07

07

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில்….(பகுதி 3) : சிவா முருகுப்பிள்ளை

சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பிரசவித்து… பாலூட்டி… தாலாட்டி…. பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் முஹாஜிதீன் என்று ஆரம்பித்து தலிபான் என்ற இணைப்பாக பெரு விருட்சமாக வளர்ந்து கோலோச்சி ஆட்சியும் அமைத்தது ஆப்கானிஸ்தானில் இது சோவியத் படைகளின் விலகலுக்கு முந்தைய, பிந்தய காலகட்ட வரலாறு.

தலிபான்கள் நம்பும் மத அடிப்படைவாதம்தான் அவர்களின் ஆட்சி மொழியாக இருந்தன….. இனியும் இருக்கும்…. இந்நிலையில் தன் விருப்பமான சொல் கேட்காது வளர்ந்துவிட்ட இந்த தீவிரவாதத்தை தறிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு 911 என அறியப்பட்ட செப்ரம்பர் 11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் ஒரு காரணமாயிற்று.

தனது நாட்டிற்குள் வந்து தாக்குதல் நடாத்தியது கடும் சினத்தை மட்டும் அல்ல கௌரவப் பிரச்சனையும் ஆகியது அமெரிக்காவிற்கு. உண்மையில் இத் தாக்குதலின் பின்னணி என்ன…? யார்…? என்பது இன்றுவரை அவிளாத முடிசாக இருப்பதுவும் அதனைத் தவிர்த்து இங்கு கடந்து செல்லவும் முடியாது.
இதன் அடிப்படையில் ஒரு கல்லில் பல மாங்காய் என்று ஈராக், ஆப்கானிஸ்தான் என்று தனது கழுகுக் கால்களை விரித்துக் கொண்டது அமெரிக்கா. இதற்கு அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஒத்து பிடில் வாசித்தனர். இதற்குள் லிபியாவையும் இணைத்துக் கொண்டனர்.

அக்டோபர் 2001 இல், செப்டம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறிக் கொண்டு ஒசமா பின் லாடன் மற்றும் அவரது அல்-காய்தா இன் உறுப்பினர்களை அவர்கள் தலிபான்களின் விருந்தினர்கள் என்ற வகையில் தம்மிடம் ஒப்படைக்க மறுத்ததால் தலிபான் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தது.

இவர்களுடன் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளும் இணைந்து கொண்டன. ஆரம்ப படையெடுப்பின் போது, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் அல்-காய்தா பயிற்சி முகாம்கள் மீது குண்டு வீசின, பின்னர் ஆப்கானிஸ்தானில் செயற்பட்ட வடக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டு தலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

மேலும் அமெரிக்காவும் நேட்டோ நட்பு நாடுகளும் உலகின் பல நாடுகளிலும் மனிதாபிமான செயற்பாட்டை செய்தல்…. ஜனநாயகத்தை மீட்டல்… தீவிரவாதத்தை இல்லாமல் செய்வதில் தாங்களே உலகப் பொலிஸ்காரர்கள் வழிகாட்டிகள் என்பது போன்ற செயற்பாட்டில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாவில் தமது ஆக்கிரமிப்பிற்கு நியாயங்களை காட்டி நின்றனர்.

முதலில் போரை தொடுப்பதற்காக நியாயங்கள் உள்ளது போன்ற பிரச்சாரங்களை தமக்கு சாதகமான பிரபல்ய ஊடகங்கள் மூலம் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு முன்பு மிக நேர்த்தியாக செய்ய ஆரம்பிப்பர்.
அமெரிக்க மக்களை ஏன் உலக மக்களை இது ஆக்கிரமிப்பு யுத்தம் அல்ல ஜனநாயகத்தை மீட்பதற்காக யுத்தம்… மனிதாபிமான யுத்தம்…. என்று எண்ணும் படியான கருத்தியலை ஓரளவிற்கு ஏற்படுத்துவதில் அமெரிக்கா ‘வெற்றிகரமாக’ செயற்பட்டனர் என்றே கூறவேண்டும்.

