எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும். தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் கட்சிகளால் ஐ.நா சபைக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் ஏற்கனவே பேசப்பட்டு முடிந்திருக்கின்றது. அது தொடர்பாக விரிவாக பேச விரும்பவில்லை. கூட்டமைப்பை உருவாக்கிய பொறுப்பு எங்களையும் சார்ந்திருக்கின்றது. அது மக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்டது. அதனை சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எமது மக்கள் திண்டாடி கொண்டிருக்கும் இந்த சூழலில் மாறிமாறி நாங்கள் கருத்து சொல்வதை விரும்பவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும். எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும். தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது.
தனிப்பட்ட முறையில் மாறி மாறி கருத்துக்களை சொல்வதால் மக்கள் வெறுப்படைகின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற விடயத்தினை கடந்த தேர்தல் மூலம் மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர். பதில் சொல்லாமல் விடுவதால் அந்த விடயத்திற்கு ஒத்துப்போவதாக யாரும் கருதமுடியாது. எனவே எமது தலைவர்கள் விட்டுச்சென்ற பணியினை தொடர்ந்து முன்னெடுப்போம்.
இதேவேளை ஜிஎஸ்பி பிளஷ் வரிச்சலுகையினை பெற்றுகொள்வதற்கான யுக்தியாகவே கோட்டாவின் ஐநா உரையை பார்கின்றேன். இலங்கையில் வாழும் அனைத்து இனமும் சமம் என்று அவர் தெரிவித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டு வருகின்றார். தான் சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றேன் என்றார்.
அத்துடன் தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் இராணுவபிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத இக்கட்டான நிலையில் தமிழினம் இருக்கின்றது. எனவே இனங்கள் அனைத்தும் சமன் என்று தெரிவிப்பதை ஏற்க முடியாது. அது உண்மைக்கு புறம்பானது. காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்கமுடியும் என தெரிவித்ததன் மூலம் அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஏற்றுள்ளார். அப்படியானால் படுகொலை செய்தவர்களுக்கு என்ன தீர்ப்பு. அவர்களுக்கான நீதி என்ன. கொலை செய்தவர்களை தண்டித்த பின்னரே பத்திரம் வழங்க முடியும். அவர் இராணுவத்தை காப்பாற்றும் ஒரு நிலைப்பாட்டினையே கொண்டுள்ளார். எனவே அந்த கூற்று எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக உள்ளது.
இன்று விடுதலை புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்தால் கூட கைது செய்வதற்கான நிலமை பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக உருவாக்கப்பட்டுள்ளது. அது மோசமாக எமது இளைஞர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கின்றது. எனவே அவரது உள்ளக பொறிமுறை என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர் முழுக்க முழுக்க ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விடயத்தினையே தனது உரையில் முன்வைத்துள்ளார். அது நம்ப முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது முழுக்க முழுக்க சுயநலத்தின் உரையாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு பெறுமதி மிக்க எங்களது உயிர்களை துச்சமாக மதித்துள்ளார்.
அத்துடன் தவத்திரு அகத்தியர் அடிகளாரும், திருகோணமலை மாவட்ட ஆயரும் இணைந்து வடக்கு கிழக்கில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து மக்களின் பிரச்சினைகளை ஒருமித்து கையாள்வதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது. அதனை நாம் வரவேற்கின்றோம். ஒற்றுமை முக்கியம் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி எங்களது இனத்தின் பிரச்சினையை உலகத்திற்கு சொல்லுகின்ற ஒரு வாய்ப்பை இந்த முயற்சி ஏற்படுத்தும்.
இந்த விடயத்தில் ஒரு ஆலோசனையை சொல்ல விரும்புகின்றேன். வடக்கு– கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் சகோதரர்களுடைய பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது முஸ்லிம் தலைவர்களையோ இணைந்து கொள்ள வேண்டும். இரண்டாவது மலையகம் சம்மந்தமாக மக்கள் படுகின்ற துன்பங்களை வெளியில் கொண்டு வருகின்ற மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த விடயத்தில் உள்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கின்றேன் என்றார்.