09

09

நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்ட தலிபான்களின் துப்பாக்கியை கண்டு அசராத பெண் – வைரலாகும் படம் !

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்துக்கு எதிராக அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் சட்ட விரோதமானவை என்று தலிபான்கள்  தரப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களால் மக்களுக்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் மோதல் நிலவி வருகிறது.

குறிப்பாக பல பெண்கள் களத்துக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இப்படி காபூல் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் அந்நாட்டுக் குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காபூல் போராட்டத்தின் போது தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், களத்தில் இருந்தப் பெண்ணை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளார். அதற்கு சற்றும் அசராமல் அந்தப் பெண், நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். இது குறித்தான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோட்டாபாயராஜபக்ஷ பதவியேற்றதால் தமிழ் இளைஞர்களை கடத்தி சித்திரவதை செய்யும் இலங்கை பொலிஸாரும் இராணுவமும் – வெளிவந்துள்ள அறிக்கை !

தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை பொலிஸாரும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்தது சர்வதேச விசாரணையாளர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடம் அறிக்கைகளை பதிவு செய்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 நவம்பரில் கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அதிகமானோர் இந்த ஆண்டு நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்றும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேநந்தல்கள் மற்றும் காணாமல் போனோருக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெனீவாவில் இலங்கையை பற்றி விவாதிக்கும் போது பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறல் வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

பெண்கள் கிரிக்கெட் விளையாடினால் உடல் தெரியும் என்ற தலிபான்களுக்கு அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை கொடுத்த பதிலடி !

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்களை கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை செய்தால், ஆப்கான் ஆடவர் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசு அமைக்கவும் முடிவு செய்து அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே பெண்களுக்கு உரிமைகள் முழுமையாக வழங்கப்படும் என அறிவித்திருந்த தலிபான் தீவிரவாதிகள், திடீரென பெண்கள் அரசியலில் பங்கேற்கத் தடை விதித்துள்ளனர். பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்து, கிரிக்கெட் விளையாடவும் அனுமதி மறுத்துள்ளனர்.

தலிபான்கள் தீவிரவாத அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் துணைத் தலைவர் அஹமத்துல்லாஹ் வாசிக் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது. கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல” எனத் தெரிவித்தார்.

ஆனால், வரும் நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணி ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஆப்கனில் மகளிர் கிரிக்கெட் விளையாடத் தலிபான்கள் தடை விதித்தால், ஆடவர் அணியுடன் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை  வெளியிட்ட அறிவிப்பில், “மகளிர் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் சபைக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கண்ணோட்டம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் பெண்களும் கிரிக்கெட் விளையாட ஒவ்வொரு அளவிலும் ஆதரவு தருவோம்

ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. பெண்கள் கிரிக்கெட்டைத்தலிபான்கள் தடை செய்தால், ஹோபர்ட்டில் நவம்பர் மாதம் ஆப்கன் ஆடவர் அணியுடன் ஆஸ்திரேலிய அணி, விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதைத் தவிர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சார்ட் கோல்பெக் கூறுகையில், “ பெண்கள் கிரிக்கெட் விளையாட தலிபான்கள் தடை விதித்திருப்பது ஆழ்ந்த கவலையளிக்கிறது. பெண்கள் பங்கேற்பு இல்லாமல் எந்த விளையாட்டையும் ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது.

சர்வதேச விளையாட்டு அமைப்பு, குறிப்பாக ஐ.சி.சிஅமைப்பு தலிபான்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஐசிசி செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்த செய்தி கவலையளிக்கிறது. இந்தத் தடையின் தாக்கம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு வளர்வதில் சிக்கல் ஏற்படுத்தும். இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக் டொலர் – 3 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கும் சீனா !

ஆப்கானிஸ்தானுக்கு 3 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளையும், 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக் டொலர்) மதிப்புள்ள அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் குறித்து ஆப்கானிஸ்தானை அண்மித்துள்ள ஏனைய நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை அறிவித்துள்ளார்.

இதன்போது அவர் தலிபான்களால் நிறுவப்பட்ட அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாக இருப்பதால் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களிடம் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளும் கொவிட் -19 தொற்றுநோய் தடுப்பை வலுப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு உதவுதல், எல்லை துறைமுகங்களை திறந்து வைப்பது, அகதிகள் மீதான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வாங் யி வலியுறுத்தினார்.