இதன் பின்பு அவர்களுக்கு சார்பான அந்தந்த நாடுகளின் உள்ளுர் தீவிரவாதிகளுக்கு பணம், ஆயுதம், ஆலோசனையை வழங்குதல்…. பின்பு போரைத் தொடங்குதல்… என்று ஆரம்பிப்பதே அமெரிக்க ‘மனிதாபிமான’ யுத்தங்கள் ஆகும்.

இதில் அதிகம் தரை மார்க்கமாக அமெரிக்க படைகள் நகருதலை சோமாலியாவில் அவர்களுக்கு கிடைத்து பாரிய இழப்பும்… அனுபவங்களும் கூடவே அமெரிக்க மக்களிடம் தமது பிள்ளைகள் அநியாயமாக சாகடிக்கப்படுகின்றார்கள் என்ற எதிர்ப்பு நிலையை சமாளிக்கும் முகமாக ஆகாய மார்க்கமாக தாக்குதலை அதிகம் செய்தல் மூலம் நாடுகளுக்கு எதிரான யுத்தங்களை செயற்படுத்தினர். இம்முறையையே ஆப்கானிஸ்தானிலும் 2001 அக்ரோபரில் நடைமுறைப்படுத்தினர்.

இங்கும் ஆகாயத் தாக்குதல் என்ற வார்த்தையை தவிர்த்து ஆகாய மார்க்க பிரச்சாராம் (Air campaign) என்பது போன்ற சொல்லாடலைப் பாவிப்பது என்பதுமாக ஆப்கானிஸ்தான் அமெரிக்க கூட்டமைப்பு படைகளிடம் 2001 இறுதியில் இல் வீழ்ந்து.

தலிபான்களின் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறைந்தும் கொண்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆப்கானிதானில் எல்லை பூராக தரையால் இணைக்கப்பட்டிருந்ததும் பெரும் உதவியாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தமக்கு சார்பான ஒரு அரசை அங்கு நிறுவுவதற்கான தேர்தலை நடாத்துவது…. அமையும் பொம்மை அரசை தமது விருப்பத்திற்கு ஏற்ப நடாத்துவது என்ற ‘ஜனநாயக’ வழி முறையைத்தான் ஆப்பானிஸ்தானில் நடாத்தினர் அமெரிக்க கூட்டமைப்பினர்.

இதில் உள்ளுர் ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள், பணியாளர்கள் தமது நாட்டின் செயற்பாட்டில் பொதுப் போக்கில ஈடுபட்டனர். இவ்வாறு அரசு அமைப்பதுவும் நிர்வாகத்தில் பங்கு பற்றுவதற்கும் எதிர் நிலையாக அமெரிக்காவின் படையிடம் தமது ஆட்சியை இழந்த தலிபான்கள் துரோகிகளின் செயற்பாடாகவே கருதினர். அமெரிக்க படைகளின் பிரசன்ன காலமாகிய கடந்த 20 வருடங்களும் நிலமை இவ்வாறுதான் நகர்ந்தது.

தொடர் ஆயுத மோதல்களாக நகர்ந்த இருபது வருடங்களில் மற்றைய எந்த நாடுகளையும் விட ஆப்கானிஸ்தானின் புவியியல் அமைப்பு தலிபான தீவிரவாதிகளின் மறைவிடங்களை முழுமையாக எந்த நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு அடக்க, அழிக்க முடியவில்லை.

கூடவே அருகில் எல்லைகள் முழுவதும் பரந்திருக்கும் பாகிஸ்தானின் தரையால் உள்ள இணைப்பு இந்த தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானை தமது மறைவிடமாக பாவிப்பதற்கு இருந்து ஏதுவான ‘தட்ப வெப்ப’ நிலமையும் இந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பாகிஸ்தானில் ஆட்சியை தொடருதல் ஏன் உயிர்வாழுதல் என்பது கடினமானது என்ற ‘ஜனநாயகத்தை’ பாகிஸ்தான் கொண்டிருந்ததும் தலிபான்கள் ஆப்கனிஸ்தானில் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமாகியது.

கூடவே தலிபான் தரப்பிலும் அமெரிக்க கூட்டமைப்பு படைகள் ஆப்கானிஸ்தான் அரசு என்று முத்தரப்பிலும் போதைவஸ்தில் உலக சந்தையில் பெருந்தொகை பணமீட்டல் என்பது இங்கு இந்த போர் தொடர வேண்டும் என்று முத்தரப்பினரும் விருப்பத்துடன் இருந்த துர்ப்பாக்கிய நிலமையை நாம் புறம் தள்ளிவிட முடியாது.

