27

27

“ஆப்கானில் ஆண்கள் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ தடை.” – தலிபான்களின் புதிய சட்டம் !

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என்று முடி திருத்துவோருக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என முதலில் தெரிவித்த நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு விதித்தனர்.

மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளைத் திறந்த தலிபான்கள், மாணவிகள் குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. உயர்கல்விக் கூடங்களில் மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பறையும், இருதரப்பும் பார்க்காத வகையில் திரையிடப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 1996-ம் ஆண்டுதலிபான்கள் ஆட்சி வருமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் ஆப்கனின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்கள் தாடியை மழிக்கவோ அல்லது தாடியை ட்ரிம் செய்யவோ கூடாது என்று சலூன் கடைக்காரர்களுக்குத் தலிபான்கள்உத்தரவிட்டுள்ளனர். தலிபான்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சலூன் கடைக்காரர்கள், முடிதிருத்துவோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் ஹா நகரில் ஆலோசனை நடத்தினோம்.

அந்தக் கூட்டத்தின் முடிவில் ஆண்கள் வைத்திருக்கும் தாடியை மழிக்கக் கூடாது. அவர்களின் தாடியை ட்ரிம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. சலூன்களில் மேற்கத்தியப் பாடல்கள், மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கவிடக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

தலிபான்கள் நடத்தும் ஆட்சியில் தொடர்ந்து ஏராளமான மனித உரிமைகள் நடந்துவருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐ.நா., யுனெஸ்கோ போன்றவை கண்டித்து வருகின்றன . ஆனால், தலிபான்களின் செயல்கள் தொடர்கின்றன.

“ 2 மில்லியன் டொலர்களை பெறும் கிலென் மேக்ஸ்வெல் அறிவை பயன்படுத்துவதில்லை.” – வீரேந்திர சேவாக்

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி, 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்.சி.பி இந்த வெற்றியைப் பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஆஸ்திரேலிய வீரர் கிலென் மேக்ஸ்வெல். அவர் 37 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த கலக்கல் ஆட்டத்தால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், ‘மேக்ஸ்வெல்லுக்கு திறமை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அவர் அறிவை சில நேரங்களில் பயன்படுத்துவதே கிடையாது. மும்பைக்கு எதிராக அவர் அறிவை பயன்படுத்தி நன்றாக விளையாடினார்.
ஆட்டத்திற்குத் தகுந்தது போல அவர் தன் விளையாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார். அதனாலேயே பல போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிவிடுவார். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் மூலம் 2 மில்லியன் டாலர்களை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். ஆனால், அதற்கு ஏற்றது போல் விளையாடுகிறாரா என்பது கேள்விக்குறியே’ என்று கறார் கருத்து கூறியுள்ளார்.

கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு 40 இலட்சம் ரூபா நிதி !

கொவிட்-19 காரணமாக தாமதமடைந்துள்ள கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக இந்த முறை பாதீட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கு 40 இலட்சம் ரூபா நிதி பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர நாடு முழுவதும் சகல கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் தலா 30 இலட்சம் ரூபா ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதேச இணைப்புக் குழுவின் தலைவர் ஒருவருக்கு தமது தேர்தல் எல்லைக்குள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 10 கோடி ரூபாவும், பிரதேச அபிவிருத்தி குழுவின் உபதலைவருக்கு இந்த முறை பாதீட்டில் 2 கோடி ரூபாவும் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இலங்கையிடம் நிதியில்லை !

நாட்டில் அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தயாராகும் இலங்கை அணியினருக்கு உரிய கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அவர்களின் பயணத்துக்குத் தேவையான பணம் தற்போது இலங்கை மல்யுத்த கூட்டமைப்பின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

ஆனால் போட்டியில் கலந்து கொள்பவர்களின் கணக்கில் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டிருந்த போதிலும் இந்நாட்டிலுள்ள அந்த வங்கிகள் ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை அவற்றை வழங்கக் கடினமாக இருப்பதாக அவ்வங்கிகள் தெரிவித்துள்ளன.நாட்டில் தற்போதுள்ள அந்நியச் செலாவணி பற்றாக்குறையே இதற்குக் காரணம்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக 5500 டொலரை உலக சம்மேளனத்திற்குச் செலுத்த வேண்டும், அதன் முழுத் தொகையாக இலங்கை ரூபாவின் படி சுமார் 1.2 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் .

