21

21

கனடா பாராளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி – மீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ருடோ !

கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை.

ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி 155 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இதனால் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ நீடித்தார்.

இதற்கிடையே பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்துவதை விரும்பாத ஜஸ்டின் ட்ருடோ முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 15-ந்திகதி கனடா பாராளுமன்றம் கலைக்கப்பட்டு செப்டம்பர் 20-ந்திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஜஸ்டின் ட்ருடோ (லிபரல் கட்சி), எரின் ஓடூல் (கன்சர்வேட்டிங் கட்சி) ஆகியோர் போட்டியிட்டனர்.

கனடா பாராளுமன்ற தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றது. இதனால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை பெற்றது. பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் அடுத்த 4 ஆண்டுகள் சிறுபான்மை அரசின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார்.

தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும் போது, “நன்றி கனடா. உங்கள் வாக்கை அளித்ததற்காக, லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரகாசமான எதிர்காலத்தை தேர்ந்தெடுத்தற்காக நன்றி. நாம், கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தை முடிக்க போகிறோம். நாம் கனடாவை முன்னோக்கி கொண்டு செல்ல போகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

மரணச்சான்றிதழ் வழங்குவதாக ஜனாதிபதி கூறுவதனூடாக படுகொலைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா..? – நாடாளுமன்றில் சிறீதரன் கேள்வி !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், ஓமந்தையில் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ் வழங்குவது என்பது அவர்கள் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்பதையா எடுத்துக் காட்டுகிறது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நின்றிருந்தவர்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் 1985ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். அதில் 10 பேர் மரணித்தனர். அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பின்னர் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தனர்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும், அவரது சகாக்களும் துப்பாக்கியை காண்பித்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியிருந்தனர்.தங்களுடைய சப்பாத்துக்களை நக்கி சுத்தம் செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளனர். துப்பாக்கி அல்லது வெடி பொருட்களை சாதாரண ஒருவர் வைத்திருந்து கைது செய்யப்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், லொஹான் ரத்வத்தேயின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால், அதில் தமிழ் கைதிகள் மரணித்திருப்பார்களாயின், லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிருப்பார்கள். தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் காலம் காலமாக தொடர்ச்சியாக வன்முறை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லொஹான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து சுட்டு கொள்வேன் என துப்பாக்கியால் விரட்டிய செயற்பாடு அரசின் எதேச்சதிகார செயற்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு இந்த நாட்டின் சட்டத்தையும் நீதியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர், கொழும்பிலிருந்து அனுராதபுரத்துக்கு ஹெலியில் பயணித்து, தனது நண்பர் குழாமுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்ததோடு, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை மிலேச்சத்தனமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளமை கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
இச் செயற்பாடானது, இந்த நாட்டின் சட்டம், நீதி, இனநல்லிணக்கம் என்பவற்றை கேள்விக்குட்படுத்துவதோடு, கடந்தகாலங்களில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அப்பாவித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புச் சம்பவங்களை மீள நினைவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

1983 ஆம் ஆண்டு கொழும்பின் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையான வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்து 53 தமிழ் அரசியல் கைதிகள், சக சிங்களக் கைதிகளால் குத்தியும், வெட்டியும் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.2000.10.25 ஆம் திகதியன்று மத்திய மாகாணத்தின் பிந்துனுவேவா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் காடையர் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2012.07.04 ஆம் திகதி வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளான நிமலரூபன், டில்றுக்சன் ஆகிய இரு தமிழ் அரசியல் கைதிகளும் சிறைச்சாலைப் பொலிசாராலும், இராவத்தினராலும் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான சிறைச்சாலைப் படுகொலைகள் அனைத்தும் தமிழ் அரசியல் கைதிகளை இலக்குவைத்து தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளிடம் மிக மோசமான அதிகாரத் தொனியோடு, இனவாதத்தைக் கக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளமை, தமிழ் அரசியற் கைதிகளின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

லொஹானின் இராஜினாமா வெறும் கண்துடைப்பு. ஆகையால் அவரிடமிருக்கும் சகல பதவிகளையும் அபகரித்து, அவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி மக்களை படுகொலை செய்தமையானது ஒரு இன அழிப்பின் அதியுச்ச செயற்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இன்றைய பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.

“மதுபானக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது பேய்களாம்.” – மைத்திரிபால சிறீசேன

இலங்கையில் ஜீலைமாதம் முதல் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்திருந்த நிலையில் நாட்டை முடக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த போதும் அரசு கடந்த மாதமே ஊரடங்கை அமுல்படுத்தியது.