அமெரிக்க கூட்டமைப்பு படைகளின் பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியாத ஆப்கான அரசின் செயற்பாடுகள் என்பன பொது மக்களை தலிபான், ஏனைய தீவிரவாத அமைப்புக்கள் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

உலக நவீன ஆயுதங்கள், பல லட்சம் பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்கான அரசு படைகள் என்று யாராலும் வெல்லப்பட முடியாத அதே வேளை அமெரிக்க அதன் கூட்டமைப்பு நாடுகளின் டாலர்களை தின்று கொண்டிருந்த அவமானகரமான யுத்தமாக அமெரிக்க அரசினால் உணரப்பட்டது. ஆனாலும் உலகப் பொலிஸ்காரனாக செயற்படும் அமெரிக்காவின் கௌரவ பின்வாங்கல் அவர்களால் செய்ய முடியவில்லை. ஆனால் டொனால் ட்றம் போன்ற ஒரு ‘வித்தியாசமான’ அமெரிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானமே ஒரு கௌரவமான பின்வாங்கலை ஜோ பைடன் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுதியது.

சில வருடங்களுக்கு முன்பு தலிபான் சீனா இடையில் ஏற்பட்ட தொடர்பும் அதனைத் தொடர்ந்து சீனாவை தலிபான்களிடம் கோர்த்துவிட்டுக் கழட்டிக் கொள்ள நினைத்த அமெரிக்காவின் முயற்சிகளில் சீனா இராணுவ ரீதியில் சிக்கிக் கொள்ளாமல் ‘வெற்றி” கண்டது உலக செய்தி ஊடகங்களில் அதிகம் பேசப்படாவிட்டாலும் வரலாற்று உண்மைகள் இவை.

அமெரிக்கா ஆப்கானில் தங்கியிருந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மிகக் குறைந்த அளவிலான மக்களே தேர்தலில் பங்குபற்றினர் என்பதற்கு உருவாகப் போகும் ஜனநாயக அரசியல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையீனங்களும் கூடவே தேர்தலில் பங்கு பற்றினால் தலிபான்களின் துப்பாக்கிக் கோவத்திற்கு ஆளாகலாம் எ ன்பதால் அதனைத் தவிர்த்த செயற்பாடுகள் என்பன காரணங்களாக அமைந்தன.
இது ஒரு பொதுவான போக்குத்தான். நாம் இதனை 1989 ல் இந்தியப் படைகளின் பிரசன்ன காலத்தில் இலங்கையில் சிறப்பாக வடக்கு கிழக்கு மகாணங்களில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் கண்டோம்.

அமெரிக்க படைகளின் பிரசன்ன காலத்தில் ஹமீத் கர்சாய் 2001 முதல் 2014 வரை நாட்டின் தலைவராக இருந்தார். டிசம்பர் 2001 இல், தாலிபான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகு, ஹமீத் கர்சாயின் கீழ் ஆப்கான் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது. கர்சாய் நிர்வாகத்திற்கு உதவுவதற்கும் அடிப்படை பாதுகாப்பை வழங்குவதற்கும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் நிறுவப்பட்டது.

2001 இற்கு முன்பு இரண்டு தசாப்த கால யுத்தம் மற்றும் கடுமையான பஞ்சத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் உலகின் மிக உயர்ந்த குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதங்களில் ஒன்றாக காணப்பட்டது.

குறைந்த ஆயுட்காலத்துடன் பெரும்பாலான மக்கள் பசியுடன் இருந்தனர், மற்றும் உள்கட்டமைப்புகள் யுத்தங்களால் இடிபாடுகளின் நடுவேயே காணப்பட்டன. பல வெளிநாட்டு நன்கொடையாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஆளணி உதவி மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்கத் தொடங்கினர். இதற்கு பின்னாலும் தகவலறியும் ஒரு உள்நோக்கங்களும் இருந்திருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

இதற்கிடையில், தலிபான் படைகள் பாகிஸ்தானுக்குள் மீண்டும் ஒருங்கிணைக்கத் தொடங்கின, மேலும் அமெரிக்க கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து புனரமைப்பு செயல்முறைக்கு உதவின. ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்க தலிபான் கிளர்ச்சியை தொடங்கியது.

