16

16

“இலங்கையில் நிகழும் மரணங்களுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பு.” – முன்னாள் அமைச்சர் சாடல் !

புற்று நோய் அல்லது இருதய நோய்க்கான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் மரணத்திற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில  கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நிதியமைச்சரின் தவறு காரணமாகவே எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்கின்றனர். மக்கள் தற்போது அனுபவித்து வரும் துன்பங்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இதேவேளை புற்று நோய் அல்லது இருதய நோய்க்கான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் மரணத்திற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த ஆண்டு பொருட்களை இறக்குமதி செய்ய 20.6 பில்லியன் டொலர்களை அரசாங்கம் செலவிட்ட போதும் மருந்து, மருத்துவ உபகரணங்கள், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்ய 4.6 பில்லியன் டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டது.

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி – நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு !

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாகயிருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின்நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்

இந்திய பிரதமருக்கும் இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து புதுடில்லிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் நிதியமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தவேளை இந்தியா தனது நெருக்கமான அயல்நாடான இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக விளங்கும் செயற்படும் என தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் தான் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை குறுகியகால நடுத்தர கால பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து ஏற்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய பிரதமருக்கும் இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இந்திய பிரதமரின் பாராளுமன்ற இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு மிகவும் சுமூகமான சூழ்நிலையில்இடம்பெற்றது.

ஆரம்பத்தில் இலங்கை நிதியமைச்சர் ராஜபக்ச மிகவும் நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு வழங்கிய உதவிகளிற்காக இந்திய பிரதமருக்கு நன்றியை தெரிவித்தார்.

அதன் பின்னர் நெருக்கமான நண்பணாக இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகயிருக்கும் என இந்திய பிரதமர் உறுதிமொழி வழங்கினார். இந்த சந்திப்பின் போதுஇருவரும் இருநாடுகளின் உறவுகளுடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்தனர்.

விவசாயம், மீள்புதுப்பித்தக்க சக்தி, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலர்த்துறை – மீன்பிடித்துறை உட்பட பல துறைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். மீள்புதுப்பிக்கும் எரிசக்தி அபிவிருத்தியில் கவனம் செலுத்துவது பரஸ்பரநன்மையளிக்ககூடிய விடயம் என்பதை இரு பிரமுகர்களும் ஏற்றுக்கொண்டதுடன் அதனை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும் எனவும் இணங்கினார்கள்.

தனித்துவமான டிஜிட்டல்அடையாள அட்டைகளை உருவாக்குவதில் இந்தியாவிற்கு உள்ள நிபுணத்துவம், அதேபோன்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டமொன்றிற்கான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவ்வாறான அடையாள அட்டை சாதாரண மக்கள் பல்வேறு பட்ட சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதியாக விளங்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் இராமாயண பயணத்தையும், இந்தியாவில் பௌத்த சுற்றையும் ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டது. குறிப்பாக பெருமளவு இந்திய சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு கவர்ந்திழுப்பதற்கு இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இந்த சூழமைவில் 2009 ம் ஆண்டு இலங்கைக்கும் குஜராத் மாநிலத்திற்கும் இடையில் கைச்சாத்தான சுற்றுலாத்துறை தொடர்பான புரிந்துணர்வு குறித்து விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டது.இது மாநில அளவில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உதவக்கூடும். இருநாடுகளிற்கும் இடையிலான மீன்பிடித்துறை விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் அமைச்சர் ராஜபக்சவும்இமுழுமையான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

அந்த விவகாரத்தின் குழப்பமான பல்பரிமாண தன்மையை ஏற்றுக்கொண்ட அவர்கள் மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்துவது, வாழ்வாதாரம், சூழல் மற்றும் சமுத்திரம், சட்டத்தை அமுல்படுத்துதல், கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விரைவாக விடுவித்தல் குறித்தும் ஏற்றுக்கொண்டனர்.

இரு பிரதிநிதிகளும் இந்த குழப்பகரமான விடயத்திற்கு கூடிய விரைவில் தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்திய பிரதமரும் இலங்கை அமைச்சரும் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்லும் இலங்கையின் தீர்மானம் குறித்து ஆராய்ந்தனர். பிரதமர் நரேந்திரமோடி இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் உத்திகளை உருவாக்குவதில் இந்தியாவின் அனுபவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்

“ஒரு லட்சம் ரூபாயை தந்து நீதியை அழிக்க பார்க்கிறது இந்த அரசு.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் விசனம் !

ஒரு லட்சம் ரூபாயையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ( புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச்சான்றிதழோ தேவையில்லை என கூறியிருந்தோம். அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென  ஏன் அக்கறை வருகின்றது. ஒருலட்சம் ரூபா நிதியினை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கை செலவை கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் போராடி கொண்டிருந்தோமே தவிர ஒரு லட்சம் ரூபாவிற்காக போராடவில்லை.

யுத்தம் முடவடைந்து 13 வருடங்களை கடந்தும் எமது உறவுகளை தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.  உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கி உறவுகளை திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எமது உறவுகள் நிதிக்காக போராடவில்லை. சர்வதேசமானது  நீதி அமைச்சர் அலிசப்ரி கூறுகின்ற கூற்றையும், பதிவாளர் நாயகம் எடுத்திருக்கின்ற இந்த முடிவும் தவறானது. ஏனென்றால் நாங்கள் 13 வருடமாக தொடர்ச்சியாக வீதியோரத்தில் நின்று நிதிக்காகவோ, காணாமல் போனவர்களுக்கான சான்றிதழிற்காகவோ போராடவில்லை. எமக்கு நீதி தான் தேவையென்றே போராடி வருகின்றோம்.