தொடர்ந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட போதும் மக்கள் பெரும்பாலும் வழமையான நாட்கள் போலவே இயங்குவதாக தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இது தொடர்பில் அரசு ஆக்கபூர்வமான எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை னஎன எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வந்த நிலையில் அரசு மதுபானக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளதால் அங்கு கூட்டம் அலைமோதுகின்றது. இதனால் புதிய கொரோனா அலை உருவாக வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டது.

எனினும் அரசதரப்பில் மதுபானக்கடைகளை திறக்க தாம் அனுமதி வழங்கவில்லை எனக்கூறப்பட்டது. சுகாதாரத்துறையினரே அந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பில் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ மதுக்கடைகளைத் திறக்க  ‘பேய்’ மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளைத் திறக்க யார் உத்தரவிட்டார்கள் என்பது சரியாகத் தெரியாவிட்டால் ‘பேய்’ அதற்கான அனுமதியை வழங்கி இருக்கலாம் எனவும் அரசுக்கு பணம் தேவைப்படுவதால் மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

செல்வந்தர்களுக்கு மதுபானங்களை இணையவழி ஊடாக வீட்டுக்கே கொண்டுவரலாம். ஆனால் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் அன்றாடம் மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு சிரமப்படுபவர்களே இன்று மதுக்கடைகளுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

எனவே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயலாகுமெனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

“தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் தயவுசெய்து உங்கள் வீட்டிற்கு திரும்புங்கள்.” – எம்.ஏ.சுமந்திரனிடம் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை !

“ரோம் சாசனத்தில் கையெழுத்திட இலங்கையை வலியுறுத்துங்கள். இல்லையேல் தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அங்கு மேலும் பேசிய அவர்கள்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல. தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு கொண்டு வருவதன்  ஊடாக சுமந்திரன் தனது வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.

அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம். சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இந்த ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல், நீதி வழங்கப்படாத நிலமையே உள்ளது.  எனவே, நாங்கள் இந்த விடயத்தில் சுமந்திரனை மழுப்ப வேண்டாம் என கேட்கிறோம். சில செயல்களைக் செய்து காட்டுங்கள். ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோருவதற்கு உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.

நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

காணமலாக்கப்பட்டவர்கள் எங்கே..? – மரணசான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி !

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் இன்று 1675 ஆவது நாளாக எமக்கு நீதி கோரிய தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் உள்ளோம். நூற்றுக்கு மேற்பட்ட, எம்முடன் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்த சகோதர சகோதரிகளை இழந்து விட்ட நிலையிலும், எமக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்ற முனைப்புடன் உள்ளோம்.

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை ஜனாதிபதி அங்கு ஐ.நா. பொதுச் செயலர் அன்ரனியோ அவர்களுடன் நேற்று முன்தினம் (19.09.2021) விசேட சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் அங்கு இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களும், நட்டஈடும் கொடுப்பது பற்றி கூறியிருந்தார். அத்துடன் உள்ளகப் பிரச்சனைகள் உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தோம்.

எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் நேரடியாக சர்வதேசத்தினாலேயே குற்றம் சாட்டப்பட்ட, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும்படி ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட  சிறிலங்காவின் ஜனாதிபதியை,  அதே ஐ.நா மன்றில் சர்வதேச சமூகம் இன்று வரவேற்று கைலாகு கொடுப்பதை நாம் கவலையுடனேயே உற்றுநோக்குகின்றோம். வேறு வழியின்றி எமது கடைசி நம்பிக்கையாக சர்வதேச நீதி பொறிமுறையே இருப்பதால், இந்த இராஜதந்திர சம்பிரதாயங்களையும் தாண்டி சர்வதேசம் பாதிக்கப்பட்ட எமக்கு நீதியை பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம். இவ்விடயத்தில் ஐ.நாவின் செயலாளர் உட்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் நீதி பொறிமுறை தொடர்பாக கேள்வி எழுப்பாமை பாதிக்கப்பட்ட எமக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது.

2009, மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து பாதுகாப்புத் தரப்பினரதும், அரசினதும் உறுதிமொழிகளை நம்பி எமது உறவுகளைக் கையளித்தோம். எம் முன்னிலையில் எமது உறவுகள் சரணடைந்தனர். கண்கண்ட சாட்சிகளான நாம், எமது உறவுகளை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு நாளாவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலோ அல்லது அவர்களுடன் உறவு பேணியிருந்தாலோ சரணடையுங்கள் அல்லது எம்மிடம் ஒப்படையுங்கள், நாம் புனர் வாழ்வளித்து மீண்டும் உங்களிடம் ஒப்படைப்போம் என்று உறுதியளித்த படையினரதும், அரசினதும் பாதுகாப்புச் செயலர் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.