அதேநேரம் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தவும் இல்லாதொழிக்கவும் தலிபான்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்லும் பயங்கரவாதக் குழுக்களைக் கைது செய்து ஒழிக்க உளவுத்துறை பகிர்வு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துமாறும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆப்கானிஸ்தானில் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் என்பதால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க முழு கடமையையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.

“மாவை ஒரு விசப்பாம்பு. யார் செத்தாலும் அவருக்கு வேண்டியது தலைமைப்பதவியே.” – வீ.ஆனந்தசங்கரி

“விசப்பாம்பு போன்று செயற்பட்டு தனது சுயநலனிற்காக தமிழர் விடுதலைக்கூட்டணியை உடைத்தது சேனாதிராஜா.” என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது ,

இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசு கட்சி தனித்து பயணிக்கக்கூடியதான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாதக பாதக நிலை தொடர்பில் ஊடகவியலாளர் அவரிடம் வினவினார், அதற்கு பதில் அளித்த

வீ.ஆனந்தசங்கரி,இதில் ஒரு நன்மை இருக்கின்றது. இதனுடன் தமிழரசு கட்சியின் கதை முடியும். ஏனெனில் தமிழர் விடுதலைக்கூட்டணி என 18பேர் நாடாளுமன்றில் இருந்தனர். தனது சுயநலனிற்காக தமிழர் விடுதலைக்கூட்டணியை உடைத்தது சேனாதிராஜா.  இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அவரை இரண்டு தடவை தேசியல் பட்டியல் ஊடாக நானே நியமித்திருந்தேன்.

நீண்ட காலத்தின் பின்னர் யாழ் மாநகர சபை தேர்தலிற்கு அரசாங்கம் அறிவித்தலை விடுக்கின்றது. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்த சேனாதிராஜா தேர்தல் கேட்பதெனில் கேட்கலாம் என கொழும்பிலிருந்து தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது அவர் தான் கேட்க முடியாது என தெரிவித்திருந்தார்.

திருமதி யோகேஸ்வரன் கேட்பதற்கு தயாராக உள்ளார். நீங்கள் கேட்காது விட சம்மதமா என அவரிடம் கேட்டபொழுது சம்மதம் தெரிவித்தார். குறித்த தேர்தலிற்கான நோட்டீசுகளை அச்சடிப்பதற்கு சிவபாலன் சென்றபொழுது அவருடன் சென்ற சேனாதிராஜா குறித்த பிரதியில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர் என்ற பதத்தை நீக்குமாறு கூறியிருந்தார்.

ஆரம்பத்திலேயே விசப்பாம்பு போலவே அவர் எம்முடன் பழகியுள்ளார். ஆயினும் ஆனந்தசங்கரிதானே தலைவர் எனவும் அது அவ்வாறே இருக்கட்டும் எனவும் தெரிவித்து அச்சுபிரதிக்காக கையளித்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் மறுநாள் நோட்டிஸ் கிடைக்கும்பொழுது அது நீக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் முகுந்தன் அதில் தலைவர் என்ற பதத்தினை கையினால் எழுதியிருந்தார். அவ்வாறானவர்தான் சேனாதிராஜா.

சிவசிதம்பரத்தின் மறைவுக்கு பின்னர் தலைவர் பதவிக்கான தேர்வு இடம்பெற்றபொழுது அந்த தேர்வில் நானே தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் குறித்த கூட்டத்திற்கு சேனாதிராஜா மாத்திரமே சமூகமளித்திருக்கவில்லை. அவர் தலைமை பதவிக்காகவே அன்றிலிருந்து இன்றுவரை செயற்படுகின்றார். அமிர்தலிங்கம் செத்தால் என்ன, ஆனந்தசங்கரி செத்தால் என்ன. அவருக்கு வேண்டியது தலைமை.

இன்று இருக்கின்ற பிரச்சினை என்னவெனில், பெரிய துரோகம் செய்தவர்கள் எல்லோரும் ஒன்றாக வந்தார்கள். இன்று அவர்கள் பிரிந்து உள்ளனர். செல்வம் அடைக்கலநாதன் யார்? தர்மலிங்கத்தின் மரணத்திற்கு காரணம் செல்வம் அடைக்கலநாதன். ஆனால் தர்மலிங்கத்தின் மகனும், செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திடுகின்றனர் பதவிக்காக.