சர்வதேசமானது இதனை கண்டித்து 49 ஆவது கூட்ட தொடரிலாவது எமக்கு நீதி வழங்க ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையிலே காத்திருக்கின்றோம். ஒரு லட்சம் ரூபாயையும், காணாமல் போனவர்களுக்கான சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார். இவரின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கை அரசின் நீதி மறுக்கப்பட்ட போதுதான் சர்வதேசத்தை நோக்கி போராடி வருகின்றோம். இலங்கை அரசின் உள்ளக பொறிமுறையோ, காணாமல் போனோரின் அலுவலகமோ எமக்கு தேவையில்லை என்பதனை தான் கூறிக்கொண்டிருக்கின்றோம்.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி பொறுப்பு கூற வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களும்  , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும், இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டவர்களும் , இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களையும் தான் நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்

ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியா எமது உறவுகளின் பெறுமதி? இதனை எமது உறவுகள் யாரும் வாங்க கூடாது என்பதனை ஊடக வாயிலாக தெரிவித்து கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

“பயங்கரவாதத்தை நாமே வென்றோம். நம்பிக்கையை கைவிடாதீர்கள்.” – மக்கள் அதிகம் எதிர்பார்த்த ஜனாதிபதி கோத்தாபாயவின் உரை !

““பயங்கரவாதத்தை நாமே வென்றோம். நம்பிக்கையை கைவிடாதீர்கள்.” என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இரவு மக்களுக்காக அவர் ஆற்றிய உரையில்,

 

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.
உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன்.

அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன். இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

இன்றைய இக்கட்டான நிலைமை, நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகமும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட் நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நாட்டின் அரசியல்வாதிகளினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பதேயாகும். இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடி ஆகும். ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும்.

கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும். அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக்கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.
ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும். இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எங்களது கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். இதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது. அந்த கலந்துரையாடல் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலுக்குப் பிறகு, அனுகூலங்கள், பிரதிகூலங்களை ஆய்வுசெய்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் முடிவு செய்தேன்.

கடந்த காலத்தில் நான் எடுத்த சில முடிவுகளால் இறக்குமதிச் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டுகொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். மேலும், உள்நாட்டில் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவித்தோம். அதேபோன்று, பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பயிர்களை நம் நாட்டில் பயிரிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அவற்றின் வெற்றிகரமான முடிவுகளை இப்போது காண்கிறோம்.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன். எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம். கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் என்னிடம் பாதுகாப்பு, ஒழுக்கம், நவீனமயமான அபிவிருத்தி அடைந்த நாடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ஆகியவற்றையே கேட்டீர்கள். எனது பதவிக்காலத்தில் ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆரோக்கியமான தாய் நாட்டில் எனது எதிர்கால பதவிக்காலத்தை அந்த அடிப்படை இலக்குகளுக்காக அர்ப்பணிப்பேன்.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அரச ஊழியர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, எமது பிள்ளைகளுக்கு சிறந்த நாட்டை வழங்குவதற்காக, எம்மிடம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்ள நாம் ஒரு குழுவாக இலட்சியத்துடனும் தியாகத்துடனும் செயற்படுவதையே ஆகும்.
உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக உரையாற்றும் கோட்டாபாய ராஜபக்ஷ – ஆதலால் மின்தடை இல்லையாம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ள நிலையில், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மின் தடை ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டு அட்டவணையின்படி, இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை மின் தடைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இன்று மாலை 8.00 மணியுடன் மின்வெட்டு முடிவடைந்து, நியமிக்கப்பட்ட பிரிவுகளில் இரவு 9.30 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை போட்டுத்தாக்கும் விமல்வீரவங்ச !

சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

2015 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 2015இல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது அதனை விட அதிகமானவர்கள் பதவி வகிக்கின்றனர். அமைச்சரவையை எத்தனை முறை மாற்றினாலும் நாமல் ராஜபக்சவிற்கு ஏதாவது பதவியை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினகரன்: விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம்

இன்று இவ்வளவு எதிர்ப்பை வெளியிடும் விமல்வீரவங்ச தான் 2010ம் ஆண்டில் நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகவே  போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவிதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் கட்டுமானப் பொருட்களின் விலை – தொழில்வாய்ப்பை இழந்துள்ள தொழிலாளர்கள் !

சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் துறையும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

சீமெந்தின் விலையும் ஏனைய பொருட்களின் விலைகளும் நாளாந்தம் அதிகரித்து வருவதனால், தற்போது நாடு இந்த துறையில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை கட்டிடத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான நுவன் சுமேத தெரிவித்துள்ளார்.

தனது நிறுவனத்தில் கிட்டத்தட்ட 15-20 பணியாளர்கள் பணிபுரிந்து வந்ததாகவும், தற்போது 5க்கும் குறைவான தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும் , நாடு முழுவதும் இதேபோன்ற நிலைமையை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் புதிய தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நியாயமான விலையில் சீமெந்து சந்தைக்கு வெளியிடப்படும் என நினைத்ததாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவரான சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.

மேலும் தற்போது ஒரு மூடை சீமெந்தின் விலையானது ரூ.1900/- ஆக உயர்ந்துள்ளது, தற்போது சந்தை ஒரு மாஃபியா போல செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.