இலங்கை அணி அந்த நாட்டை அடையும் முன் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தவில்லை என்றால் இலங்கை அணி போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் இலங்கை மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

“இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” – ஜி.எல்.பீரிஸ்

“இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

இலங்கை மீதான மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சர்வதேச பொறிமுறைக்கமைய விசாரணை செய்வதற்கும், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இலங்கை மீதான மனித உரிமை மீறல் பிரச்சினைகளை உள்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எமது நாட்டு கலாசாரத்திற்கமைய யதார்த்த தீர்வுகளைப் பெறுவதற்கு கடமைபட்டிருக்கின்றோம். அந்தக் கடமைகள் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு கையளிக்க நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்.

வெளிநாட்டுப் பொறிமுறை என்பது எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதுடன், எமது நாட்டின் அரசியல் கட்டமைப்பிற்கும் எதிரானதாகும். அதேபோல ஐ.நாவின் சட்டம், சம்பிரதாயங்களுக்கமைய, சிறியதோ பெரியதோ என்ற வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் சமமாகப் பார்க்க வேண்டும்.

ஆகவே இலங்கையை விசேட இலக்காக நிர்ணயிக்கப்பட்டு எமது நாட்டிற்கு மாத்திரம் வரையறுக்கப்படுகின்ற பொறிமுறையை உருவாக்கி, சாட்சியங்களைத் திரட்டி, அடிப்படை ஒன்றை உருவாக்குவதற்கும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக இலங்கையை கொண்டுசெல்வதே சர்வதேச பொறிமுறையின் நோக்கம். எனினும் எமது நாட்டிற்கு எதிரான சாட்சிகள் அனைத்தும் முறையற்றே சேகரிக்கப்படுகின்றன.

இந்த சாட்சியங்களை யார் வழங்குகின்றார்கள்? அவர்களது அடையாளம் என்ன? உண்மையிலேயே தகவல்களை அளிக்கின்றார்களா? குறுக்குக் கேள்வி கேட்பதற்கும் உரிமையில்லை என்பதால் இயற்கைக்கு விரோதமான இந்த செயற்பாடுகளை ஏற்கமாட்டோம். இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சினைகள் இலங்கை காரணமாகவே ஏற்படுகின்றன என்பதை தெரிவிக்க முடியுமா?

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை பெற பணம் இல்லாமல் திண்டாடுகின்ற நிலையில், சிறிலங்கா மீது விசாரணை நடத்த பாரிய நிதியை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒதுக்கீடு செய்வது எந்த விதத்தில் நியாயம்..? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“என் தொடர்பான விமர்சனத்தை உறுதிப்படுத்தினால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.” – எஸ்.வியாழேந்திரன் காட்டம் !

“லொஹான் ரத்வத்தையினை செங்கம்பள விரிப்புடன் நான் வரவேற்றதை உறுதிப்படுத்தினால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை இன்று (திங்கட்கிழமை) காலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தினார்.

“எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள்.” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவி்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே  இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும்  கருத்து தெரிவித்த அவர்,