தர்மலிங்கத்தின் மகனே தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அமைப்பின் தலைவர் சித்தார்த்தன். சித்தார்த்தனும், மன்னாரில் தூள் வித்தவரும்தான் இன்று கட்சி தலைவர்கள். மன்னாரில் தூள் வித்தமை தொடர்பான பத்திரிகை செய்திகள் என்னிடம் கைவசம் உள்ளது. யாரை எடுத்தாலும் சரியில்லை என்றவர்கள் இன்று சம்பந்தனும் சேனாதிராஜாவும்தான் சரியென்றால் அவர்களின் வரலாற்றை எடுத்து பார்க்க வேண்டும்.

இந்த நாட்டிலே தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட அழிவுகளிற்கு முக்கிய காரணம், இந்த நிலை இவ்வாறு தொடர்வதற்கு முக்கிய காரணம் இருவரேயாகும். எங்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி எனது நீண்டகால அனுபவத்தின்படி இந்திய முறைமையை ஒத்ததேயாகும். அதற்கு இன்று ஜனாதிபதி உள்ளிட்ட பலருடனும் பேசியிருக்கின்றேன்.

கடந்த காலத்தில் கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை இவர்கள் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. இறுதியில் 3 இலட்சம் மக்கள் இறந்ததுதான் மிச்சமானது. அந்த 3 இலட்சம் மக்கள் இறந்தமைக்கு காரணமானவர்கள் இவர்கள். எந்த நேரமும் அரசாங்கத்துடன் பேசி நிறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருந்தது.

இவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களை தட்டிக்கழித்தனர். ஆனால் ஜெனிவா தொடர்பில் பேசுகின்றனர். முதல் முதலில் ஜெனிவா தொடர்பில் பேசும்பொழுது, அங்கு சென்று என்னத்தை பேசுவது என்றார்கள். நாங்கள் போக வேண்டுமோ எனவும், போகாவிட்டால் நாங்கள் துரோகிகளோ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்தனர்.
ஜெனிவா போகாவிட்டால் நாங்கள் துரோகியா என சிறிதரன் சொல்லியிருந்தார். அயல்நாடுகள் அங்கு போகவேண்டாம் என கூறியதாக சேனாதிராஜா கூறியிருந்தார். 4 கட்சிகள் ஒன்றாக இருந்தார்கள். இப்பொழுது, அவர்கள் பிரிந்து உள்ளனர். அண்மைய செய்திகள் என்னவெனில் அந்த நான்கு பேர்தான் தேசிய அமைப்புக்கள் என குறிப்பிடப்படுகின்றது.

சம்பந்தனுக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும் ஜெனிவா விடயம் தொடர்பில் கையாள்வதற்கான எந்த உரிமையும் கிடையாது மாத்திரமல்ல கடமையும் கிடையாது. ஏனெனில் அவர்கள் இதுவரை காலமும் செய்து வந்தது அவ்வாறான வேலையாகும் எனவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

“தற்போதைய அரசு வடக்கு – கிழக்கு என்ற பிரிவினை பார்க்கவில்லை.“ – யாழில் நாமல் !

“தற்போதைய அரசாங்கமானது வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரிவினையை பார்க்காது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.” என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழிற்கு இன்றைய தினம் (வியாழக்கிழமை) விஜயம் செய்துள்ள அவர், அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்டதன் பின்னர், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

அத்தோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமானது வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அது பல மில்லியன் ரூபாய் மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட்டு வருகின்றது. அதுபோல பல்வேறுப்பட்ட குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

எனவே தற்போதைய அரசாங்கமானது வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரிவினையை பார்க்காது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

எனினும் தற்போது எமக்கு கொரோனா வைரஸ் என்ற ஒரு பிரச்சினை காணப்படுகிறது. எனினும் அந்த கொரோனா வைரஸ் என்ற தடையையும் தாண்டி அதனை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தோடு இந்த அபிவிருத்தியினையும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

அத்தோடு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததாக தற்போது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் தற்போது நாட்டின் ஜனாதிபதி தலைமையில் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

உலக தரப்படுத்தலில் இலங்கையின் பேராதனை பல்கலைகழகத்துக்கு மேலும் ஒரு மகுடம் !

