25

25

“அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு தயார்.” – எம்.ஏ.சுமந்திரன் !

அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு தயார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சிகூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்,அவர்கள் தங்கள் தாயகப்பகுதியில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் மில்லியன் கணக்கில் டொலரை முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர் இலங்கையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யவும் அவர்கள் தயார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

டயனா கமகேயின் யோசனையை ஆதரித்த சுமந்திரன் இலங்கையின் சமமான மக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும் புலம்பெயா தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கத் தயார் என சுமந்திரன் தெரிவித் தார்.

மனைவியுடன் சண்டை – யாழில் பெற்றோல் நிலையத்தை எரித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் !

குடும்ப தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் மதுபோதையில் , கையில் பெற்றோல் போத்தல் ஒன்றுடன் வந்து , தனக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு என்றும் அதனால் தான் மனமுடைந்துள்ளதாக கூறி , தான் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை தீயிட்டு கொளுத்தி , தானும் உயிர் மாய்க்க போறேன் என்றுள்ளார் .

அவரை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் , அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்ற போது , அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அட்டகாசம் புரிந்துள்ளார் . அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் .

வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் – சிறுவன் கைது !

தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (25) காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து தலை மன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த வீட்டில் இருந்து 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது 17 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞன் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – அச்சுப்பதிப்புகளை இடை நிறுத்தும் பிரபல செய்தித்தாள்கள் !

அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பை அவற்றின் உரிமையாளர் இன்று வெளியிட்டுள்ளார்.இலங்கையின் நிதிபேரிடருக்கு புதிதாக பலியாகியுள்ளவையாக இந்த பத்திரிகைகள் காணப்படுகின்றன.
22மில்லியன் சனத்தொகையை கொண்ட தென்னாசிய நாடு 1948ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான நிதி பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்புகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குறைவாக காணப்படுகின்ற நிலையிலேயே இந்த நிலையேற்பட்டுள்ளது. உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் ( தனியார்-) தங்களுடைய ஆங்கில நாளிதழான ஐலண்டையும் திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க முடியும் – அச்சுத்தாள் தட்டுப்பாடே இதற்கு காரணம் என அறிவித்துள்ளது.
இலங்கையின் பல்வேறு கொள்கைகளை கொண்ட நாளிதழ்கள் விலைகள் அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாடுகளில் இருந்து அச்சுத்தாள்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் நெருக்கடி காரணமாகவும் தங்கள் பக்கங்களை குறைத்துக்கொண்டுள்ளன.
இதே காரணங்களிற்காக ஆண்டிறுதி பரீட்சைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை காரணமாக மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அனைத்துவகையான விலைகளும் அதிகரித்துள்ளன.
பெப்ரவரியில் பணவீக்கம்17.5 வீதமாக காணப்பட்டது- ஐந்தாவது மாதமாக பணவீக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. எரிபொருளை பெறுவதற்காக வாகனங்களுடன் மக்கள் காத்திருக்கின்றனர்- நீண்டநேரம் காத்திருந்ததால் நால்வர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

“சில நாட்களில் தீர்வு.” – கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையேயான கலந்துரையாடலில் பேசப்பட்டது என்ன.?

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1 மணி வரை நடைபெற்றிருந்தது.

ஜனாதிபதியை சந்தித்து பேசியது

குறித்த சந்திப்பின் நிறைவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  எம்.ஏ சுமந்திரன் ,

“தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பானது கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டே இன்றைய தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அரசியல் தீர்வு தொடர்பாக கலந்தாலோசிக்கவே நாம் விசேடமாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தோம்.

அரசமைப்பின் ஊடாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இதில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அரசமைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இது சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அறிக்கை கிடைத்தவுடன், அடுத்தக்கட்டப் பேச்சை கூட்டமைப்புடன் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.

அத்தோடு, எமது அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். இதில் 4 விடயங்களில் இப்போது உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தோம்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இணங்க, இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். மேலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக நீதி அமைச்சரும் நானும் இணைந்து, சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் விளக்கவும் தீர்மானித்துள்ளோம்.

இதனை நாம் அடுத்து சில நாட்களில் மேற்கொள்வோம். அடுத்ததாக காணிப் பிரச்சினை தொடர்பாக பேசினோம். அதாவது, வடக்கு- கிழக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

அத்தோடு, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி எனும் பெயரில் இடம்பெறும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். நீண்ட காலமாக பயிர்செய்கையில் ஈடுபடுவோருக்கும் இடையூறுகளை விளைவிக்காமல், அவர்களை அதனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம். அதேநேரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாம், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடானது அவர்களுக்கான தீர்வாக அமையாது என்றும் மாறாக இதுதொடர்பாக முழுமையான விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

நான்காவது விடயமாக, விசேட நிதித்தொகையொன்றை வடக்கு- கிழக்கு பகுதி அபிவிருத்திகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை நாட்டுக்குள் ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். எமது இந்தக் கோரிக்கைளை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் இவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் உறுதியளித்துள்ளன.

புதிய அரசமைப்பு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் கோரியுள்ளோம். அதற்கான நடவடிக்கை இன்னும் 2 மாதங்களில் இடம்பெறும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் 50 ரூபாவினால் அதிகரித்தது பெற்றோல் விலை !

இன்று (25) நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலையை 49 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது.

ஆனால் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே இந்த முடிவுக்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.