சமூக,சில ஊடகத்தளங்களில் வெளியான செய்திகளை பார்த்து நாடாளுமன்ற  உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சில கருத்துகளை கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது. முகப்புத்தகத்திலும் இணையத்திலும் வந்த செய்திகளைப்பார்த்து ஊடகசந்திப்பினை செய்யாமல் என்னிடம் கேட்டிருந்தால் நான் விளக்கமளித்திருப்பேன்.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கபில அத்துக்கொரல, இராஜாங்க அமைச்சர் லொகாத் ரத்வத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதிலக அவர்களும் மட்டக்களப்பு பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் 30இலட்சம் ரூபா நிதியொதுக்கப்படுகின்றது. வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்ட விடயத்தினை கட்சிசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி கிராம மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காகவும் அவர்கள் வருகைதந்திருந்தனர். அவர்கள் வருகைதந்த பின்னர் நானும் இந்த மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொழும்பு தலைமையகத்தினால் தீர்மானிக்கப்பட்டு அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.அந்த அடிப்படையிலேயே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தார்கள். இந்த நிலையில் ஒரு சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. வியாழேந்திரன்,சந்திரகுமார் ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தார். வந்தவர் வியாழேந்திரன், சந்திரகுமாருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுசென்றார்,வியாழேந்திரன் லொஹான் ரத்வத்தைக்கு செங்கம்பல வரவேற்பளித்தார் போன்ற குற்றச்சாட்டுகளை முகப்புத்தகங்கள் ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் முன்வைத்திருந்தார்.

இந்தவேளையில் நான் ஒரு பகிரங்க சவாலை விடுக்கின்றேன்.லொகான் ரத்வத்தை உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை நானோ சந்திரகுமாரோ தனிப்பட்ட ரீதியாக அழைத்து கூட்டம் நடாத்தவில்லை. தலைமைப்பீடத்தினால் தீர்மானப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை நாங்கள் அழைக்கவில்லை, லொஹான் ரத்வத்தைக்கு நான் செங்கம்பல வரவேற்பை வழங்கவில்லை. அவர் என்னுடனோ சந்திரகுமாருடனோ தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடவில்லை.கூட்டம் ஆரம்பித்து இறுதிநேரத்திலேயே நான் அதில் கலந்துகொண்டேன்.

தனிப்பட்ட ரீதியாக நானோ,சந்திரகுமாரோ லொகான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு அழைத்துவந்ததை நிரூபிக்கவேண்டும். செங்கம்பளம் விரித்தார்களா என்பதை நிரூபிக்கவேண்டும்,என்னோடும்,சந்திரகுமாரோடும் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொண்டார்களா என்பதை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு நிரூபித்தால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.அவ்வாறு நிரூபிக்காவிட்டால் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல்வாதிகளினால் அரசியலில் இருந்து ஒதுங்க முடியுமா என்று சவால்விடுகின்றேன்.

மட்டக்களப்பு மக்கள் மீது தங்களது வங்குரோத்து அரசியலை செய்வதற்காக,தங்களது கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்காக பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லமுடியாது.

வாளுடன் டிக் டொக் காணொளி செய்த 19 வயது இளைஞன் யாழில் கைது !

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறையினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் சுன்னாகம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.  அவரை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

“ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.” – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கும்போது ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டை பயன்படுகிறது. எனவே, இலங்கையைப் பொறுத்தமட்டில் சிறுவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் செயற்பாடு நடைமுறையில் இல்லை.

எனவே, தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளின்போது, அவர்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்கும்போது, அடையாள அட்டை இலக்கம் மற்றும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

இலங்கையில் 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக கொவிட் மரணங்கள் !

நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணமாகும். எதிர்வரும் வாரங்களில் இந்த மரண வீதம் மேலும் குறைவடையும் என அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ளவர்களில் 64 சதவீதமானோர் ஒரு தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டுள்ளனர். 52 சதவீதமானோர் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக் கொண்டுள்ளனர்.

20 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 13 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு கொவிட் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளை கேட்டுள்ளார்.

30 வயதிற்கும், 20 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 41 சதவீதமானோருக்கு முதலாவது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

“கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.” – விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுவதாக, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட தெரிவித்தார்.

எனவே சமூக ஊடகங்கள் அல்லது பிற ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களுக்கு பொதுமக்கள் ஏமாறாமல், கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கேட்டுக்கொள்கிறார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இந்த கருத்துக்களை தெரிவித்தார்.