இலங்கையின் பல்கலைகழக தரப்படுத்தலின் அடிப்படையில் தொடர்ச்சியாக பேராதனைபல்கலைகழகம் முன்னிலையில் இருந்து வருவதுடன் சர்வதேச அளவிலும்  இந்த பல்கலைகழகம் பெயர்பெற்ற பல்கலைகழகமாக உள்ளது.

இந்த நிலையில் Times Higher Education World Ranking – 2022 என்றழைக்கப்படும் தரப்படுத்தலின் பிரகாரம், உலகின் முதன்மையான 500 பல்கலைக்கழகங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தையும், இலங்கை பல்கலைக்கழகங்களில் முதலாம் இடத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இந்த தரப்படுத்தலானது ஆய்வுப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தர வரிசையை உருவாக்குகிறது.

பல்கலைக்கழகங்களின் ஆய்வை மையப்படுத்திய நோக்கங்கள், கற்றல் பின்புலம், தொழிற்துறை வருமானம், சர்வதேச ரீதியிலான தோற்றப்பாடு முதலான விடயங்களின் அடிப்படையில் தரப்படுத்தல் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

மாணவர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழக பிரதானிகள் ஆகியோருடன் அரசுகள் மற்றும் கைத்தொழில் அமைப்புக்களின் நம்பிக்கையை வென்ற முழுமையான மற்றும் நடுநிலையான ஒப்பீடுகளை மேற்கொள்ளக்கூடிய செயலாற்றுகை குறிக்காட்டிகளை அமைப்பு பயன்படுத்துகிறது.

 

இந்திய 20 ஓவர் அணியில் மீள இணையும் அஸ்வின் – ஆலோசகராக முன்னாள் தலைவர் டோனி !

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒக்டோபர் 17-ந் திகதி முதல் நவம்பர் 14-ந் திகதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் இந்திய அணிக்கு 2 உலக கோப்பை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) மற்றும் ஐ.சி.சி. சாம்பியன் டிராபி கோப்பையை (2013) பெற்றுக்கொடுத்து இருக்கிறார்.

34 வயதான அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சியும், நன்றியும் மட்டுமே இப்போது என்னை வரையறுக்கும் இரண்டு வார்த்தைகளாகும்.

இவ்வாறு அஸ்வின் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

அவர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார். அஸ்வின் 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தற்போது திகழ்கிறார். அவர் 79 டெஸ்டில் ஆடி 413 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“பொறுப்புடன் செயற்படுங்கள். எந்த நேரத்திலும் நிலை மாறலாம்.” – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை !

““பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. ” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. புதிய வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், மக்களின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை. இலக்கை நோக்கி எம்மால் பயணிக்க முடிந்த போதிலும் இலக்கைத் தக்கவைக்க முடியவில்லை. அதற்கு மக்களின் செயற்பாடுகளே காரணமாகும். மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எம்மால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சுகாதார அமைச்சு, சுகாதாரப் பணியகம் மூலமாக பல்வேறு சுகாதார வழிகாட்டிகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை முழுமையாகப் பின்பற்றுவதில் சந்தேகம் உள்ளது. ஒரு சிறிய குழு தவறு செய்கின்றது.

இதனால் பெருமளவிலான மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை சகலரும் கவனத்தில்கொள்ள வேண்டும். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால், எப்போதும் மீண்டும் மோசமான கொரோனாத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் போராடுகின்றோம் என்பதை சகலரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

“இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்க வேண்டும்.” – அலைனா டெப்லிட்ஸ்

“இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்க வேண்டும்.” என பதவியில் இருந்து விலகவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ள போது ,

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது. அனைவரும் மனித உரிமைகளை மதித்து செயற்பட வேண்டும்.

ஜனநாயக அரசாங்கமொன்று அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்பதனால் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் உள்ள மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் நல்லிணக்க முயற்சிகள், நிலைபேறுகால நீதிப் பொறிமுறையையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அலைனா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கக்கூடிய கொள்கைகளை வகுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.