கொழும்பு இராணுவ வைத்தியசாலைகளில் போடும் பைசர் தடுப்பூசியை வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலே போடுவது பலருக்கு வாய்ப்பாகுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று (30) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணங்களை தாண்டிச் செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அவ்வாறு செல்வதாக இருந்தால் பல்வேறுபட்ட அனுமதியைப் பெற்று செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. ஆகவே வெளிநாடுகளிற்கு செல்வோருக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலகுவாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
மாகாணங்களை தாண்டி பிரயாணம் செய்ய முடியாத சூழலில் இவ்வாறு கொழும்புக்குச் சென்று தடுப்பூசியை பெறும் நடவடிக்கை சிறந்த ஒன்றாக இருக்க முடியாது. ஆகவே இங்கு எவ்வளவு மாணவர்கள் தடுப்பூசிக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்களோ அவர்களுக்குரிய தடுப்பூசிகளை உரிய பகுதிகளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆகவே, இலங்கை அரசாங்கம், சுகாதார பிரிவு இதிலே தலையிட்டு வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் தடுப்பூசி மையங்களை உருவாக்குவதன் மூலம் குறித்த மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலகுவாக இருக்கும்.
வடமாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மாணவர்கள் நலன் கருதி தடுப்பூசியை வடக்கு மாகாணத்தில் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.