20

20

“ரஷ்ய தேர்தலில் ஆளும் யுனைடட் ரஷ்யா கட்சி மோசடி செய்துள்ளது.” – அலெக்ஸி நாவல்னி குற்றச்சாட்டு !

ரஷ்ய தேர்தலில் ஆளும் யுனைடட் ரஷ்யா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ள நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நாவல்னி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் நாடாளுமன்ற கீழ்சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்மூலம் 450 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 17-ம் திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, யுனைடட் ரஷ்யா கட்சி முன்னிலை வகித்தது. 450 இடங்களில் 315 இடங்களைக் கடந்து கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் மொத்தம் 334 இடங்களைப் பெற்றிருந்த கட்சிக்கு இது சிறிய சறுக்கல் என்றாலும் கூட தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து சிறையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நாவல்னி, இந்த முடிவை நம்ப முடியவில்லை. 2011ல் தேர்தலில் மோசடி செய்தது போல் இப்போதும் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். 2011 தேர்தலில் மோசடி நடந்ததாக போராட்டம் நடத்தியதற்காகவே அலெக்ஸி கைது செய்யப்பட்டார்.

தேர்தலுக்கு முன்னதாக நாவல்னியின் அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டன. அதன் தலைவர்கள் அனைவரும் தேர்தலில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் ஸ்மார் வோட்டிங் செயலியை தங்கள் சேவைகளில் இருந்து நீக்கின. இதுவும் புதின் அரசு கொடுத்த அழுத்தத்தாலேயே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“கிம் ஒரு பைத்தியக்காரன்” – டொனால்ட் ட்ரம்ப்  

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்  வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் பொது இடங்களில் நட்பு பாராட்டி வந்தார். அப்படி இருப்பினும் டிரம்ப், கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
டிரம்ப், ஜனாதிபதியாக  இருந்தபோது வடகொரியாவில் நடந்து வந்த அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் எனத் தோன்றியது.
ஆனால், இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் சுமுக போக்கு இல்லை. இந்நிலையில் வெளிப்படையாக கிம்மை தன் நண்பன் என்று சொல்லி வந்தாலும், அவரை சர்ச்சைக்குரிய வகையில் டிரம்ப் திட்டி தீர்த்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் ராபர்ட் கோஸ்டா ஆகியோர், டிரம்ப் – கிம் சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர்.
அந்தப் புத்தகத்தில்தான், கிம் குறித்து டிரம்ப் தன் உயர் அதிகாரிகளோடு உரையாடுகையில், ‘அவர் ஒரு பைத்தியக்காரன்’ என்று சொல்லியிருப்பதாக தகவல்.

ரஷ்யாவின் பல்கலைகழகத்தில் 08 பேரை சுட்டுக்கொன்ற 18வயது மாணவன் !

ரஷ்யாவின் பேர்ம் நகரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், மாணவரொருவர் மேற்கொண்ட பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கைதின்போது அவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியிடமிருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பிச்செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்றும் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி 18 வயதுடையவர் என்றும் அவர் முன்னதாக துப்பாக்கி, தலைக்கவசம் மற்றும் தோட்டாக்களுடன் சமூகவலைத்தளத்தில் படங்களை பதிவிட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் இந்த ஆண்டு கல்வி நிலையங்களில் நடந்த இரண்டாவது துப்பாக்கி சூடு இதுவாகும். இதற்கு முன்னர் ரஷ்யாவின் கஸான் நகரிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த மே மாதத்தில் 19 வயதான இளைஞரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தையடுத்து, ரஷ்யாவின் துப்பாக்கி பயன்பாடு தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.