட்டை மீட்பதற்கான ஒரே வழியென நான் திடமாக நம்புகின்றேன்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றும் என்பதையும் நான் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விளைகிறேன் என குறிப்பிட்டு இன்றைய சர்வகட்சி மாநாட்டில் புளொட் தலைவர் சித்தார்த்தனால் சர்வகட்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.