அடுத்த தசாப்தத்தில், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை மற்றும் ஆப்கான் துருப்புக்கள் தலிபான்களுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தின, ஆனால் அவற்றை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீடு இல்லாதது, அரசாங்க ஊழல் மற்றும் தலிபான் கிளர்ச்சி காரணமாக ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக பயணப்பட்டது.

இதற்கிடையில், கர்சாய் நாட்டின் மக்களை ஒன்றிணைக்க முயன்றார், மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சில ஜனநாயக கட்டமைப்புகளை உருவாக்க முடிந்தது, 2004 இல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்ற பெயரில் ஒரு அரசியலமைப்பை உருவாக்கியது.

நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் வெளிநாட்டு நன்கொடை நாடுகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் ஆப்கான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கின.

2002 ஐத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் அகதிகளாக இருந்த ஐந்து மில்லியன் ஆப்கானியர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்த நேட்டோ படைகளின் எண்ணிக்கை 2011 இல் 140,000 ஆக உயர்ந்தது, 2018 இல் சுமார் 16,000 ஆக குறைந்தது.

செப்டம்பர் 2014 இல் அஷ்ரப் கானி 2014 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியானார். ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் முதன்முறையாக அதிகாரம் ஜனநாயக ரீதியாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து 28 டிசம்பர் 2014 அன்று, நேட்டோ ஆப்கானிஸ்தானில் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் போர் நடவடிக்கைகளை முறையாக முடித்து, ஆப்கான் அரசு நாட்டின் முழு பாதுகாப்புப் பொறுப்பை பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் நிலை கொண்டு இருந்தன. ஆயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

2015 இல் மதிப்பீட்டின்படி ஆப்கானிஸ்தான் போரில் 2001 முதல் சுமார் 147,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 38,000 க்கும் அதிகமானோர் பொதுமக்கள். ‘பாடி கவுன்ட்’ என்ற தலைப்பில், ஆப்கானிஸ்தானில் நடந்த மோதலில் 106,000 தொடக்கம் 170,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலும் தலிபான்கள் அமெரிக்க விருப்பு அரசுக்கு எதிரான செயற்பாடுகளை எஞ்சிய நிலையில் தங்கியருந்த நேட்டோ படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன.

தலிபான்களை தம்மால் வெற்றி கொள்ள முடியாது என்பதுவும் ஏழு ட்றில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கனிம வளங்களில் மிகச் சிறிய பகுதியையேனும் தம்மால் வறுக முடியவில்லை என்பதுவும் ஆனால் தினம் தினம் பணம் உயிர் விரயமாவதை உணர்ந்து நேட்டோ படைகள் ஒவ்வொன்றாக கழர தொடங்க அமெரிக்கா ‘மாயநிலை'(Virtual)யில் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை உணர்ந்தது.

தோல்விகரமாக பின்வாங்குதல் என்பதில் இருந்து…. தம்மை விடுவித்துக் கொள்ளுதல் என்பதை தாம் ஆப்கானிஸ்தானுக்கு சென்ற ஜனநாயக மீட்பு மனிதாபிமான செயற்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஆப்கானிஸ்தான் அரசை காத்துக் கொள்ள மூன்று இலட்சம் படைகள் தம்மால் பயிற்றுவிற்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்று கூறி கொண்டு 2021 ஆகஸ்ட் மாதம் 31 இற்குள் தமது முழுமையான விலகலை செய்வது என்று தலிபானுடன் ஏலவே நடைபெற்ற நீண்ட சந்திப்புகள் பேச்சு வார்ததைகள் உடன்பாடுகள் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2021 ல் படை விலகலை ஆரம்பித்தனர்.

மிகுதி அடுத்த பதிவில்…..

அறிவிக்கப்பட்டார் ஆப்கானிஸ்தான் அரசின் புதிய தலைவர் – யார் இந்த முல்லா முகமது ஹசன் ..?

ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் புதிய அரசுக்கு முல்லா முகமது ஹசன் அகுந்த் கவுன்சில் அமைச்சர்களின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதித் தலைவராக முல்லா அப்துல் கானி செயற்படுவார் என தலிபான்களின் ஊடக பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை நடந்த தாலிபன்கள் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தவர் தான் முல்லா முகமது ஹசன்.
முல்லா முகமது ஹசன் அகுந்த் தான் தற்போது தாலிபன்கள் இயக்கத்தில் உள்ள ரெஹ்பரி ஷுரா என்ற சக்திவாய்ந்த முடிவெடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளார்.

ரெஹ்பரி ஷுரா (தலைமை கவுன்சில்) குழு தான் அனைத்து விவகாரங்களையும் நடத்தும் அரசாங்க அமைச்சரவை போல செயல்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் புதிய அரசாங்கத்தின் இடைக்கால தலைவராக முல்லா ஹாசனின் பெயரை தாலிபான்கள் இயக்க குழுவின் முன்னணி தலைவரான முல்லா ஹெபத்துல்லா இன்று முன்மொழிந்தார்.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முந்தைய அரசாங்கத்தின் போது அவர் வெளியுறவு அமைச்சர் மற்றும் துணை பிரதமராக பணியாற்றி உள்ளார் முல்லா முகமது ஹசன் அகுந்த். அதனால் தான் இவரை தாலிபன்கள் புதிய இடைக்கால தலைவராக தேர்வு செய்துள்ளனர்.

தாலிபான்கள் நடத்திய கடந்த ஆட்சியில் ஒரு குறுகிய கால இடைவெளியை நிறுத்துவதைத் தவிர வேறு எந்த முக்கிய பதவிகளும் முல்லா ஹசனுக்கு வழங்கப்படவில்லை. இவர் தலைமையில் தான் மார்ச் 2001 இல் பாமியன் புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டன, ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக இன்னும் பட்டியலிடப்பட்டுள்ள நபர் தான் முல்லா முகமது ஹசன்.

8 ஆண்டுகளின் பின்பு இலங்கை நிகழ்திய சாதனை – தென்னாபிரிக்காவை சிதறடித்த இலங்கை பந்துவீச்சாளர்கள் !

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே இரு அணிகளும் ஒரு போட்டிகள் வீதம் வெற்றி பெற்றிருந்த நிலையில் , தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற போட்டியில் இன்றையதினம் இரு அணிகளும் களமிறங்கின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். அவர் தவிர துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தென்னாபிரிக்கா சார்பில் பந்து வீச்சில் கே. மஹராஜ் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 30 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 78 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

அவ்வணி சார்பில் க்ளெசென் அதிகபட்சமாக 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அறிமுகவீரர் மஹீஸ் தீக்சன 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். துஷ்மந்த சமீர 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துஷ்மந்த சமீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று 3 வது போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2 – 1 என கைப்பற்றியதுடன், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றிகொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கையில் 4000 கோடி ரூபா நாணயதாள் அச்சீடு – பண வீக்கம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை !

இலங்கை ம‌த்‌திய வங்கி 4000 கோடி ரூபா நாணயதாளினை அச்சிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரி உண்டியல்களுக்கான ஏலத்தை முகாமைத்துவம் செய்யமுடியாமற் போனமை காரணமாக 39.97 நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ம‌த்‌திய வங்கி செப்டம்பர் 1 ஆம் திகதி 68. 5 பில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல் ஏலத்திற்கு விடப்பட்டிருந்தது, எனினும் பன்னிரெண்டு மாத முதிர்வு காலம் கொண்ட 5.97 வீத நிர்ணய விலையில் 43.24 பில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களை விற்க முடியாமல் போனது, இதன் காரணமாக அதனை ஈடு செய்யும் பொருட்டு பு‌திய நாணய தாள்கள் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் மாதம் அளவில் பண வீக்கம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளர். பண வீக்கம் காரணமாக பொருட்கள் சேவைகளிளும் விலை அதிகரிப்பு ஏற்பட கூடிய சூழ்நிலை உள்ளது இதன் காரணமாக சந்தை சமநிலையும் குழப்பமடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலப்படப்பாணியில் இஸ்ரேலின் பாதுகாப்பு வாய்ந்த சிறையிலிருந்து தப்பித்து சென்ற பாலஸ்தீனப் போராளிகள் !

