“நாம் எமது சம்பளங்களை கொடுத்து அர்ப்பணிப்பு செய்துள்ளோம். அது போல இரண்டு வேளை சாப்பிட்டு மக்கள் அர்ப்பணிப்பு செய்ய வேண்டுமென ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருந்த போது ,
நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் மூன்று வேளை சாப்பிட்ட மக்கள் இரண்டு வேளை சாப்பிட்டு அர்ப்பணிப்பு செய்ய நேரிடலாம். நாம் எமது சம்பளங்களை கொடுத்து அர்ப்பணிப்பு செய்துள்ளோம். 2000 ரூபா கொடுப்பனவு போதுமானதல்ல என்பது எமக்குத் தெரியும், அரசாங்கத்திடம் இருந்தால் இரண்டாயிரம் இல்லை இருபதாயிரம் வழங்குவோம்.
எனினும், தற்பொழுது பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டு வேளை உணவு உட்கொண்டு மக்கள் செய்யும் அர்ப்பணிப்பு எதிர்கால தலைமுறையின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும். நாட்டின் வருமானம் இல்லாது போனால் அரசாங்கத்தினால் எதையும் செய்ய முடியாது.
மக்கள் எதிர்பார்த்த எல்லா விடயங்களையும் செய்ய முடியாமைக்காக நாம் வருந்துகின்றோம். நாம் அனைவரும் அர்ப்பணிப்பு செய்வதன் மூலம் முன்னோக்கிச் செல்ல முடியும் என கருதுகின்றேன். எதிர்க்கட்சி உள்ளாடைகளை பிடித்துக் கொண்டு கூச்சலிடுவதாகவும், அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் எதனையும் செய்யவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.