நாம் எமது உறவுகளை உயிருடனேயே கையளித்தோம். எனவே அவரும் எங்கள் உறவுகளை புனர்வாழ்வளித்து எம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். மாறாக உள்நாட்டிலும், ஐ.நா. தலைமையகத்தில் வைத்தும் மரணச் சான்றிதழும், நட்டஈடும் கொடுத்து காணாமலாக்கப்பட்டோர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறுவது புத்த தர்மத்துக்கு ஏற்புடையதா? இக்கூற்றை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு புத்தபெருமானின் போதனைகளை பின்பற்றும் மற்றும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் இதைக் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம்.

மேலும் உள்ளகப் பொறிமுறையில் எமது பிரச்சனையைத் தீர்ப்பதென்பது கடல் வற்றிக் கருவாடு சாப்பிடுவதற்கு ஒப்பானது. இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதோ அரிது. அப்படியிருந்தும் அரிதாக ஓரிரு வழக்கில், நீதி வழங்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் ஜனாதிபதி அவர்களுக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுவார். அத்துடன் அவர்களை மேலும் இது போன்ற கொலைகளைச் செய்யத் தூண்டும் விதத்தில் ஊக்குவிப்பாகப் பதவி உயர்வும் வழங்குவார்கள். உதாரணத்துக்கு அண்மையில் மிருசுவில் 8 பேர் கொலையில் மரண தண்டனை விதிக்கப் பெற்ற சுனில் ரத்னாயக்க.எனவே எமக்கு மரணச் சான்றிதழும் வேண்டாம், காணாமல் போனோர் அலுவலகமும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் திருப்பித் தருவதாகக் கூறி பொறுப்பேற்ற எம் உறவுகள் எமக்கு வேண்டும். அதற்கான நீதி இழுத்தடிப்பு இல்லாமல் வழங்கப்பட ஐ.நா.வால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாத விடயம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.” – தினேஷ்குணவர்த்தன

உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாத நிலை இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாமை நிலைமை தொடர்பில் தீர்வை காண்பதற்கு பரீட்சை திணைக்கள ஆணையாளருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவிததார்.

மட்டக்குளி கொலை வழக்கில் இராணுவத்தை சேர்ந்த 13 பேர் கைது !

மட்டக்குளியில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் தனது கணவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 06 பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரின் கணவரின் சடலம் கடந்த மாதம் 20 ஆம் திகதி மட்டக்குளி காக்கை தீவின் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது

நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு 2 அமைச்சர்களால் உயிர் அச்சுறுத்தல் !

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டமைக்கு இரண்டு அமைச்சர்கள் பிரச்சினைக்குள்ளாகி என்னைப் பதவிலிருந்து விலக்கத் திட்டமிட்டுள்ளனர் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித் துள்ளார்.

எனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனது உயிரைக் காப்பாற்றப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைப் பூடு மோசடிக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டமையே தனக்கு ஏற்பட்ட இந்த அழுத்தத்திற்கு உடனடிக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தான் இராஜினாமா செய்த பிறகு அந்தப் பதவிக்கு உதவியாளர் ஒருவரை நியமிக்கத் தயார் என தான் அறிந்ததாகவும் குறித்த இரண்டு அமைச்சர்களின் அதிகாரத்தின் கீழ் இந்நிறுவனம் தனியார் நிறுவனமாக மாற்றப்படலாம்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப்பிரமாணம் !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்திருந்தது.

ஜயந்த கெட்டகொட, 2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன், பின்னர் அந்த நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தேசியப்பட்டியில் ஊடாக நாடாளுமன்றத்துக்கு நுழைவதற்கு வழி வகுக்கும் வகையில் ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார்.” – ஆளுங்கட்சி உறுப்பினர் காட்டம் !

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அடிமட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளை ஒரு சில அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை பிரயோகித்து தாக்குவது வெறுக்கத்தக்க விடயமாகும். தற்போதும் இந்நிலையே காணப்படுகிறது.மக்களின் பிரச்சினைகளையும், ஊழல் மோசடிகளையும் சுட்டிக்காட்டும் போது ஆளும் தரப்பின் அரசியல்வாதிகள் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் எடுத்த தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அரசாங்கத்தையும்,கட்சியையும் சரத் வீரசேகர நெருக்கடிக்குள்ளாக்கினார்.

இப்பிரச்சினைகள் அனைத்தையும் ஜனாதிபதியிடம் ஆதாரபூர்வமாக குறிப்பிட்டுள்ளேன். விரைவில் சிறந்த தீர்மானம் கிடைக்கப் பெறும் என்றார்.