பலத்த பாதுகாப்பு நிறைந்த இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தினத்தை சேர்ந்த 6 சிறை கைதிகள் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை அருகே அமைந்துள்ள கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 பாலஸ்தீனப் போராளிகள் மற்றும் போராளி இயக்கத்தின் முன்னாள் படைத் தளபதி ஒருவர், கழிவறையின் தரையில் பள்ளம் தோண்டி தப்பி சென்றனர். அவர்கள் மேற்கு கரை அல்லது ஜோர்டான் நாட்டிற்கு செல்லக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இஸ்ரேலின் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவர்களில் முன்னாள் தீவிரவாதியும் ஒருவர். திங்கட்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தை சிசிடிவி காட்சி மூலம் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகள் தப்பிச் சென்றது ஷாவ்ஷாங்க் ரீடெம்ப்ஷன் ஆங்கில படத்தில் வரும் காட்சிகள் போல் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்த பிரித்தானியாவிற்கு நன்றி – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானதிற்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த போது ,

பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவடைந்துள்ளன.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தாலும் அரசியல் ரீதியான செயற்பாடு காரணமாக பிரித்தானியா குறித்த தீர்மன்றத்தை எடுத்துள்ளது. அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடரில் இணைய வழியில் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர்  இதன்போது நாட்டின் அனைத்து துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பிலான உண்மை நிலையை முழுமையாக மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும்  கூறியுள்ளார்.

இதேவேளை நியூசிலாந்தில் இடம்போற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்து புலனாய்வு பிரிவுகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி பலருக்கு கொரோனா பரவ காரணமான இளைஞருக்கு 05 ஆண்டுச்சிறை !

உலகம் முழுவதும் கொரோனா இன்னமும் மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் உவ்வொரு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன.  முக்கியமாக பலநாடுகள்  தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை மிகததீவிரமாக பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில் வியட்னாம் அரசு கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் அவருக்கு அளிக்கப்பட்ட 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதலைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றி மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கக் காரணமாக இருந்ததால் அவருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

28 வயதான லே வான் ட்ரி என்ற இளைஞர் கா மவ் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூலை மாதம் கொரோனாவின் ஹோ சி மின் நகரிலிருந்து தனது சொந்த ஊரான கா மவுக்கு திரும்பியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் அதைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார். இதனால், கா மவ் நகரில் கரோனா வேகமாகப் பரவியது. ஒருவர் உயிரிழந்தார்.

இது உறுதியான நிலையில் லே வான் ட்ரி என்ற அந்த இளைஞர்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியட்நாமில் இதுவரை 5,40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 13,000 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

கர்ப்பிணி பெண் பொலீஸ் அதிகாரியை கணவன் – பிள்ளைகள் முன்னிலையிலேயே சுட்டுக்கொன்ற தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை‌ பெண்களுக்கு உரிய மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என ஆரம்பத்தில் தெரிவித்திருந்த போதும் அவர்களுடைய அண்மைக்கால நகர்வுகள் பாரிய அதிருப்தியை அனைவரிடமும் ஏற்படுத்தி வருகின்றது.

முக்கியமாக உயர் பதவிகளில் இருந்து பெண்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சுப்பதவிகள் எதுவும் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கான் வாழ் பெண்களிடையே அதிருப்தி மேலெழ ஆரம்பித்துள்ளது.

Taliban kills pregnant police officer in Afghanistan in front of her family  || ஆப்கானிஸ்தான்; தலீபான்களால் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலைஇந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் பொலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் பொலீஸ் அதிகாரி பானு நிகரா. ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர்.

ஆனால் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

“94 இலட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.” – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை 27.2 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 94 இலட்சத்து 14,852 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கையும்மெய்யுமாக சிக்கிய பொலிஸ் – கட்டிவைத்த பிரதேசவாசிகள் !

சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரது இளவயது மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி லலித் ரோஹண கமகே என்பவரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டிருக்கின்றது.

அண்மையில் இரவுவேளையில் குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது பிரதேசவாசிகளால் கையும் மெய்யுமாகப் பிடித்து கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த பொலிஸ் அதிகாரி திருமணமாகாவர். இந்நிலையில் கிராம மக்கள் இணைந்து வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.